For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இணையதளமும் எனது தளங்களில் ஒன்று - கமல்ஹாஸன்

  By Staff
  |
  Kamal with Shruthi Hassan
  இணைய தளமும் என்னுடைய தளங்களில் ஒன்று. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். எல்லோருமே அதை நோக்கி வர... கொஞ்சம் தாமதமானாலும், என்றார் கலைஞானி கமல்ஹாஸன்.

  உன்னைப்போல் ஒருவனுக்காக முதல் முறையாக இணையதள செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கான பிரத்யேக பிரஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. நடத்தியவர் கலைஞானி கமல்ஹாஸன்.

  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் மக்கள் தொடர்பாளர்களில் சிலர் இணைய தளங்களை ஒதுக்கிப் புறக்கணிக்கும் நிலையில், கமல்ஹாஸன் முதல் முறையாக இணையதள செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு மட்டும் தனியாக பிரஸ் மீட் வைத்தது குறிப்பிடத்தக்கது.

  சனிக்கிழமை மாலை கமலின் மீடியா மேனேஜர் நிகில் முருகன் ஏற்பாடு செய்திருந்த இந்த பிரஸ்மீட்டில் கமல்ஹாஸனின் மகளும், உன்னைப் போல் ஒருவன் பட இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாஸனும் உடன் பங்கேற்றார்.

  உன்னைப்போல் ஒருவன் படத்தின் உருவாக்கத்திலிருந்து இணையதளங்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்த கமல், யாரும் இதுதான் வரைமுறை என ரூல் புக் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்றார்.

  "இதுதான் எல்லை... இதற்கப்பால் போகக் கூடாது என யாராவது சொன்னால், 'ஒ அப்படியா... அதுக்கப்பால் என்ன இருக்கு, பார்த்துடலாம்!' என்று போவதுதான் என்னைப் போன்றவர்கள் இயல்பு. அதுவும் சினிமாவில் பண்டிதத்தனம், பண்டிதர்கள் என்ற எதையும் எதிர்க்கத்தான் செய்வேன். இதுதான் சட்டம் என்று இங்கு (சினிமாவில்) யாரேனும் சொன்னால் அதை உடைத்துவிட்டு எனக்கு தேவையானதைத் தேடிச் செல்வேன்...", என்றார் கமல்.

  தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு கமல் அளித்த பதில்கள்:

  எ வெட்னஸ்டே நஸ்ருதீன் ஷா பாத்திரத்தின் தன்மை, தமிழில் உங்கள் கேரக்டருக்கு சரியாக வருமா?

  பாருங்க... எ வெட்னஸ்டே ரைட்ஸ் வாங்கும் வரைதான் அது வேறு படம். ரைட்ஸ் வாங்கிவிட்ட பிறகு இனி உன்னைப்போல் ஒருவன்தான். இங்கே எ வெட்னஸ்டே பற்றி பேச வேண்டியதில்லை. என் படத்தில் எனக்குத் தேவையான மாற்றங்கள், உணர்வுகளைக் கொண்டு வந்திருக்கிறேன். அதைப் படம் பார்த்துவிட்டு நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். சில நுட்பமான சமாச்சாரங்களை இங்கே சொல்ல முடியாது. பார்த்துட்டு சொல்லுங்க.

  இந்த 50 ஆண்டுகளில் மருதநாயகம் தவிர்த்து நீங்கள் சந்தித்த ஏமாற்றங்கள்?

  மருத நாயகம் ஏமாற்றமென்று நீங்கள்தான் சொல்கிறீர்கள்... அது எனக்கு ஏமாற்றமென்று நான் சொல்லவில்லையே. அது நிச்சயம் வரும். என்றாவது ஒருநாள், ஏதோ ஒரு வடிவில் நிச்சயம் உங்களை வந்து சேரும்... அதனால் உங்களுக்கும் கூட அது ஏமாற்றமில்லை.

  மற்றபடி இந்த 50 ஆண்டுகளில் எனக்கு ஏமாற்றம் என்றால்... நிறைய படம் பண்ணவில்லையே என்பதுதான். நிறைய நேரத்தை வீணடித்துவிட்டேன் என்ற ஏமாற்றம் எனக்குண்டு.

  இருக்கிற குறைந்த காலத்தில் இந்த ஏமாற்றத்தை எப்படி சரிசெய்து கொள்ள நினைக்கிறீர்கள்?

  படங்களுக்கிடையிலான இடைவெளியை குறைத்துக் கொள்ளப் போகிறேன்... வேறென்ன செய்ய முடியும்? வருடத்துக்கு இரு படங்கள் கொடுத்தால் ரசிகர்கள் என்னை புறக்கணித்துவிடவா போகிறார்கள்... பிள்ளையார் மாதிரி ஆண்டுக்கொருமுறை வந்தால் போதும் என்று எனக்கு எந்த கட்டாயமும் வைக்கவில்லையே...!

  ஸ்ருதி நல்ல இசையமைப்பாளர் என்று நினைக்கிறீர்களா?

  அப்புறம் எதுக்கு அவங்களை அமெரிக்காவுக்கு அனுப்ரி, இவ்வளவு செலவு பண்ணி படிக்க வைச்சது... அவங்க நல்ல இசையமைப்பாளராக இல்லாமலிருந்தால் இங்கே உட்காந்திருக்க முடியாது. நல்ல இசை கிடைக்கும் வரை ஸ்டுடியோவில் இருங்க... பிரஸ் மீட்டெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று அனுப்பி வைத்திருப்பேன்.

  சிலருக்கு இந்தப் படத்தின் இசை / பாடல்கள் அமைக்கப்பட்ட விதம் மிகச் சுலபத்தில் நடந்து முடிந்துவிட்டதாகத் தோன்றக்கூடும். அவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இது ஏதோ நேற்று ஆரம்பித்து இன்று முடிந்ததல்ல. ஸ்ருதி என்ற இசையமைப்பாளர் உருவாக வீ்ட்டில் எத்தனை ஒத்திகைகள், பயிற்சிகள் நடந்திருக்கும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது அல்லவா...

  30 ஆண்டு அனுபவத்தில் நடிப்பு எனக்கு போரடித்துவிட்டது என்கிறார் நஸ்ருதீன் ஷா... நீங்கள் 50 ஆண்டுகளாக நடிப்புத் துறையில் இருக்கிறீர்கள்... உங்கள் உணர்வு எப்படி?

  எனக்கு நடிப்பு போரடிக்காது. காரணம் சினிமாவில் நான் வெறும் நடிகன் மட்டுமில்லை. சினிமாவின் வேறு பல விஷயங்களையும் முயன்றுகொண்டிருப்பதால் எனக்கு போரடிக்காது.

  ஆனா இதையே அரசியல் பத்திக் கேட்டால், அது எனக்கு ரொம்ப போர் என்பேன். அரசியல்பத்தி இவனுக்கு என்ன தெரியும் என்று கூட சிலர் கேட்பார்கள். அதுபற்றி எனக்கு கவலையில்லை. நஸ்ருதீன்ஷா அவர் கருத்தைச் சொன்ன மாதிரி, இது என் கருத்து அவ்வளவுதான்.

  உங்களைப் போன்ற ஒரு கலைஞன் வடக்கில் 50 ஆண்டுகளைக் கடந்து சாதனைப் படைத்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பார்கள். ஆனால் உங்களுக்கு அந்த அளவு அங்கீகாரம் தரப்படவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?

  (உடனே சற்று வேகத்துடன் மைக் எடுத்த ஸ்ருதி) "எதற்காக அவர் இதைப்பற்றி கவலைப்பட வேண்டும்... நல்ல படைப்புகளைக் கொடுத்த அவரை அதற்கேற்ற முறையில் கவுரவிக்காவிட்டால் அது அவர் தவறல்ல... மற்றவர்கள் தவறு. அதற்காக அவர் ஏன் வருத்தப்பட வேண்டும்" என்றார்.

  பின்னர் பேசிய கமல், "உங்களைப் போன்ற மீடியா மக்கள் நினைத்தால் அந்த நிலை மாறும்... மாற்றுங்கள்", என்றார்.

  இணையதளங்கள்தான் இன்றைய முதல்நிலை மீடியாவாக உள்ள சூழலில், அவற்றை திரைத் துறையினர் சிலர் புறக்கணிப்பது குறித்து...?

  அவர்கள் சரியாகிவிடுவார்கள்... தொலைக்காட்சியே வேண்டாம் என்று கொடிபிடித்து கோஷம் போட்டதெல்லாம் உங்களுக்குத் தெரியும்தானே... இதனைப் பேசி சரி செய்துவிடலாம். இணையதளமும் என்னுடைய தளங்களில் ஒன்று, அந்த ஊடகத்தை நான் சரியாகப் பயன்படுத்திக் கொள்வேன்.

  சினிமாவை இணையதளங்கள் மூலம் தரும் உங்கள் திட்டம் குறித்து...

  நிச்சயம் அதை விரைவில் செய்வேன். முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன, என்றார் கமல்

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X