ஹீரோவா நடிச்சு படம் தோத்தா பழி போடுறாங்க - வடிவேலு புலம்பல்

வைகைப் புயல் வடிவேலு இரு படங்களில் நாயகனாக நடித்தார். முதலில் நடித்த இம்சை அரசன் ஓஹோவென ஓடியது. 2வது படமான இந்திரலோகத்தில் நா. அழகப்பன் தாறுமாறாக ஊத்திக் கொண்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வடிவேலு. அவர்களிடம் பேசுகையில், இதுவரை நான், 490 படங்களில் நடித்து விட்டேன். இப்போது தயாரிப்பில் உள்ள ஆதவன், என்னுடைய 490வது படம். கொஞ்ச நாட்களுக்கு முன்பு என் உடம்பு அதிக எடை போட்டுவிட்டது. டான்ஸ் ஆட முடியவில்லை.
எனவே உடற்பயிற்சி செய்தும், சாப்பாட்டின் அளவை குறைத்தும் உடம்பை மெலிய வைத்தேன். இதுவரை 5 கிலோ குறைந்து இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் குறைக்க வேண்டும்.
இனிமேல் நான் கதாநாயகனாக நடிப்பதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன். படம் தோல்வி அடைந்தால், பழியை தூக்கி என் மீது போட்டு விடுகிறார்கள்.
சாப்பாட்டில் கொஞ்சம் உப்பு போட்டு இருக்கலாம் என்று சொன்னால், புரொடக்ஷனில் தலையிடுகிறார் என்கிறார்கள். டப்பிங் பேசும்போது, இந்த வரியை இப்படி எழுதியிருக்கலாமே என்றால், எடிட்டிங்கில் தலையிடுகிறார் என்கிறார்கள். சட்டையில், பட்டன் சரியில்லை என்றால், காஸ்ட்யூமில் தலையிடுகிறார் என்கிறார்கள்.
ஒரு கதாநாயகனுக்கு எதையும் கேட்க உரிமை இல்லையாண்ணே? இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு நடித்து முடித்தால், நன்றாக நடித்த சீன்களை எல்லாம் தயாரிப்பாளர் குடும்பத்தோடு வந்து வெட்டுகிறார். அதனால்தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கிறேன்.
கதாநாயகனாக நடித்தால் பொறுப்பு முழுவதும் என் தலையில் விழுந்து விடுகிறது. பயம்-பீதியாக இருக்கிறது. வெறுத்துப் போய்ட்டேண்ணே.
ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து முடிப்பதற்குள், 10 படங்களில் காமெடியா நடிச்சுட்டுப் போய்டலாம்ணே என்கிறார் வடிவேலு.
மெய்தாண்ணே...!


Click it and Unblock the Notifications











