இந்தியாவில் தியேட்டர் ரிலீஸ் கிடையாது; நேரடியாக ஒடிடியில் வெளியாகும் பிளாக் விடோ!
லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் உலகின் லேடி சூப்பர் ஸ்டாரான பிளாக் விடோவின் சோலோ அதிரடி ஆக்ஷன் திரைப்படம் இந்தியாவில் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஒடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
மார்வெல் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான அவெஞ்சர்ஸ் படங்களில் பிளாக் விடோவாக நடித்து மிரட்டிய நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சனின் தனி அவெஞ்சர் சாகச கதை தான் இந்த பிளாக் விடோ.
கடந்த ஜூலை மாதமே உலகளவில் தியேட்டர்களில் வெளியான இந்த படம் வரும் செப்டம்பரில் இந்தியாவில் ஒடிடியில் வெளியாகிறது.

அயன்மேன் 2வில் ஆரம்பம்
பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான லயன்ஸ்கேட் தான் முதன் முதலில் கடந்த 2004ம் ஆண்டு பிளாக்விடோ படத்தை உருவாக்க திட்டமிட்டது. ஆனால், அந்த படம் உருவாகவில்லை. அந்த கதை 2006ம் ஆண்டு மார்வெல் கைகளுக்கு சென்றது. பிளாக் விடோவை தனிப் படமாக உருவாக்க நினைத்த நேரத்தில் மற்ற படங்களில் பிசியாக இருந்த மார்வெல் நிறுவனம் அயன்மேன் 2வில் முதன் முதலாக ஸ்கார்லெட் ஜோஹன்சனின் நடாஷா மற்றும் பிளாக் விடோ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியது.

லேடி அவெஞ்சர்
அயன்மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், ஸ்பைடர்மேன் என ஏகப்பட்ட ஆண் அவெஞ்சர்கள் இருந்த நிலையில், அந்த டீமையே வழிநடத்தும் பெண் அவெஞ்சராக பிளாக் விடோ பல படங்களில் தனது அதிரடி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். பிளாக் விடோவாக நடித்த ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு ஹாலிவுட்டில் மட்டுமல்ல உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

எண்ட்கேமே முடிந்தது
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் வில்லன் தானோஸை அழிக்க கிட்டத்தட்ட 18 சூப்பர் ஹீரோ படங்களை தயாரித்து வெளியிட்டு அசத்தி இருந்தது மார்வெல் தயாரிப்பு நிறுவனம். அவெஞ்சர்ஸ் எண்ட்கேமில் தானோஸை அத்தனை சூப்பர் ஹீரோக்களும் ஒன்று சேர்ந்து அழித்த பின்னரும் அவெஞ்சர்களின் தனிக் கதை படங்கள் வெளியாகி ஹிட் அடித்து வருகின்றன. பிளாக் விடோ அந்த வரிசையில் மார்வெலின் 24வது படமாகும்.

உலகம் முழுவதும் ரிலீஸ்
இந்தியாவை தவிர்த்து உலகின் பல நாடுகளில் இந்த படம் கடந்த ஜூலை மாதமே வெளியாகி விட்டது. இயக்குநர் கேட் ஷார்ட்லாண்ட் இயக்கத்தில் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஃபிளாரென்ஸ் பக், டேவிட் ஹார்பர், ஓல்கா குரியெலென்கோ மற்றும் ரேச்சல் வெய்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் இந்த படம் வெளியாகி உள்ளது.

2 ஆயிரம் கோடி வசூல்
சோலோ அவெஞ்சர் படமாக வெளியான பிளாக் விடோ படம் உலகம் முழுவதும் இதுவரை 2 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. சுமார் 200 மில்லியன் டாலர்கள் மதிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படம் எடுக்கப்பட்டது. அவெஞ்சர்ஸ் படங்களில் வருவதற்கு நிகரான ஆக்ஷன் காட்சிகள் அடங்கி உள்ள இந்த படம் எப்போது இந்தியாவில் ரிலீசாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர்களுக்கான சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

தியேட்டரில் இல்லை
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் இன்னமும் அதிக இடங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில், மார்வெலின் பிரம்மாண்டமான படமான பிளாக் விடோ இந்தியாவில் தியேட்டர்களில் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக இங்கே நேரடியாக ஒடிடியில் இந்த படம் வெளியாகிறது.

எந்த ஒடிடி தளத்தில்
புதுப்படங்களை வாங்கி வெளியிட அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இடையே கடும் போட்டிகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நெற்றிக்கண்ணை கைப்பற்றிய டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனமே ஹாலிவுட் லேடி அவெஞ்சரின் பிளாக் விடோவையும் கைப்பற்றியுள்ளது.

எப்போ ரிலீஸ்
தான் யார் என்பதையும் தன்னை போல உருவாக்கப்பட்ட பிளாக் விடோக்களையும் ரெட் ரூமில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் தனது குடும்பத்துடன் இணைந்து போராடும் நடாஷாவின் பிளாக் விடோ திரைப்படம் வரும் செப்டம்பர் 3ம் தேதி இந்தியாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த படம் வெளியாகிறது என்பது ஒட்டுமொத்த இந்திய பிளாக் விடோ ரசிகர்களுக்கும் சந்தோஷமான செய்தி தான்.


Click it and Unblock the Notifications











