எந்த படமும் ஹீரோவால ஓடுனது இல்ல.. குரங்கு நடித்தாலும் படம் ஓடும்.. விஜய் ஆண்டனி கிண்டல்!
சென்னை: இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி. இவர், நான், சலீம், பிச்சைக்காரன் 1, சைத்தான், எமன், இந்தியா பாகிஸ்தான் என பல தரமான திரைப்படங்களை கொடுத்து இருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மார்கன். இப்படத்தை அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி உடன் அஜய், சமுத்திரக்கனி, ப்ரகிடா, தீப்ஷிகா என பலரும் நடித்துள்ளனர்.
க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய, நடிகர் விஜய் ஆண்டனி, ஒவ்வொரு படத்தை தயாரிக்கும் போது தயாரிப்பாளருக்கு டென்ஷன் இருக்கும், நியாயப்படி பார்த்தால் எனக்கு தான் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் டென்ஷன் இருந்திருக்க வேண்டும். ஆனால், என்னுடைய டென்ஷனை எல்லாம் தனஞ்செயன் அவர்கள் எடுத்துக் கொண்டார். அவருக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட ஒரு நண்பர்களை நான் சினிமாவில் சம்பாதித்து இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

குரங்கை வைத்து படம் எடுத்தாலும்: நான் பல வெற்றி, தோல்விகளை பார்த்து இருக்கிறேன். ஆனால், இந்த மார்கன் படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று. ஏனென்றால் இந்த திரைப்படத்தில் என் மனத்திற்கு பிடித்த நெருக்கமான இரண்டு பேரை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அதில் ஒருவர் தான், இயக்குனர் லியோ ஜான் பால். எந்த படம் வெற்றி பெற்றாலும் அது ஹீரோவால் இல்லை, இயக்குநரால் தான். கடவுளே கதாநாயகனாக நடித்தாலும் கூட டைரக்டரின் கதையும், டைரக்ஷனும் சரியாக இல்லை என்றால் அந்த படம் ஒரு நாள் கூட ஓடாது. அதேபோல, ஒரு இயக்குனர் குரங்கை வைத்து படம் எடுத்தாலும் ஓடும், அவருடைய எழுத்தும் அழுத்தமாக இருந்தால். மார்கன் படம் வெற்றி பெற்றதற்கு முழு காரணம் இயக்குனர் லியோ ஜான் பால் தான். இனி வரும் காலங்களில் லியோவை வைத்து யார் படத்தை எடுத்தாலும் அந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைப்பார்.
சகோதரியின் மகன்: அதேபோல என்னுடைய சகோதரியின் மகன் அஜய்யை இந்த படத்தில் நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.அவரை அறிமுகப்படுத்துகிறோமே படம் நன்றாக வரவேண்டும் என்று பயம் இருந்தது. அந்த பயம் இப்போது என்னிடம் இல்லை. இந்த படத்தை தொடர்ந்து, பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இரண்டாவது படத்திலேயே ஒரு பெரிய இயக்குனருடன் அவர் இணைவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த படத்தின் கதையை நான் கேட்டேன், உண்மையில் அந்த கதை நன்றாக இருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக, அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சக்தித் திருமகன் படம் வெளியாக இருக்கிறது. படத்தை பார்த்த அனைவரும் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். அந்த படத்திற்கு பின் லாயர் படம் வெளியாக இருக்கிறது. நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம் என விஜய் ஆண்டனி பட விழாவில் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











