தேர்தலில் 'ஜெய் ஹோ' தவறில்லை-ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதை பெற்று தந்த 'ஜெய் ஹோ' பாடலை தங்கள் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது காங்கிரஸ் கட்சி. இதற்கென பெரும் விலை கொடுத்து இந்த பாடலின் உரிமையை டி சீரிஸ் நிறுவனத்திடமிருந்து காங்கிரஸ் கட்சி வாங்கி உள்ளது. நாடெங்கும் காங்கிரஸ் தலைவர்கள் பேசும் கூட்டங்களில் இப்பாடலை போடுகின்றனர்.
இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
'ஸ்லட்டாக் மில்லினர்' படம் இந்திய ஏழ்மையை அம்பலப்படுத்தும் படம். அதில் உள்ள விஷயங்கள் அனைத்தும் உண்மையே. நாட்டை அந்த நிலைக்குக் கொண்டு போய்விட்டது காங்கிரஸ். அந்த கட்சிதான் சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இந்திய மக்களை குடிசைகளிலேயே வைத்துள்ளது. ஆக இப் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைப்பதற்கு காரணமே காங்கிரஸ்தான். ஆனால் ரஹ்மானின் பாடல் இந்திய மக்களின் பொதுச் சொத்து. அதை காங்கிரஸ் மட்டும் உரிமை கொண்டாடுவது தவறு என விமர்சனம் செய்துள்ளது பாஜக.
இந் நிலையில் 'ஜெய் ஹோ...' பாடலை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவது பற்றி ரஹ்மானிடம் கருத்து கேட்டபோது,
ஜெய்ஹோ... பாடல் தனிப்பட்டவருக்கு சொந்தமானதல்ல எல்லோருக்கும் பொதுவானது. எல்லா இடங்களிலும் இப்பாடல் பயன்படுத்தப்படுகிறது. பேஷன் ஷோக்களில் போடுகின்றனர். சிங்கப்பூரில் நடந்த சில நிகழ்ச்சிகளிலும் இந்த பாட்டை பயன்படுத்தியுள்ளனர்.
தேர்தல் பிரசாரத்துக்கும் இந்த பாடலை கொண்டு போய் இருப்பது சந்தோஷமான விஷயம்தான். எந்தக் கட்சி பயன்படுத்தினாலும் சந்தோஷமே...
நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. யாருக்கும் தேர்தலில் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. வாக்காளர்கள் திறமையான வேட்பாளர்களை தேர்வு செய்து ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் ரஹ்மான்!.


Click it and Unblock the Notifications











