Exclusive: அவங்கள ஊசி போட்டு கொல்லணும்; தமிழ் எழுத தெரியலையா கட்டை விரலை வெட்டுங்க- மாரிமுத்து கொந்தளிப்பு
சென்னை: ஒரு வேலையை கச்சிதமாக செய்ய தெரியாதவர்களை எல்லாம் ஊசி போட்டு கொன்றுவிட வேண்டும் என நடிகர் மாரிமுத்து கூறியிருக்கிறார்.
இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. வசந்த்திடம் ஆசை,ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி படத்திலும், சீமானின் முதல் படமான பாஞ்சாலாங்குறிச்சியிலும், மணிரத்னத்திடம் பாம்பே உள்ளிட்ட படத்திலும் வேலை செய்திருக்கிறார் மாரிமுத்து.

இயக்குநராக மாரிமுத்து
உதவி இயக்குநராக இருந்த மாரிமுத்து ஒருகட்டத்தில் இயக்குநராக மாறினார். அப்படி அவர் எடுத்த படம் கண்ணும் கண்ணும். பிரசன்னா, உதயதாரா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும் வடிவேலுவின் காமெடி எவர்க்ரீனாக அமைந்தது. இதனையடுத்து படங்கள் இயக்காமல் இருந்த மாரிமுத்து விமல் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு புலிவால் படத்தை இயக்கினார். இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

நடிகரான மாரிமுத்து
சூழல் இப்படி இருக்க இயக்குந்ர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார் இயக்குநர் ஜி. மாரிமுத்து. முதல் படத்திலேயே அவரது நடிப்பு பலரையும் கவர தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அன்றிலிருந்து இன்றுவரை பிஸியான நடிகராக வலம்வருகிறார் மாரிமுத்து. சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் மாரிமுத்து தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்துவருகிறார். இதிலும் அவரது நடிப்பு பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. அதேசகயம் மாரிமுத்து பிற்போக்குத்தனமானவர் என்று சிலர் பேசுவதும் உண்டு.

ஒரு வேலையை முழுமையா செய்யாதவங்கள ஊசி போட்டு கொல்லுங்க
இந்நிலையில் தன்னை சமூக வலைதளங்களில் பிற்போக்குத்தனமானவர் என ட்ரோல் செய்பவர்கள் குறித்து தமிழ் பிலிமிபீட்டிடம் பேசிய மாரிமுத்து, 'ஒரு விஷயத்தை செய்தால் அதை முழுமையாக ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். ஆனால் இங்கு பலர் அப்படி இருப்பதில்லை. ஒழுங்காக முடி வெட்டுவது கிடையாது, நகம் வெட்டுவது கிடையாது, காலணிகளை எப்படி கழற்றிவிட வேண்டும் என்பதை அறிந்துகொள்வது கிடையாது. பிறகு ஏன் இவர்கள் இருக்க வேண்டும். ஒரு வேலையை கச்சிதமாக செய்ய முடியாதவர்கள் இந்த பூமியில் இருப்பதற்கு லாயக்கற்றவர்கள். அவர்களை எல்லாம் ஊசி போட்டு கொன்று கடலில் வீச வேண்டும்.

நான் பழமைவாதியா; நான்தான் புதுமைவாதி
என்னை பலர் பழமைவாதி, பிறப்போக்குவாதி என்கின்றனர். ஆனால் நான்தான் இருப்பதிலேயே புதுமைவாதி. எனது மகனுக்கும், மகளுக்கும் வேற்று சாதியில்தான் திருமணம் செய்துவைக்கப்போகிறேன். நான் ஜாதகத்தையோ, நல்ல நேரத்தையோ நம்புவதில்லை. நான் முழுக்க முழுக்க பகுத்தறிவுவாதி. ஜாதக பொருத்தம் பார்ப்பதற்கு பதிலாக முதலில் மருத்துவம் சார்ந்து சில விஷயங்களை பார்க்க வேண்டும். இப்போது சொல்லுங்கள் நான் பழமைவாதியா இல்லை புதுமைவாதியா என்று.

தமிழ் எழுத தெரியலனா கட்டை விரலை வெட்டுங்க சார்
அதேபோல், தமிழ் மொழியையே இங்கு பல பேர் தப்பாக எழுதுறாங்க. உதாரணத்திற்கு கோவலம் 45 கிமீ என்று எழுதுவதற்கு பதில் கேவலம் 45 கிமீ என்று எழுதுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஏன் பேனா பிடிக்கிறார்கள். தமிழ் மொழியை ஒழுங்காக எழுதாதவர்களின் கட்டை விரலை வெட்ட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழை தவறாக எழுதுபவர்களுக்கு தண்டனை கொடுத்து அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றையும் வெளியிட வேண்டும். இந்த நாடு குட்டிச்சுவரா போயிட்டு இருக்கு சார்' என்று கூறினார்.

சர்ச்சையில் சிக்கிய ஜி.மாரிமுத்து
முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு மாடர்ன் உடையில் இருக்கும் ஒரு பெண் Can I Call You என்று கேட்பது போல் பதிவிடப்பட்டிருந்தது. அதற்கு மாரிமுத்துவின் புகைப்படம் இருக்கும் அக்கௌண்ட்டிலிருந்து Yes என்று கூறி ஒரு மொபைல் நம்பரும் கமெண்ட் செய்யப்பட்டிருந்தது. கமெண்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த நம்பர் மாரிமுத்துவின் நம்பர் ஆகும். இதனையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. மேலும் மாரிமுத்துவை பலரும் ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர்.

மாரிமுத்து மகன் அளித்திருக்கும் விளக்கம்
இந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் சூழலில் மாரிமுத்துவின் மகனான அகிலன் தனது ட்விட்டர் பக்கத்தில், " அந்தப் பதிவில் கமெண்ட் செய்திருப்பது எனது தந்தையின் அக்கவுண்ட் கிடையாது. அவரின் ஃபோன் நம்பர் பெரும்பாலானோருக்கு தெரியும். அதனால் யாரோ அதனை தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர்" என குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











