விண்ணைத் தாண்டி வருவாயா -2 எடுக்கும் திட்டமில்லை! - கவுதம் மேனன்
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. இதுகுறித்து சும்மா பேசிக் கொண்டிருந்தோம். அது செய்தியாகிவிட்டது, என்று இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா நடிப்பில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் பெரும் வெற்றியடைந்தது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை கவுதம் மேனன் எடுப்பார் என்றும் அதில் சிம்பு நடிப்பார் என்றும் கூறப்பட்டது. நாயகியாக எமி ஜாக்ஸன் நடிப்பார் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த செய்திக்கு இப்போது மறுப்பு தெரிவித்துள்ளார் கவுதம் மேனன். தனது பிஆர்ஓ மூலம் அவர் விடுத்துள்ள அறிக்கையில், "விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா என நாங்கள் ஆலோசித்து வந்தோம். அது ஒரு ஐடியாதான். முடிவல்ல. ஆனால் அதற்குள் செய்தி வந்துவிட்டது.
நிச்சயம் சிம்புவுடன் இணைந்து ஒரு படம் பண்ணும் திட்டம் உள்ளது. 2012 ஜூனில் இந்தப் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளேன். அவருடன் பணியாற்றுவது சுவாரஸ்யமான அனுபவம். இந்தப்படம் குறித்து இருவரும் பேசிக் கொண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











