தாய்மையால் ஐஸ்வர்யாவின் அழகு மேலும் பல மடங்கு அதிகரிக்கும்-சுஷ்மிதா சென்
மிகவும் அழகான பெண் ஐஸ்வர்யா ராய். இப்போது தாய்மயடைந்திருப்பதால் அவரது அழகு மேலும் பல மடங்கு கூடவே செய்யும். அழகான தாயாக ஐஸ்வர்யா விளங்குவார் என்று கூறியுள்ளார் சுஷ்மிதா சென்.
ஐஸ்வர்யாவும், சுஷ்மிதாவும் சம காலத்து அழகிகள். இருவருமே சர்வதேச அளவில் உலக அழகிப் பட்டங்களை தட்டிச் சென்றவர்கள். 1994ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை முதலில் சுஷ்மிதா வெல்ல, அதே ஆண்டில் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை ஐஸ்வர்யா அள்ள, இந்தியாவுக்கு இரட்டை சந்தோஷமாகியது. அழகிய இந்தியாவுக்கு இருவருமே இரு கண்கள் போன்றவர்கள்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் தாய்மையடைந்திருப்பது குறித்தும், இதன் காரணமாக அவரை ஹீரோயின் படத்திலிருந்து நிறுத்தி வைக்கும் முடிவு குறித்தும் சுஷ்மிதா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுஷ்மிதா கூறுகையில், ஐஸ்வர்யா மிகவும் அழகான பெண். நமது நாட்டுக்கு நிறைய பெருமைகளைத் தேடிக் கொடுத்தவர். நாங்கள் இருவருமே சர்வதேச அளவில் வெற்றி பெற்றவர்கள். ஐஸ்வர்யா ராய் ஒரு அழகான தாயாக விளங்குவார். தாய்மையால் அவரது அழகு மேலும் பல மடங்கு கூடும் என்பதில் சந்தேகமில்லை.
இயற்கையாகவோ அல்லது மன ரீதியாகவோ நீங்கள் தாய்மை உணர்வை உணரும்போது, நீங்கள் புதிய வாழ்க்கை அத்தியாயத்தில் புகும் அனுபவத்தைப் பெறுவீர்கள். எனக்கு அந்த உணர்வு நிச்சயம் உண்டு. இப்போது ஐஸ்வர்யாவும் அந்த தாய்மை உணர்வை அனுபவித்து வருகிறார்.
ஐஸ்வர்யாவுக்காக நான் சந்தோஷப்படுகிறேன், அபிஷேக், அவரது குடும்பத்தினர் அனைவரையும் வாழ்த்துகிறேன். கடவுள் ஐஸ்வர்யாவின் குழ்நதையை ஆசிர்வதிக்கட்டும் என்றார்.
சில தயாரிப்பாளர்கள் ஒரு படத்தில் ஒப்பந்தமாகும் நடிகைகள் அதை முடித்துக் கொடுக்கும் வரை கர்ப்பமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனையை ஒப்பந்தத்தில் சேர்க்கவுள்ளதாக கூறப்படுவது குறித்த கேள்வியைக் கேட்டதும் பொங்கி விட்டார் சுஷ்மிதா.
அப்படி யாராவது என்னிடம் வந்து கூறினால், அந்த தயாரிப்பாளரை முதலில் எழுந்து போங்கள் என்று கூறி விடுவேன். நான் ஒரு தொழில் முறையிலான நடிகை என்பதை நீங்கள் அங்கீகரிக்காவிட்டால் என்னிடம் வரக் கூடாது. நான் ஒரு தொழில்ரீதியான நடிகை என்பதில் நம்பிக்கை வைத்தால் எனது தொழில் பக்தியை சந்தேகப்படக் கூடாது, கேள்வி கேட்கக் கூடாது, நிபந்தனை போடக் கூடாது.
இந்த காலகட்டத்துக்குள் நீங்கள் கர்ப்பம் தரிக்கக் கூடாது என்று யாராவது கூறினால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார் சுஷ்மிதா.
சுஷ்மிதா சென் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications