நடுரோட்டில் என் புடவையை கிழித்தனர்-போலீஸ் மீது விஜயசாந்தி புகார்

தெலுங்கானாவுக்கு எதிராக பேசுபவர்களை வெட்டிக் கொல்வேன் என்று பேசியதால் கைது செய்யப்பட்ட அவர் பினனர் நீதிமன்றம் அளித்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஹைதராபாத் சன்சல்குடா சிறையில் அடைக்கப்பட்ட அவர் வெளியே வந்தவுடன் சிறை வாயிலில் நிருபர்களிடம் கூறியதாவது:
என்னை ஒரு எம்பி என்றும், பெண் என்றும் கூட பார்க்காமல் போலீசார் இழுத்து சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். பஞ்சாரா ஹில்ஸ் கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவீந்தர் ரெட்டி, ஹிமாயூன் நகர் கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்திர சேகர் ஆகியோர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டனர்.
நான் காரில் சென்றபோது நடுரோட்டில் காரை நிறுத்தி டிரைவரை கீழே தள்ளினார்கள். கார் சாவியை பிடுங்கிக் கொண்டு பெண் போலீசார் இல்லாமலேயே அவர்கள் என்னை நடுரோட்டில் இழுத்துச் சென்றனர். புடவையை கிழித்தனர்.
முன்னதாக நான் 11 மணி வரை வீட்டில் காத்திருந்தேன். அப்போது கைது செய்யவில்லை. வேண்டுமென்றே என்னை நடுரோட்டில் வைத்து கைது செய்து அவமானப்படுத்தியுள்ளனர்.
எமனி தூதர்கள் போல போலீசார் நடந்து கொண்டனர். உங்களை கைது செய்கிறோம் என்று மரியாதைக்கு கூட ஒருவார்த்தை சொல்லவில்லை.
நான் என்ன தவறு செய்தேன்?, கொலை செய்தேனா?, கொள்ளையடித்தேனா? இடைத்தேர்தல் தோல்வி பயத்தில் காங்கிரஸ் அரசும், முதல்வர் ரோசய்யாவும் என்னை திட்டமிட்டு கைது செய்துள்ளனர்.
நான் ஜாமீனில் வர விரும்பவில்லை. சிறையில் இருக்கவே விரும்பினேன். ஆனால், கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சட்டம்- ஒழுங்குக்கு கேடு ஏற்படும் என்பதால், தலைவர் சந்திரசேகர ராவின் அறிவுரையின்படி ஜாமீனில் வெளியே வந்தேன்.
இனி ஒவ்வொரு வீடாக சென்று ஐக்கிய ஆந்திரா ஆட்சியால் தெலுங்கானா பெண்ணுக்கு நடந்த கொடுமைகளை எடுத்துச் சொல்வேன் என்றார்.


Click it and Unblock the Notifications











