மதுரையைவிட்டு இப்போதைக்கு 'எஸ்கேப்'! - அமீர்

இவர்கள் இருவரும் கண்ணபிரான் என்ற படத்துக்காக இணையப் போவதாக முதலில் அறிவிப்பு வந்தது. இந்தப் படத்தை எடிட்டர் மோகனே தயாரிப்பதாக இருந்தது.
ஆனால் இப்போது அன்பு பிக்சர்ஸ் சார்பில் தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன் தயாரிக்கும் படத்தை இயக்குவதாகவும் இதிலும் ஜெயம் ரவியே ஹீரோ என்றும் அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர். ஆனால் இந்தப் படம் கண்ணபிரான் அல்லவென்றும், அந்தப் படத்தை ஜெயம் ரவியை வைத்து பின்னர் இயக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார் இயக்குநர் அமீர்.
சமீபத்தில் நடந்த ஆதிபகவன் பிரஸ்மீட்டில் இயக்குநர் அமீர் பேசியதாவது:
ராம், பருத்தி வீரன் போன்ற படங்களுக்கு பின்னர், விருதுப்பட இயக்குநர் என்ற முத்திரை எனக்கு விழுந்தது. இதை நான் விரும்பவில்லை. நான் வெகுஜன திரைப்படங்களைப் பார்த்துத்தான் திரையுலகுக்கு வந்தேன். விருது பெறும் நோக்கில் நான் வரவில்லை. ஜெயம் ரவியை வைத்து கண்ணபிரான் என்ற படத்தை தொடங்க இருந்தோம். இது பருத்திவீரன் போல கதையம்சம் கொண்டது. ஆனால், இப்போது இந்தப் படத்தை எடுக்கும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளேன்.
ஜன ரஞ்சகமான படத்தை தர வேண்டும் என்பதாலேயே ஆதிபகவன் என்ற படத்தை இப்போது எடுக்கிறேன். இது கண்மூடித்தனமான ஒரு காதல் கதை.
இதன் படப்பிடிப்பு முழுவதையும் சென்னையில் நடத்த உள்ளேன். மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இப்போது ஒரே நேரத்தில் 15 திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதனால்தான் மதுரையை விட்டு வந்தால் போதும் என்று எஸ்ஸாகிவிட்டேன்.
இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெ. அன்பழகனை ஒரு அரசியல்வாதியாக நான் பார்க்கவில்லை. அவரை சிறந்த ரசிகராகவே பார்க்கிறேன். இந்தப் படத்துக்காக பட்ஜெட் கணக்கு பார்க்காமல் விருப்பப்பட்ட மாதிரி படமெடுக்கும் சுதந்திரத்தை எனக்குத் தந்துள்ளார். அந்த சுதந்திரம்தான் படைப்பாளிக்கு முக்கியம். சம்பளமெல்லாம் ரெண்டாம்பட்சம்தான்," என்றார் அமீர்.


Click it and Unblock the Notifications











