கல்யாணமே இல்லை-எஸ்.ஜே.சூர்யா

வாலி படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் சூர்யா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த எஸ்.ஜே.சூர்யா, குஷி, நியூ, அன்பே ஆருயிரே என தனது முத்திரையைப் பதித்தார்.
தொடர்ந்து நடிகராகவும் கலக்கினார். அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் நியூ. தொடர்ந்து கள்வனின் காதலி, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
முதலில் நிலாவுடனும் பின்னர் மீரா ஜாஸ்மினுடனும் இணைத்து பலமாக கிசுகிசுக்கப்பட்டவர் சூர்யா. மீராவும் இவரும் ரகசியக் கல்யாணம் செய்து கொண்டதாகவும் கூட கூறப்பட்டது. ஆனால் இதை சூர்யாவே மறுத்து விட்டார்.
இந்த நிலையில் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன். சினிமாவுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
நியூட்டனின் 3ஆம் விதி' என்ற புதிய படத்தில், எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சினிமா மீது எனக்குள்ள காதல், கடல் அளவு. ஆனால் நான் சினிமாவில் சாதித்தது, மிக மிக குறைவு. நான் திருமணம் செய்துகொண்டால், என் இலக்கை அடைய முடியாது. சில விஷயங்களை இழந்தால்தான், சில விஷயங்களை பெற முடியும்.
சினிமாவில் யாரும் அடைய முடியாத இடத்தை அடைய வேண்டும் என்பது என் ஆசை. அதற்காக, என் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டேன். திருமணம் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்வது என்று முடிவு செய்து விட்டேன் என்றார் சூர்யா.
என்னை நானே இயக்கி நடித்ததில், முழுமையான நடிகர் ஆக முடியவில்லை. அதனால்தான் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அப்படி மற்ற இயக்குனர்கள், என்னை இயக்கிய இரண்டு படங்கள் சரியாக அமையவில்லை.
மற்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நான் நடித்து ஒரு வெற்றி படம் கொடுத்தால்தான், முழுமையான நடிகர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். அதற்காக, கொஞ்சம் டைம்' எடுத்துக் கொண்டேன். நல்ல கதை வரட்டும் என்று ஒதுங்கி இருந்தேன்.
தாய் முத்து செல்வன் சொன்ன கதை, நான் எதிர்பார்த்த நல்ல கதையாக இருந்தது. தன் காதலியை பலாத்காரம் செய்து அழித்த ஒருவனை, ஒரு இளைஞன் பழிவாங்கி அழிக்கும் கதை. இதில், என்ன புதுமை? என்று கேட்கலாம். பழிவாங்கும் முறை புதுசு.
பழிவாங்குவதற்கு கதாநாயகன் ஐந்து வருடம் அல்லது பத்து வருடம் எடுத்துக்கொள்ளவில்லை. காலை 10 மணியில் இருந்து 12 மணிக்குள், இரண்டு மணி நேரத்தில் பழிவாங்கி விடுகிறான். ஆங்கில படம் பார்க்கும் உணர்வை, நியூட்டனின் 3ஆம் விதி ஏற்படுத்தும் என்றார் எஸ்.ஜே.சூர்யா.
தொடர்ந்து அவர் கூறுகையில், இப்போது பவன் கல்யாணை வைத்து புலி என்ற படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறேன். அது முடியப் போகிறது.
அதன் பின்னர், நியூட்டன் படத்தை முடித்து விட்டு புலியை தமிழில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். அதில் நானே நாயகனாக நடிக்கப் போகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











