முதல்வர் இருக்கும் போதே பாதியில் கிளம்புவதா? - நடிகர் நடிகைகளுக்கு குஷ்பு கண்டனம்

முதல்வர் மேடையில் இருக்கும் போதே, அவரை அவமதிக்கும் வகையில் சில நடிகர் நடிகைகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது கண்டிக்கத்தக்கது, என்றார் நடிகையும் திமுக பிரமுகருமான குஷ்பு.
நடிகர், நடிகைகளுக்கு கலைமாமணி வருது வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. முதல்வரிடம் விருது பெற்ற நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் விழா முடியும் முன்பே பாதியில் வெளியேறி விட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
பாதியில் கிளம்பிய நடிகர் நடிகைகளை மேடையிலேயே நடிகை குஷ்பு கண்டித்தார்.
இப்போது அது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "விழா மேடையில் முதல்வருடன் நானும் இதர முக்கியஸ்தர்களும் உட்கார்ந்து இருந்தோம். திடீரென்று விருது பெற்ற நடிகர், நடிகைகள் உட்கார்ந்து இருந்த பகுதியை பார்த்தேன். காலியாக இருந்தது. அவர்கள் விருது பெற்ற உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது தெரிய வந்தது. நான் அதிர்ச்சியானேன்.
பெரியவர்கள் உட்கார்ந்து இருக்கும் விழாவில் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது மரியாதைக்குரிய செயல் அல்ல. எல்லா நடிகர், நடிகைகளும் குடும்பங்களுடன் வந்திருந்தனர். எல்லோரும் சேர்ந்து வெளியேறியது அவமரியாதையான செயல். நான் தி.மு.க. சார்பில் விழாவில் பங்கேற்கவில்லை. சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அழைக்கப்பட்டிருந்தேன்.
வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் கிளம்பிவிட்டதாக நடிகர், நடிகைகள் சொல்லலாம். பெருமளவு பணிச்சுமைக்கு நடிவிலும் சினிமா வளர்ச்சிக்காக உழைக்கும் 87 வயதுடைய முதல்வர் 2 மணி நேரம் விழா மேடையில் உட்கார்ந்து இருக்கிறார். நடிகர், நடிகைகளால் ஏன் உட்கார முடியாது...", என்றார்.


Click it and Unblock the Notifications











