என் நண்பன் விஜயகாந்தின் இடத்தை விஜய் நிரப்பிவிட்டார்.. நடிகர் தியாகு பேட்டி!
சென்னை: நடிகரும் விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான தியாகு, சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பேசியுள்ள கருத்துகள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, விஜயகாந்தின் இடத்தை இன்று விஜய் நிரப்பிவிட்டார் என்ற அவரது கருத்து அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தியாகு பேட்டி: அந்த பேட்டியில் பேசிய தியாகு, என் நண்பன் விஜயகாந்த் ஒருநாள் முதலமைச்சராக வருவார் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், அந்த இடத்தை இன்று தம்பி விஜய் நிரப்பிவிட்டார். விஜய் முதலமைச்சராகி இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சீரும் சிறப்புமாக ஆட்சியை நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம். லஞ்சம், போதைப்பொருள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிப்பதாக விஜய் கூறியுள்ளார். அவர் சொன்னதை நிச்சயம் செய்து காட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அமைதியான முறையில் ஆட்சியை நடத்தி வருகிறார். அது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவர் தனது பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார்" என தெரிவித்தார்.

அமைதியான ஆட்சி: அதேபோல், திமுக இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்கலாம் என்று கூறி வருவதாகவும், ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றும் தியாகு கருத்து தெரிவித்தார். திருமாவளவன் முதல் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் வரை பலரும் விஜயின் பக்கம் சென்று விட்டனர். அதனால் உறுதியாக ஐந்து ஆண்டுகள் விஜய் தான் ஆட்சி செய்வார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

திரைத்துறையில் விஜயகாந்த் மற்றும் தியாகு பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். விஜயகாந்த் நடித்த பல படங்களில் தியாகு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு இவர்களின் நட்பு குறைந்தது. இதனால் இவர்களுக்கிடையே சிறிய கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டதால், விஜயகாந்த் அரசியலில் இருந்தபோது தியாகு ஜெயலலிதாவின் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விஜயகாந்தின் அரசியல் கனவை நினைவுகூர்ந்து, அவரது இடத்தை இன்று விஜய் நிரப்பியுள்ளதாக தியாகு கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications