எனக்கு ரொம்ப பிடித்தது எல்லாம் போய்விட்டது.. மனைவியுடனான பிரிவுக்கு பின் மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அடுத்ததாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கும் அத்தனை பாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. இதற்கிடையே கடந்த வருடம் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார் ரஹ்மான்.
கோலிவுட்டில் அறிமுகமாகி பாலிவுட், ஹாலிவுட் உள்ளிட்டவைகளில் ஃபேமஸ் ஆனவர் ஏ.ஆர்.ரஹ்மான். 58 வயதாகும் அவருக்கு உலகம் முழுவதும் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். தொடர்ந்து படங்களுக்கு பிஸியாக இசையமைத்துவரும் ரஹ்மான் தற்போது ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் காதலிக்க நேரமில்லை படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அந்தப் படமானது ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

விவாகரத்து: இதற்கிடையே திரைத்துறையில் மிஸ்டர் க்ளீன் இமேஜில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரை சுற்றி தேவையில்லாத சர்ச்சைகள், கிசுகிசுக்கள் எதுவும் வந்ததில்லை. ஆனால் அவருக்கு கடந்த வருடம் அப்படி இல்லை. தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக அவர் அறிவித்தது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சூழல் இப்படி இருக்க மனைவியுடனான பிரிவுக்கு பின் முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “எல்லா இடங்களிலும் நம்மால் சரியாக இருக்க முடியாது. அவசர அவசரமாக விமானத்தை பிடிக்க நான் சென்றுகொண்டிருக்கும்போது பத்து பேர் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னால் என்னால் என்ன செய்ய முடியும். அந்த நேரத்தில் என்ன முடிகிறதோ அதை செய்ய வேண்டும். முடிந்த அளவுக்குத்தான் ஒருவரால் நல்லவராக இருக்க முடியும். வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை பார்க்கிறோம்.
அன்பின் வழி: ஆஸ்கர் மேடையில் நான் பேசியபோது அன்பின் வழியை தேர்ந்தெடுத்ததாக கூறினேன். இப்போதும் அன்பின் வழியைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். ஒரு விஷயத்தை முன்கூட்டியே முடிவு செய்துவிட வேண்டும். நமது வாழ்க்கையில் என்ன நடந்தாலும் இதே மாதிரிதான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திட வேண்டும். என்னுடைய சின்ன வயதில் அப்பாவை இழந்தேன்; பிறகு பாட்டியை இழந்தேன். மயில், நாய்க்குட்டியை வளர்த்தேன். அவைகளையும் நான் இழந்துவிட்டேன்.
எதுவும் நிரந்தரம் இல்லை: வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. எதெல்லாம் நமக்கு ரொம்ப பிடிக்கிறதோ அதெல்லாம் நம்மை விட்டு போய்விடுகின்றன. அது கடவுள் எனக்கு கொடுக்கும் பயிற்சி என்று நான் நினைத்துக்கொள்வேன். அதனால் இதையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும். சிறு வயதில் எனக்கு ஒரு இசை கருவி மேல் ரொம்ப ஆசை. ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை. பிறகு அதை பற்றி நினைப்பதை விட்டுவிட்டேன். ஆனால் ஒருகட்டத்தில் அது என்னிடம் வந்துவிட்டது. அப்போதுதான், 'எல்லா விஷயங்களில் இருந்தும் கொஞ்சம் தள்ளி இருந்தால் நமக்கு தேவையானது நமக்கு கிடைக்கும்’ என்று புரிந்துகொண்டேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











