இயக்குநரை அடித்தேனா?-விஷால் பேட்டி

விஷால் - ஸ்ரேயா நடித்துள்ள புதிய படமான தோரணை படம் வரும் மே 21-ம் தேதி வெளியாகிறது. விக்ரம் கிருஷ்ணா தயாரிக்க,மணிசர்மா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், இதுவரை ஏற்காத காமெடி கலந்த ஆக்ஷன் ஹீரோ வேடத்தில் நடித்துள்றாராம் விஷால். இந்தப் படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை க்ரீன் பார்க்கில் நடந்தது.
படம் குறித்து விஷால் கூறியதாவது:
தோரணை என்னுடைய 8வது படம். ஒரு தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது. தெலுங்கில் இப்படத்துக்கு பிஸ்தா என பெயர் சூட்டியுள்ளோம்.
ஒரு இளைஞன் கிராமத்தில் இருந்து தன் அண்ணனை தேடி, சென்னைக்கு வருகிறான். அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்தான் 'தோரணை' படத்தின் கதை. இதில் புதுமை ஏதும் இல்லை என்று எனக்கும் தெரியும். ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதைதான் இந்த படத்தில் நான் நடிப்பதற்கு காரணம்.
ஒரு மென்மையான படத்தில்தான் என் நடிப்பு வாழ்க்கை துவங்கியது. அடுத்த படமே நல்ல ஆக்ஷன் படத்தில் நடித்துவிட்டேன். தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக இருந்ததால், தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டையில் கொஞ்சம் காமெடிக்கு முயற்சி செய்தேன்.
இப்போது முழுமையாக காமெடிக்கு முயற்சித்துள்ளேன், தோரணையில். எனக்கு இது ஒரு ஆஸிட் டெஸ்ட் மாதிரிதான். நகைச்சுவையாக நடிப்பது அந்த அளவு சவாலானது. அதில் ஜெயித்தால், அவரை நல்ல நடிகர் என்று சொல்லிவிடலாம்.
யாருடன் காதல்?
நான் ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும், யாராவது ஒரு நடிகையுடன் எனக்கு காதல் என்று பரபரப்பு கிளம்புவது வாடிக்கையாகிவிட்டது. இப்போது ஸ்ரேயாவுடன் இணைத்துப் போசுகிறார்கள். அவர் என் பட ஹீரோயின். மற்றபடி வேறு எந்த உறவும் இல்லை. அவர் நல்ல நடிகை என்பதால் என் அடுத்த படத்திலும் தொடர்கிறார்.
என் காதல், திருமணம் எதுவாக இருந்தாலும் வெளியில் சொல்வேன். நான் ரகசியமான ஆள் இல்லை.
இன்னொன்று, இந்தப் படத்தின் இயக்குநர் சபா அய்யப்பனை அடித்துவிட்டதாக வதந்தி கிளப்பிவிட்டார்கள். என் பட இயக்குநரை நான் எதற்கு அடிக்கப் போகிறேன். இது அடிப்படையில்லாத வதந்தி. அப்படி ஒரு சந்தர்ப்பமே எனக்கு ஏற்படவில்லை.
தலையிடுகிறேனா?
என் படங்களில் நான் தலையிடுவது உண்மைதான். ஆனால் ஈடுபாடு காரணமாக நான் காட்டும் அக்கறை அது. ஈடுபாட்டுக்கும் தலையீட்டுக்கும் ஒரு சின்ன இடைவெளிதான் உள்ளது. நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் என் குழந்தை மாதிரி. அதில் என் பங்களிப்பு முழுமையாக இருக்க வேண்டும். நான் அடிப்படை கதை, திரைக்கதையில் எப்போதும் மூக்கை நுழைப்பதில்லை. ஒரு காட்சியை மேம்படுத்த உதவி இயக்குநர் எப்படி யோசனைகள் சொல்வாரோ, அப்படித்தான் நான் சொல்வதும். நன்றாக இருந்தால் பயன்படுத்தலாம்... இல்லாவிட்டால் புறக்கணித்துவிடலாம்.
இந்தப் படத்துக்குப் பிறகு தீராத விளையாட்டுப் பிள்ளை எனும் படத்தில் நடிக்கிறேன். அதை இயக்குபவர் திரு என்ற புதிய இயக்குநர். இந்தப் படத்தில் எனக்கு ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார்.
புது இயக்குநர்களுடன் தொடர்ந்து படம் பண்ணுவதற்கு காரணம், கதைகள் அப்படி அமைவதுதான். பிரபல இயக்குநர்கள் சொல்லும் கதை எனக்குப் பிடித்திருந்தாலும் நடிப்பேன்.
தயாரிப்பாளரின் கேலி!
நான் 'செல்லமே' படத்தில் நடித்தபோது, 'இவனை எல்லாம் கதாநாயகனாக வைத்து படம் பண்ணுகிறார்களே' என்று ஒரு பட அதிபர் கிண்டல் செய்தார். அப்போது நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். 'நீ உன் வேலையை மட்டும் ஒழுங்காக பார்' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
இரண்டு வெற்றி படங்களில் நடித்து முடித்தபின் அதே பட அதிபர் என்னிடம் வந்து, 'கால்ஷீட்' கேட்டார். மறுபடியும் கண்ணாடியில் முகம் பார்தேன். சிரித்துக் கொண்டேன. அந்தப்பட அதிபருக்கு நான் கால்ஷீட் கொடுக்கவில்லை என்பது வேரு விஷயம். ஆனால் என் வேலையை ஒழுங்காகச் செய்கிறேன் என்பது மட்டும் புரிந்தது, என்றார்.
திமிரு படத்தை இயக்கிய தருண் கோபி எனும் இயக்குநர் விஷால் குறித்து கடும் விமர்சனங்களை வைத்திருந்தார். அதுகுறித்து விஷாலிடம் நிருபர்கள் கேட்டனர்.
"நான் அந்தப் படத்தில் நடித்தேன். படம் நன்றாகப் போனது. லாபம் கிடைத்தது. இயக்குநருக்கு பணம் கிடைக்கவில்லை என்றால் அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்தபோதே கூட கேட்டிருக்கலாம். ஆனால் இன்றைக்கு அவர் குற்றம்சாட்டுவது ஏன்? நான் ஒன்றும் படத்தின் பைனான்ஸியரோ, தயாரிப்பளரோ அல்ல", என்றார்.


Click it and Unblock the Notifications











