அப்போ கன்னத்துல பளார்… இப்போ கண்ணீர்மல்க மன்னிப்பு: திடீரென ஆஸ்கர் பிரபலம் வெளியிட்ட வீடியோ
அமெரிக்கா: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம், 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது.
விருது வழங்கும் விழாவில் காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையானது.

கன்னத்தில் அறை
94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவின் ஒருபகுதியை காமெடி நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலைமுடி குறித்து, கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தியடைந்த வில் ஸ்மித், நேராக மேடைக்குச் சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் பளார் என ஓங்கி அறைவிட்டார். ஆஸ்கர் விழாவில் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம், உலக அளவில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

அலோபீசியா பாதிப்பு
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட், 'அலோபீசியா' எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அதுகுறித்து கிறிஸ் ராக் கிண்டல் செய்தது தவறு என்றும், அதற்கு வில் ஸ்மித் சரியான விதத்தில் பதிலடி கொடுத்தார் எனவும் சிலர் அவருக்கு சப்போர்ட் செய்தனர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, வில் ஸ்மித் தனது ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஆஸ்கர் விருது விழா உட்பட மேலும் சில விருது நிகழ்வுகளில் கலந்துகொள்ள, வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்தது அகாடமி அமைப்பு.

மனம் திறந்த வில் ஸ்மித்
இந்த சம்பவம் தொடர்பாக வில் ஸ்மித், எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். கிறிஸ் ராக்கிடம் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என ரசிகர்கள் வில் ஸ்மித்திடம் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இதனையடுத்து தனது யூ-டியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வில் ஸ்மித். அதில், தான் கிறிஸ் ராக்கை தொடர்பு கொண்டு பேச முயன்றதாகவும், ஆனால் இதுகுறித்து தற்போது பேச ரெடியாக இல்லை என கிறிஸ்ராக் பதிலளித்ததாகவும் வில் ஸ்மித் கூறியுள்ளார்.

கண்ணீர் மல்க மன்னிப்பு
இந்த வீடியோவில் தொடர்ந்து பேசியுள்ள வில் ஸ்மித், "எனது செயல் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல என்றும், இதற்காக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும், அவருடன் எப்போது வேண்டுமானாலும் பேச நான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல், கிறிஸ் ராக்கின் அம்மாவிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார் வில் ஸ்மித்.

நியாயப்படுத்த விரும்பவில்லை
அதேபோல், ஆஸ்கர் விழாவில் நான் இப்படி நடந்துகொண்டதை, ஒருபோதும் நியாயப்படுத்த மாட்டேன் எனவும், பெரிய மனுசனாக பேசியுள்ளார் வில் ஸ்மித். நான் செய்தது பலரையும் பாதித்திருக்கும், இதை நினைத்து நான் ரொம்பவே கில்டியாக ஃபீல் செய்கிறேன் எனவும், ரொம்ப உருக்கமாக பேசியுள்ளார். வில் ஸ்மித்தின் இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருவதோடு, பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒருவழியாக ஆஸ்கர் விழாவில் நடந்த இந்த சர்ச்சை, இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

என்ன சொல்வார் கிறிஸ் ராக்
இன்னொரு பக்கம் வில் ஸ்மித்தின் இந்த வீடியோவை பார்த்து, கிறிஸ் ராக் என்ன சொல்வார் என, ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அவரும் கொஞ்சம் பெரிய மனுசனாக நடந்துகொண்டு, வில் ஸ்மித்தின் மன்னிப்பை ஏற்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். வீடியோவில் வில் ஸ்மித் 'ஐ லய் யூ பேபி' என கிறிஸ் ராக்கை பார்த்து கூறியிருந்தார், பதிலுக்கு கிறிஸ் ராக்கும் 'லய் யூ டூ பேபி' என பதில் சொல்லி, பஞ்சாயத்தை முடித்து வைக்க வேண்டும் எனவும், ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











