அஞ்சலிக்கு, மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
மகிழ்ச்சி திரைப்படத்தில் நடித்ததற்காக மிக மிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக குதூகலமாக கூறுகிறார் அஞ்சலி.
தன்னை முற்றிலும் புதிய கோணத்தில், புதிய முகத்துடன் காட்டும் படமாக இது அமைந்திருப்பதாகவும் பூரிப்புடன் கூறுகிறார்.
இயக்குநர் கெளதமன் நாயகனாகவும், இயக்குநர் சீமான் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள படம்தான் மகிழ்ச்சி. இதில் கெளதமனுக்கு ஜோடி போட்டுள்ளார் அஞ்சலி.
கற்றது தமிழ் படம் எனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றாலும், அங்காடித் தெருதான் என்னை ஒரு அருமையான நடிகை என்று அடையாளம் காட்டியது என்று கூறும் அஞ்சலி, அதற்குப் பிறகு என்னை நல்ல நடிகையாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் படமாக மகிழ்ச்சி அமையும் என்கிறார்.
படத்தின் தலைப்பில் மட்டுமல்லாமல் படத்தைப் பார்க்கும் அனைவருக்குமே படம் குறித்து பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்று கூறும் அஞ்சலி, இப்படத்தில் நான் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்தேன் என்றும் பெருமை பொங்கக் கூறினார்.
படம் முழுவதும் அஞ்சலிக்கு நடிக்கக் கூடிய வாய்ப்புகள் நிறையவாம். அவரும் எந்தவித சொதப்பலும் இல்லாமல், சமர்த்தாகவும், செமத்தியாகவும் நடித்துக் கொடுத்துள்ளாராம்.
மகிழ்ச்சி எனது திரையுலக வாழ்க்கையில் 3வது மைல் கல்லாக அமையும் என்று பெரும் நம்பிக்கையுடன் சொல்லும் அஞ்சலி, அதேபோல, கருங்காலி படத்தையும் வெகுவாக எதிர்பார்த்துள்ளாராம். இப்படத்தில் சேலையில் வரும் நான், எனக்கே பெரும் ஆச்சரியமாக தோன்றினேன் என்கிறார் வெட்கச் சிரிப்புடன்.


Click it and Unblock the Notifications











