இறுதிக்கட்டத்தில் தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4ம் பாகம்.. இந்த முறை புதுசா யாரெல்லாம் இருக்கா தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் இணைந்து மிரட்டும் தி எக்ஸ்பென்டபிள்ஸ் படத்தின் 4ம் பாகம் உருவாகி வருகிறது.
மார்வெலின் அவெஞ்சர் படம் போல ஏகப்பட்ட ஆக்ஷன் ஹீரோக்கள் ஒன்றிணைந்து இம்பாசிபிளான மிஷன்களை முடிப்பது தான் இந்த படத்தின் மையக் கரு.
முதல் பாகத்தை நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் இயக்கி இருந்தார். அடுத்த அடுத்த பாகங்களை வேறு வேறு இயக்குநர்கள் இயக்க 4ம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஸ்காட் வாக்.

தி எக்ஸ்பென்டபிள்ஸ்
2010ம் ஆண்டு சில்வஸ்டர் ஸ்டாலோன் எழுதி இயக்கிய திரைப்படம் தான் தி எக்ஸ்பென்டபிள்ஸ். சில்வஸ்டர் ஸ்டோலன் உடன் இணைந்து ஜெட்லி, ஜேசன் ஸ்டாதோம், டால்ஃப் லண்ட்கிரன், ரேண்டி கோச்சர், டெர்ரி க்ரூஸ், ஸ்டீவ் ஆஸ்டின் உள்ளிட்ட பல ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தனர். அதிரடி ஆக்ஷனுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

சைமன் வெஸ்ட் இயக்கத்தில்
2012ம் ஆண்டு வெளியான தி எக்ஸ்பென்டபிள்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு சில்வஸ்டர் ஸ்டாலோன் கதை எழுத அந்த படத்தை இயக்குநர் சைமன் வெஸ்ட் இயக்கி இருந்தார். ஏஞ்சலினா ஜோலியின் டாம்ப் ரெய்டர், மற்றும் பிரபல ஹாலிவுட் படங்களான கான் ஏர், மெக்கானிக் என பல படங்களை இவர் இயக்கி உள்ளார். இந்த படமும் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பியது.

3ம் பாகம்
ஒவ்வொரு படமும் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் வெளியாகி வந்தன. 2014ம் ஆண்டு இயக்குநர் பாட்ரிக் ஹ்யூக்ஸ் இயக்கத்தில் வெளியான தி எக்ஸ்பென்டபிள்ஸ் 3 படம் அந்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. மெல் கிப்சன், ஹாரிசன் ஃபோர்ட் மற்றும் அர்னால்டு என பல நடிகர்கள் புதிதாக இதில் இணைந்த நிலையிலும் படத்தின் கதை வலுவாக இல்லாத நிலையில், தொய்வை சந்தித்தது.

4ம் பாகம் ரெடியாகுது
இந்நிலையில், நீண்ட ஆண்டுகளாக ரெடியாகி வரும் 4ம் பாகம் விரைவில் ரிலீசுக்கு தயாராகும் சூழலில் உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. லயன்ஸ்கேட் மற்றும் மில்லினியம் மீடியா இணைந்து இந்த 4ம் பாகத்தை தயாரிக்க நீட் ஃபார் ஸ்பீட் ஃபிலிமை இயக்கிய இயக்குநர் ஸ்காட் வாக் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

புது வரவு யார்
சில்வஸ்டர் ஸ்டாலன் இந்த படத்திற்கு கதை எழுதவில்லை. ஆனால், தொடர்ந்து பார்னி ராஸ் கதாபாத்திரத்திலேயே இந்த படத்திலும் நடித்து வருகிறார். ஜேசன் ஸ்டாதம் உள்ளிட்ட எக்ஸ்பென்டபிள்ஸ் நடிகர்கள் மீண்டும் இடம் பெற புது வரவாக 50 சென்ட்ஸ், டோனி ஜா மற்றும் மேகன் ஃபாக்ஸ் உள்ளிட்டோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

வெறித்தனமா இருக்கும்
3ம் பாகம் ரசிகர்களை சற்றே ஏமாற்றிய நிலையில், நீண்ட கால தாமதத்திற்கு பிறகு உருவாகி வரும் 4ம் பாகத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் வெறித்தனமாக இருக்கும் என படத்தின் தயாரிப்பாளரான லயன்ஸ்கேட் ஜேசன் கான்ஸ்டன்டைன் சமீபத்தில் வெரைட்டி இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











