லார்ட் ஆப் த ரிங்ஸ் நடிகர்.. ஹாலிவுட் நடிகர் இயான் ஹோல்ம் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!
லண்டன்: பிரபல ஹாலிவுட் நடிகர் இயான் ஹோல்ம் காலமானார். அவருக்கு வயது 88.
ஜீசஸ் ஆப் நாசரேத், ஏலியன்ஸ், ரிட்டர் ஆப் த சோல்ஜர், ஹாம்லெட், த லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஏவியேட்டர் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் இயான் ஹோல்ம்.
ஏலியன்ஸ் படத்தில் கப்பல் அதிகாரியாகவும், சாரியாட்ஸ் ஆஃப் பயர் படத்தில் ஓட்டப்பந்தய பயிற்சியாளர் சாம் முசாபினியாகவும் நடித்திருந்தார்.

ஆஸ்கர் விருது
நடிப்புக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இயான் ஹோல்ம், சாரியாட்ஸ் ஆஃப் பயர் படத்துக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஹாலிவுட்டின் மெகா பட்ஜெட் படங்களில் இருந்து சின்ன படங்கள் வரை நடித்துள்ள இவர், கடைசியாக 2014 ஆம் ஆண்டு வெளியான த ஹோபிட்: த பேட்டல் ஆஃப் த ஃபைவ் ஆர்மிஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

டிவி தொடர்கள்
தொடர்ச்சியாக வெளியான ஹோபிட் படங்களில் இவர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். பல்வேறு வரலாற்றுப் படங்களிலும் நடித்துள்ள இவர், வயது முதிர்வு காரணமாக, அதன்பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். த லாஸ்ட் டிராகன், ஹரிஸான் உட்பட ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். த டெம்பஸ்ட், கிங் லீடர் உட்பட பல நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

பார்க்கின்சன்
லண்டனில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இயான் ஹோல்ம், பார்க்கின்சன் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனையில், குடும்பத்தினர் முன்பு உயிரிழந்துள்ளார். இதை அவரது ஏஜென்ட் அலெக்ஸ் இர்வின் தெரிவித்துள்ளார்.

திறமையானவர்
இதையடுத்து ஹாலிவுட் திரைபிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது பிரகாசமான அறிவு அவரது கண்களின் குறும்பு மின்னலுடன் எப்போதும் இருந்தது. வசீகரமான, கனிவான, திறமையான ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்று அலெக்ஸ் இர்வின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக மூத்த ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இறப்பது அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











