Mission Impossible Trailer: வெளியானது மிஷன் இம்பாசிபிள் ட்ரெய்லர்... ஆக்ஷனில் மிரட்டும் டாம் குரூஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடித்துள்ள திரைப்படம் மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்.
மிஷன் இம்பாசிபிள் சீரிஸின் 7வது பாகமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டாம் குரூஸின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரெய்லர் ஹாலிவுட் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேபோல், மிஷன் இம்பாசிபிள் ட்ரெய்லருடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.
வெளியானது மிஷன் இம்பாசிபிள் ட்ரெய்லர்
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ் நடித்த டாப் கன் திரைப்படம் கடந்தாண்டு மே மாதம் வெளியானது. 170 மில்லியன் டாலர் செலவில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 7,500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்தது. அதேபோல், திரையரங்குகளைத் தொடர்ந்து அமேசான் ப்ரைமில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதன் தொடர்ச்சியாக டாம் குரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பார்ட் 1 படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் சண்டைக் காட்சிக்காக மிக மிக ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார். 500 ஸ்கை டைவ் உடன் 13,000 தடவை மோட்டார் பைக்கில் ஜம்ப் செய்து பார்ப்பவர்களையே மிரள செய்திருந்தார். எந்தவொரு சேஃப்டியும் இல்லாமல் பல அடி உயரத்தில் இருந்து அதள பாதாளத்தில் பைக்கில் குதிக்கும் டாம் குரூஸின் வீடியோ வைரலாகியிருந்தது.
மேக்கிங் வீடியோவே இப்படி மிரட்டல் என்றால் படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு லீட் கொடுக்கும் விதமாக தற்போது மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பார்ட் 1 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டாம் குருஸ் தனது டூவிலரை மலை உச்சியின் எல்லையில் நிறுத்தும் காட்சியில் தொடங்கும் இந்த ட்ரெய்லர், அடுத்தடுத்து பல ஆக்ஷன் காட்சிகளுடன் ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்கிறது.

இந்த ட்ரெய்லர் முழுவதும் டாம் குரூஸ் வழக்கம் போல ஓடிக்கொண்டே இருக்கிறார். சேஸிங் காட்சிகளும் லார்னி பால்பியின் பின்னணி இசையும் படத்தின் வேகம் எப்படி இருக்கும் என காட்டியுள்ளது. டாம் குரூஸ் மலை உச்சியிலிருந்து விழும் காட்சி, ரயிலில் நடக்கும் ஸ்டண்ட் சீன் என படம் முழுக்க ஆக்ஷன் திருவிழா கன்ஃபார்ம் என்பது உறுதியாகியுள்ளது. இதுவரை முடிக்கவே முடியாத பல மிஷன்களை அசால்டாக டீல் செய்த ஹீரோ ஈதன் ஹண்ட் (டாம் குரூஸ்) இந்த முறை தன் காதலியை காப்பாற்ற ஒரு மிஷனை கையில் எடுப்பதாகத் தெரிகிறது.
மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பார்ட் 1 ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர். மிஷன் இம்பாசிபிள் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளியான நிலையில், இதுவரை மொத்தம் 6 பாகங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. மிஷன் இம்பாசிபிள் சிரிஸின் 7 வது பாகமான Mission Impossible Dead Reckoning - Part One இந்த ஆண்டும், இதன் அடுத்த பாகம் 2024ம் ஆண்டும் வெளியாகவுள்ளது. இந்த டெட் ரெக்கோனிங் தான் மிஷன் இம்பாசிபிள் சீரிஸின் கடைசி படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் எம்சிகுரோரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் டாம் குரூசுடன் விங் ரேம்ஸ், சைமன் பெக், ரெபேக்கா பெர்குசன், வெனேசா கிர்பி, ஹென்றி செர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பார்ட் 1 ட்ரெய்லருடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் ஜூலை 12ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











