twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் வாங்குவேன் என கனவு கூட கண்டதில்லை: ரசூல் பூக்குட்டி!

    By Staff
    |

    Oscars 2009 - 81st Annual Academy Awards
    எனது கனவுகள் எதிலுமே ஆஸ்கர் வந்ததில்லை. ஆனால் அந்த விருதினைப் பெற்றபோது என்னால் நம்பவே முடியவில்லை. சினிமாவுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இந்த ஆஸ்கர் விருது மிகப் பெரிய ஆச்சரியம் என்கிறார் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் ஒலிக் கலப்புக்கான ஆஸ்கர் விருதினைப் பெற்றுள்ள இந்தியரான ரசூல் பூக்குட்டி.

    ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஒலிக் கலப்பாளராக பணியாற்றியவர் ரசூல். ரஹ்மானுடன் சேர்த்து இவருக்கும் ஆஸ்கர் கிடைத்தது.

    இந்த விருதினைப் பெற்ற ரசூல் பூக்குட்டி, இன்னும் அந்தக் கனவிலிருந்து மீளாமல் உள்ளார்.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் விலக்கப்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் பூக்குட்டி. அங்குள்ள அரசுப் பள்ளியில்தான் பள்ளிப்படிப்பை முடித்தார். பூக்குட்டியின் குடும்பம் பெரியது.

    தந்தை பூக்குட்டி, தாயார் நபீசா பீவி. இந்தத் தம்பதிக்கு எட்டு குழந்தைகள். கடைக்குட்டிதான் ரசூல் பூக்குட்டி.

    இவரது குடும்பத்திற்கும், சினிமாவுக்கும் சற்றும் சம்பந்தம் இல்லை. ஆனால் சினிமாவை பூக்குட்டி காதலித்ததால் இன்று ஆஸ்கர் வரை வந்து நிற்கிறார்.

    விருது விழாவுக்காக லாஸ் ஏஞ்செலஸ் செல்வதற்கு முன்பு அவர் தனது ஸ்லம்டாக் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் ..

    நான் சினிமாவை நேசித்தேன். ஆனால் சினிமாவின் மிகப் பெரிய பிரபலங்களோடு இணைந்து பணியாற்றுவேன் என்று ஒருபோதும் நினைத்துக் கூட பார்த்ததில்லை.

    எனது குடும்பத்தில் யாருக்குமே சினிமாவுடனோ அல்லது வேறு பொழுதுபோக்கு ஊடகத்துடனோ சம்பந்தம் கிடையாது.

    பி.எஸ்.சி இயற்பியலை முடித்த எனக்கு சினிமா எதிர்பாராமல் வந்தது. புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் டிவி கழகத்தில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்தேன். இயற்பியல் தொடர்பான படிப்புப் படிக்கவே நினைத்து அங்கு விண்ணப்பித்தேன்.

    ஆனால் கல்லூரியில் சேர்ந்து ஒரு வாரத்திற்குப் பின்னரே அது என்ன மாதிரியான படிப்பு என்பது எனக்குப் புரிய வந்தது. மேலும் ஒலி என்பது சினிமாவில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் புரிந்து கொண்டேன்.

    இருப்பினும் என்னால் முதல் வருடத்தை சரியாக முடிக்க முடியவில்லை. இதனால் திருவனந்தபுரம் திரும்பி மீண்டும் நுழைவுத் தேர்வுக்கு தயாரானேன். கூடவே சட்டப் படிப்பிலும் சேர்ந்தேன்.

    பின்னர் 1991ம் ஆண்டு எனக்கு மீண்டும் புனே இன்ஸ்டிடியூட்டில் இடம் கிடைத்துத. எனது வாழ்க்கையில், திருப்புமுனை ஏற்பட்டது.

    ஒலிப்பதிவில் எனக்கு ஏற்பட்ட ஆர்வம் காரணமாக மும்பைக்கு இடம் பெயர்ந்தேன். நமது படங்களை விட மேற்கத்திய படங்களில் ஒலி மிகத் துல்லியமாக, இயற்கையாக இருப்பது குறித்து நான் பலமுறை வியந்திருக்கிறேன், யோசித்திருக்கிறேன்.

    இந்த நிலையில்தான் ரஜத் கபூரின் பிரைவேட் டிடெக்டிவ் படம் கிடைத்தது. அப்படத்தின் ஷூட்டிங்கின்போது செட்டில் ஒரு சத்தம் கூட இல்லாமல் பார்த்துக் கொண்டார் கேமராமேன் ரவி.கே.சந்திரன்.

    பின்னர் நான் சாவரியா படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் ஸ்லம்டாக் தயாரிப்பாளர்களிடமிருந்து அழைப்பு வந்தது.

    எனக்கு ஹாலிவுட்டில் மிகவும் பிடித்த இயக்குநர்களில் டேனி பாயிலும் ஒருவர். அவரிடமிருந்து அழைப்பு வந்ததால் வியந்து போனேன்.

    முதன் முதலாக அவரை நான் சந்தித்தபோது நான் பணியாற்றிய படங்களின் பட்டியலுடன் அவர் நின்றிருந்தார். இதில் எந்தப் படத்தைப் பார்த்தால் உங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்று கேட்டார்.

    எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. எனது எல்லாப் படங்களிலும் நான் இருப்பேன். எனவே எல்லாவற்றையும் பாருங்கள் என்றேன்.

    ஸ்லம்டாக்கில், இயற்கையான சத்தமே தனக்குத் தேவை என டேனி பாயில் கூறி விட்டார். மும்பை நகரின் இயற்கையான ஒலிகளை பதிவு செய்வது என்பது சாதாரணமானதல்ல. மிகவும் சவாலான அந்தப் பணியை கவனத்துடன் மேற்கொண்டேன்.

    தயாரிப்புக்குப் பிந்தைய வேலைகள் எல்லாம் லண்டனில் நடைபெற்றது. இதனால் எனக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையே நேரடித் தொடர்புக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இருப்பினும் ஒலிச் சேர்ப்பு மற்றும் இசை தொடர்பாக இருவரும் பல தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம் என்றார் பூக்குட்டி.

    ஆஸ்கருக்கு முன்னதாக ஸ்லம்டாக் படத்திற்காக பாஃப்டா விருதினையும், சினிமா ஆடியோ சொசைட்டி விருதுகளையும் பெற்றார் பூக்குட்டி.

    இந்தியாவைச் சேர்ந்த டெக்னீஷியன்களுக்கும் வெளிநாடுகளில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சந்தோஷத்துடன் கூறுகிறார் பூக்குட்டி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X