twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்பொனி..நொடி நேரம் போதும், ஆனால்...!-இளையராஜா

    By Staff
    |

    Ilayaraja
    சிம்பொனி போன்ற ஆல்பங்களைப் படைக்க நொடி நேரம் போதும்... ஆனால் அந்த இசை முழுமையாக போய் சேருவதில்லை. பைரஸி, டவுன்லோடிங் போன்ற பிரச்சனைகளால் அத்தகைய முயற்சிகளை நான் மேற்கொள்ளவில்லைஎன்றார் இளையராஜா.

    இசைஞானி இளையராஜாவுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரைச் சந்திக்க 200க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், தொலைக்காட்சி கேமராமேன்கள் தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டில் குவிந்தனர்.

    அப்போது ராஜா வீட்டில் இல்லை. பின்னர் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்தவரை பத்திரிகையாளர்கள் சூழந்து கொண்டனர்.

    சிறிதுநேரம் அவர்களின் அன்புப் பிடியில் சிக்கிக் கொண்டார் இளையராஜா. விரும்பியவரை புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்த இசைஞானி, பின்னர் அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு இப்படிச் சொன்னார்:

    இந்த விருது உங்களுக்கே கிடைத்த சந்தோஷத்தோடு என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்... அந்த சந்தோஷத்திலும் என் முகத்திலும் பிரதிபலிக்க விரும்புகிறீர்கள்... அது எனக்கு சந்தோஷமாக உள்ளது.

    மற்றபடி இது எந்த அளவு சந்தோஷம் என்று அளவெல்லாம் சொல்ல முடியாது.

    கலைஞர்களை கெளரவப்படுத்தும் விருதாக இதைக் கருதுகிறேன். கலைஞர்கள் மேலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஊக்குவிப்பதற்காக, இதுபோன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இந்த விருது எனக்கு அடையாளம் கொடுக்கவில்லை. என் இசைக்கு கிடைத்த பாராட்டாக இதை கருதுகிறேன். விருது கொடுத்திருக்கிறார்கள் எனும்போதே, நாங்கள் யாரும் இந்த விருதை 'வாங்கவில்லை' என்பது உறுதியாகிறதல்லவா... அது இன்னும் சந்தோஷம்... இந்த விருதினைப் பெற்ற அனைவர் சார்பாகவும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    பின்னர் நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு ராஜா சொன்ன பதில்களும்...

    இந்த அங்கீகாரம் உங்களுக்கு தாமதமாகக் கிடைத்ததாக நினைக்கிறீர்களா?

    இது அங்கீகாரமல்ல... பாராட்டு. தாமதம் என்றெல்லாம் ஏன் நினைக்க வேண்டும்...கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்திருக்கிறது.

    ரஹ்மானுக்கும் பத்மபூஷண் விருது தந்திருக்கிறார்களே...

    இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

    கிராமிய இசை பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதா?

    எதை முன்னுக்கு வர வைப்பது, எதை பின்னுக்கு தள்ளுவது என்பதை காலம் தீர்மானிக்கும். இந்த நேரத்தில் எதற்கு இந்தக் கேள்வியெல்லாம்...

    இதுபோன்ற விருதுகள், தென்னிந்தியர்களுக்கு காலதாமதமாக வழங்கப்படுவதாக கருதுகிறீர்களா?

    தாமதமாக வழங்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. வடக்கு, தெற்கு பேதங்களை எல்லாம் அரசியல்வாதிகளிடம் கேளுங்கள். என்னிடம் கேட்க வேண்டாம்.

    சிம்பொனி போன்ற முயற்சி தொடருமா?

    அதற்கு விநாடி நேரம் போதும். ஆனால், இப்போதுள்ள பைரஸி, டவுன்லோடிங் போன்ற சமாச்சாரங்கள் அந்த முயற்சிகளைத் தடுக்கின்றன என்றார் ராஜா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X