அதிர்ச்சி.. 57 வயதில் ‘Sex and the City’ நடிகர் வில்லி கார்சன் மரணம்.. சோகத்தில் ஹாலிவுட்
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லி கார்சன் கணைய புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 57.
தந்தை உயிரிழந்த செய்தியை அவரது மகன் நாதன் கார்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஹாலிவுட்டில் பிரபலமான 'Sex and the City' வரிசை படங்களில் நடித்து புகழ்பெற்ற இவரது மரண செய்தி ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

வில்லி கார்சன் மரணம்
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 1964ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி பிறந்த வில்லி கார்சன் கணைய புற்றுநோயால் சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 21ம் தேதி காலமானார். அவருக்கு வயது 57.

சினிமா மற்றும் சீரியல்
1986ம் ஆண்டு வெளியான தி டெலிபிரேட் ஸ்ட்ரேஞ்சர் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானவர் வில்லி கார்சன். அதே ஆண்டு அவர் நடிப்பில் பல டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். கிங்பின், தி ராக், பிரைன் டெட், கிரவுண்ட் ஹாக் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

செக்ஸ் அண்ட் தி சிட்டி
1998 முதல் 2004 வரை HBOவில் ஒளிபரப்பான Sex and the City தொடரில் ஸ்டான்ஃபோர்ட் பிளாட்ச் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வில்லி கார்சன். 2008ல் அதே பெயரில் வெளியான திரைப்படத்திலும் நடித்து அசத்தினார். 2010ம் ஆண்டு வெளியான Sex and the City 2 படத்திலும் அதே கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

உருகிய மகன்
தனது தந்தையும் பிரபல ஹாலிவுட் நடிகருமான வில்லி கார்சன் மரணம் அடைந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் ஒன்றை போட்டு அறிவித்தார் நாதன் கார்சன். "ஐ லவ் யூ சோ மச் அப்பா" என தொடங்கி தந்தை தன்னுடன் இருந்த தருணங்கள் மற்றும் அவரது மறைவு குறித்து மிகவும் உருகி அவரது புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நாதன் கார்சன்.

பிரபலங்கள் இரங்கல்
HBO டிவியில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் ஏகப்பட்ட தொடர்களில் நடித்து பிரபலமான வில்லி கார்சன் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர் அவரை இழந்து ஒட்டுமொத்த உறவுகளும் தவிக்கிறோம் என அதன் செய்தித் தொடர்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் வில்லி கார்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











