twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலர் கலரா கண்ணாடி போட்டு நடித்தால் பெரிய நடிகராகி விட முடியாது-திலகன்

    By Sudha
    |

    Tilagan
    கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. அப்படி செய்தால் அவர் பெரிய சூப்பர் ஸ்டாரா?. ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார் மலையாள நடிகர் திலகன்.

    மலையாளத் திரையுலகின் மிகப் பெரிய கலைஞர் திலகன். நடிப்பில் அரை சத ஆண்டுகளைக் கடந்தவர். ஆனால் அவரை ஒதுக்கி ஓரம் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மலையாளத் திரையுலகம். இயக்குநர் வினயனின் படத்தில் நடிக்கக் கூடாது என்று தாங்கள் போட்ட தடையை திலகன் மீறி நடிக்கப் போய் விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக திலகனை தீண்டாமல் ஓரம் கட்டி வைத்திருக்கிறது மலையாள நடிகர் சங்கமான அம்மா.

    தன் மீதான இத்தனை நடவடிக்கைகளுக்கும் மம்முட்டிதான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் திலகன். அத்தோடு மட்டுமல்லாமல், மோகன்லால், திலீப் என அத்தனை சூப்பர் ஸ்டார் நடிகர்களும் எனக்கு எதிராக சதி செய்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தன்னை தொடர்ந்து நடிகர் சங்கம் ஒதுக்கி வைத்திருந்தால் தற்கொலை செய்வேன் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார்.

    தன்னை மலையாளப் படவுலகம் ஒதுக்கி வைத்து விட்டாலும் இன்னும் தனது லட்சியத்தில் குறைவில்லாமல் படு திடமாகவே இருக்கிறார் திலகன். இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

    நான் வேஷம் கட்டிப் பல நாளாயிடுச்சு. எனக்குள்ள இருக்கும் கலைஞன் பெருங்குரல் எடுத்து அழுறான். ஆனால் மலையாளப் படவுலகை ஆட்டி வைக்கிற மாஃபியாக்கள் என்னை நடிக்கவிடாமல் தடுக்கிறாங்க. இதே நிலை தொடர்ந்தா தூக்கில் தொங்குவதுதான் என் இறுதி முடிவு என அறிவித்துவிட்டேன். அப்படி நான் தொங்கினால் அதுதான் ஆசையா சூப்பர் ஸ்டார்களே?

    உண்மையான கலைஞன் என்றால் உணர்ச்சி வசப்படணும். அடித்தால் திருப்பி அடிப்பேன். காரணம், என் நாடி நரம்பெல்லாம் உணர்ச்சிகள்தான் பொங்கி வழியுது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டார்ட் என்ற சத்தத்தைக் கேட்டதும் இந்தத் திலகன் மறைந்து அந்த கேரக்டர்தான் கேமரா முன்னாடி நிற்கும். ஒரே டேக்கில் அந்த ஸீனை அடித்து நொறுக்கிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். அதைப் பார்த்துக் கைதட்டிய டைரக்டர்ஸ் எல்லாம் இன்னைக்கு என்னை ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.

    விநயனும் ஒரு விஷய ஞானமுள்ள இயக்குநர்தானே? அவரது படத்தில் நடித்ததற்காகத் தடை போடுவது என்ன நியாயம்? கலையை வளர்க்கத்தான் சங்கம் வேண்டுமே தவிர, கலைஞனை அழிப்பதற்கு இல்லை. என் மீது வந்து விழும் கல்லுக்கு எல்லாம் சூத்ரதாரி மம்முட்டி என்று எனக்குத் தெரியும். அவருக்கும் மோகன்லாலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

    இப்போது சொல்கிறேன்... கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. மம்முட்டி அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். மலையாளப் படவுலகம் இன்று சிலரது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் உருப்படாத கதைகளில் நடிக்கிறார்கள். மற்ற மொழி சினிமாக்களை காப்பியடித்து, காப்பியடித்து மலையாள சினிமாவின் உன்னதத்தைக் கெடுத்துவிட்டார்கள்.

    கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை.
    ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள்.

    கேரளத்தின் கலாசாரத்தைத் திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.

    கேரள சினிமாக் கலையை அழிப்பவர்களைத்தான் அப்படித் தாக்குகிறேன். அது யாராக இருந்தால் எனக்கென்ன? என் நடிப்பை இந்த நாடறியும். இடையில் எனக்கு உடல் நலம் குறைந்தது உண்மைதான். அதற்காக என்னை புக் பண்ண வரும் டைரக்டர்களிடம், திலகனை புக் செய்தால் கூடவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும். எதற்கு பணத்தை வேஸ்ட் பண்றீங்க? என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். கூடவே என்னை "அம்மா'வில் இருந்தும் தூக்கி எறிந்து விட்டார்கள்.

    சீரியலில் நடிப்பதையும் தடுத்து நிறுத்தி விட்டார்கள். நாட்டின் சிறந்த கலைஞன் கமல்ஹாசனுக்கு கேரள அரசு விழா எடுக்கிறது. அதில் கலந்து கொள்ள கூடாது என அறிக்கைவிடுகிறார்கள். அப்போது இந்த மலையாள சினிமாவின் பிரம்மாக்கள் எல்லாம் எங்கே போனார்கள்.

    தற்கொலை செய்வேன் என்று நான் கூறியது மிரட்டல் இல்லை. உண்மை. எனக்குள் இருக்கும் கலைஞன் தினமும் புதுப் புது வேஷம் தேடி ஏங்குகிறான். அந்தப் பசியை நான் போக்கா விட்டால் அவன் செத்து விடுவான். இந்தக் கலைஞன் செத்த பிறகு திலகன் என்ற வெற்று உடம்பு வாழ்ந்து என்ன பயன்?

    நடிப்பதற்கான எனது வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து கேரள கலாசாரத் துறை அமைச்சர் பேபியிடம் பலமுறை புகார் சொல்லிவிட்டேன். ஆனால், அவர் தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுக்குச் சாதகமாகவே நடக்கிறாரே தவிர, உரிய நடவடிக்கை இல்லை. கொஞ்ச காலம் பொறுப்பேன். எல்லாத் திசைகளும் இப்படி சூனியமாகி விட்டால், பேபியின் வீட்டு முன் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்று பொறுமித் தள்ளி விட்டார் திலகன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X