twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் பட ரிலீஸை எதிர்த்தது ஆளும்கட்சிக்காரர்கள்தான்! - குமுறும் விஜய்

    By Shankar
    |

    காவலன் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று ஆளும்கட்சிக்காரர்கள் மிரட்டினார்கள் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

    சமீபத்தில் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

    'இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம். ஆனா, 'காவலன்" படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையைத் தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போறதுன்னு புரியாமல் எனக்குப் பயங்கர ஷாக். தனிப் பட்ட மனிதரிடம் போய் என்னுடைய சூழ் நிலையைச் சொல்ல முடியாது.

    'காவலன்" படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டுத் தெளிவாகத் திட்டம் போடுறதைப் புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து 'காவலன்" படத் துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க. அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம்? வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுது!

    தியேட்டர் அதிபர்களுக்கு மிரட்டல்...

    வேறு சிலர், தியேட்டர் அதிபர்களையும் ஓப்பனா மிரட்டி இருக்காங்க. 'காவலன்" படத்தைச் சுற்றி அவ்வளவு பிரச்னைகள். அது எல்லாத்தையும் தீர்க்க, கஷ்டப்பட்டுப் போராடி பொங்கல் ரிலீஸ் ஏற்பாடு செய்தோம். எல்லாத் தடைகளையும் மீறி மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க!''

    குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி? எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. 'நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்"னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா?

    முக்கியமான நேரத்தில் என் படம் வெளிவரக் கூடாதுன்னு பயப்படுறாங்க. ஒரு படத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா? அத்தனை அவமானங்களையும் கேவலங்களையும் தாண்டித்தான் 'காவலன்" வந்தான். மீண்டும் என்னுடைய ரசிகர்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்''

    கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை...

    ''சில மாதங்களுக்கு முன்னால் ஈரோட்டில் இருக்கும் என்னுடைய மக்கள் இயக்க ரசிகர்கள் முறைப்படி போலீஸிடம் அனுமதி வாங்கி, நல உதவிகள் கொடுக்கும் விழாவை ஏற்பாடு செஞ்சாங்க. கூட்டம்னா... கூட்டம். ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் என்னைப் பார்க்க ஆவலா இருக்காங்க. மேடைக்குப் போகக் கிளம்பிய என்னை போலீஸார் தடுத்தாங்க.

    'கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கு. மீறிப் போனா, உங்களோட உயிருக்கு நாங்க பாதுகாப்பு இல்லை"ன்னு கை விரிச்சாங்க. 'முறையா போலீஸ் பெர்மிஷன் வாங்கித்தானே ஃபங்ஷன் நடத்துறாங்க... திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?"னு கேட்டேன். உடனே, செல்போனில் யார் யாரிடமோ மாறி மாறிப் பேசினாங்க. திரும்பி வந்து 'முடியவே முடியாது"ன்னு என்னைத் திருப்பி அனுப்பு வதிலேயே குறியா இருந்தாங்க. அதாவது, நான் மக்களைச் சந்திப்பது, ரசிகர்கள் என்னைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாகத் திரள்வதை எல்லாம் யாரோ விரும்பலைன்னு தெளிவாத் தெரிஞ்சது.

    என்னால எந்தப் பிரச்னையும் வரக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் திரும்பி வந்துட்டேன்.

    ஆளும்கட்சியினர் மிரட்டல்...

    ''சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய 'காவலன்" ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, 'விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ"ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், 'பொறுமையா இருங்க"ன்னு சமாதானப்படுத்தி வெச்சேன். அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? 'காவலன்" படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே?

    இது எல்லாம் என் ரசிகர்களுக்குத் தெரியும். ரசிகர்களுடன் என்னை வாழவைக்கும் பொதுமக்களும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க. குரோம்பேட்டை முதல் குக்கிராமம் வரை இந்தப் படம் ரிலீஸ் ஆகிறதுக்காக அனுபவிச்ச வேதனையும் சேர்த்து, என்னை நிறைய நிறைய யோசிக்க வைக்குது.

    அதனால, அடுத்தடுத்து நான் போக வேண்டிய பாதையை 'காவலன்" ரிலீஸ் தீர்மானிச்சு இருக்கு. இனி மேல்தான் மனம் திறந்து பேசப்போற உண்மையான சினிமா ரிலீஸ் ஆகப் போகுது!

    காந்தி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய்காந்த்.... அடுத்து நான்!

    சரித்திரத்துல ஒரு சம்பவம் வரும். நம்முடைய மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட அனுபவம் அது. தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் பயணம் போன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, வெள்ளைக்காரன் ஒருவன் 'ப்ளாக் டாக்"னு கூச்சலிட்டு எட்டி உதைப்பான். சாதாரண மோகன்தாஸாக விழுந்த அவர், மகாத்மா காந்தியாக அந்த பிளாட்ஃபார்ம்லதான் பிறந்தார்!

    தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை, ஒரு கேள்வி கேட்டார்னு கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சாங்க. அன்னிக்குத்தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார். அவர் இறக்கும் வரை அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தார்.

    எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா மேடத்தைக் கீழே தள்ளி னாங்க. பின்னாளில் சைரன் காரில் போலீஸ் புடைசூழ சி.எம் ஆனாங்க, அதே ஜெயலலிதா மேடம். ரெண்டு தடவை சி.எம்மா இருந்தாங்க. இதோ... இப்பவும் பொறி பறக்குது.

    அதே மாதிரிதான்... சும்மா இருந்த கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அவர் இப்போ எவ்ளோ பெரிய ஃபோர்ஸா இருக்கார்னு எல்லோருக்கும் தெரியும்.

    முதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?''

    அரசியலுக்கு பலமான அஸ்திவாரம்...

    நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை.

    யார் பேச்சையும் கேட்டு உடனடியா எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுக்கிட்டே வர்றேன்.

    யாருக்கு எப்போ, எப்படி வெற்றி தோல்வியைக் கொடுக்கிறதுன்னு தீர்மானிக்கிறவன் கடவுள். சாதாரண மாமிச உடம்பு உள்ள எந்த மனித ஜென்மத்தாலும் இதைத் தடுக்க முடியாது. நான் உங்களிடம் சொன்னது என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம் இல்லை. இது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தின் ஆதங்கம். நான் சொல்லிட்டேன். நிறையப் பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க.

    சம்பந்தப்பட்டவங்க இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு... என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சுத் தாக்கலாம். எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம். ஆனா, அதுக்குஎல்லாம் நான் கவலைப்படவே இல்லை!", என்று கூறியுள்ளார் விஜய்.

    நன்றி: ஆனந்த விகடன்

    English summary
    Actor Vijay alleged that the ruling DMK people have opposed the release of his Kaavalan for Pongal. In his recent interview to Aananda Vikatan, the actor revealed his political ideas and plans elaborately.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X