'விஜய்... அரசியல்' பத்தி மட்டும் கேட்காதீங்க!-எஸ்ஏசி

இந்தப் படத்தை அவர் தயாரிக்கிறார். இயக்கவில்லை. கதிர் என்ற புதுமுக ஹீரோவையும், மூன்று புதிய நாயகிகளையும் அறிமுகப்படுத்துகிறார். தன்னுடன் இந்த புதுமுகங்களையும் அழைத்துச் செல்லும் எஸ்ஏசி, படம் குறித்து பேட்டிகள் அளித்து வருகிறார்.
சமீபத்தில் திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், "விஜய் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது" என்றார். இதற்கு கடுமையான எதிர் விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அரசியல் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார் எஸ்ஏசி. நேற்று வேலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்ஏ சந்திரசேகரன் கூறியது:
"இந்தக் கதை மிகப் புதிதாக இருக்கும். எந்தப் படத்தின் சாயலும் இருக்காது. காரணம் எஸ்.ஏ.சந்திரசேகரான என்னைப் பற்றியதுதான் இந்தப்படம். என் சிறு வயதில், இளைய பருவத்தில், நடந்த விஷயங்களை படத்தின் கதை.
இந்தப் படம் மாபெரும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். சினிமா உலகத்தில் நான் அறிமுகப்படுத்திய விஜய், சிம்ரன், விஜயகாந்த் ஆகியோர் சினிமா உலகத்தில் வெற்றி பெற்று மிகப்பெரிய பிரபலத்தோடு இருக்கிறார்கள்.
அதேபோல், இந்தப் படத்திலும் நான், கதிர் என்கிற இளைஞரை அறிமுகப்படுத்தியுள்ளேன். இவர் தமிழ்நாட்டு பையன்.
இதேபோல் படம் இளைஞர்களுக்குப் பிடித்த மாதிரி, செக்ஸியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆந்திராவில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்த ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறேன். இன்னொரு பெண்ணை கிராமத்து தென்றலாக வருவது போல் அறிமுகப்படுத்துகிறேன்.
இதோடு இன்னோரு பெண்ணையும் அறிமுகப்படுத்துகிறேன். மொத்தம் இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள். படம் இளம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பதுபோல் இருக்கும்" என்றார்.
அவரிடம், அண்மையில் விஜய் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என்று விநியோகஸ்தர்கள் 35 சதவீதம் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்களே?, என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு சந்திரசேகரன், "தயவு செய்து விஜய் பற்றியும், அரசியல் பற்றியும் கேட்க வேண்டாம். ப்ளீஸ்... இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு முழுக்க முழுக்க வெளுத்துக்கட்டு படத்தை பற்றிதான்..." என்று எஸ்ஸானார்!
பின்னர் படத்தின் நாயகி அருந்ததி பேசுகையில், "என்னை காலை 6 மணிக்கெல்லாம் அப்பா (எஸ்.ஏ.சந்திரசேகர்) வர சொல்கிறார். அவர்தான் எனக்கு நடிப்பு கத்துக் கொடுத்தார். தினமும் என்னை வைத்துதான் முதல் ஷாட் எடுப்பார். எனக்கு எல்லாமே அப்பாதான்.." என்றார் உருக்கமாக.


Click it and Unblock the Notifications











