கணவன் இறந்து 20 வருஷமாச்சு.. மொட்டை அடிக்க இதுதான் காரணம்? நடிகை சாந்தி பிரியா பேட்டி!
சென்னை: பிரபல நடிகை பானு பிரியாவின் சகோதரியான சாந்தி பிரியா, நடிகர் ராமராஜனுடன் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தின் நாயகியாக நடித்திருந்தார். கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இடம் பெற்ற 'செண்பகமே செண்பகமே' பாடல் சாந்தி பிரியாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அந்த நேரத்தில் கொடிகட்டி பறந்த இவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது, மீண்டும் சினிமாவில் என்ட்ரியாகி இருக்கும் இவர், மறைந்த கணவர் குறித்து பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகை சாந்தி பிரியா, தனது அக்கா பானுபிரியாவை பீட் பண்ணும் அளவுக்கு தன்னுடைய கேரியரில் உச்சத்தில் இருந்த நிலையில், 1992ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில், 2004-ஆம் ஆண்டு தான் சாந்தி பிரியாவின் கணவர் திடீரென உயிரிழந்தார். இந்நிலையில், நடிகை சாந்தி பிரியா Galatta Tamil சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகை சாந்தி பிரியா: நான் காதலித்து திருமணம் செய்து கொண்டது, என் அம்மாவிற்கு விருப்பம் இல்லை. அதற்கு காரணம் பாலிவுட்டில் இப்போதுதான் பிஸியாக நடித்துக்கொண்டு கொண்டிருக்கிறாய், இந்த நேரத்தில் திருமணம் தேவையா? என்று தான் கேட்டார்கள். ஆனால், அந்த நேரத்தில் காதல் என் கண்ணை மறைத்து விட்டதால் நான் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு குடும்பம் தான் முக்கியம் என்று எனக்குத் தோன்றியது. இதனால், சினிமாவில் இருந்து முழுமையாக விலகி, குழந்தைகள் மற்றும் கணவரை கவனித்துக் கொண்டேன்.
கணவர் இறந்துவிட்டார்: என் பெரிய மகனுக்கு 14 வயது, சின்ன மகனுக்கு 4 வயது இருக்கும்போதே என்னுடைய கணவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். அவர் மறைந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால், இப்பொழுதும் நான் அவருடைய நினைவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் . என் அம்மா பல முறை சென்னை வந்துவிடு என்று சொன்னார். ஆனால், அவர் வாழ்ந்த அந்த வீட்டை விட்டு என்னால் எங்கேயும் வரமுடியவில்லை, அவரது மரணம் என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அந்த நேரத்தில் நான் வெள்ளை நிற உடையைத் தவிர வேறு எந்த உடையையும் அணிந்துக்கொள்ளவில்லை. யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், நான் அப்படி மாறிவிட்டேன். என் நிலைமையைப் பார்த்த என் அம்மா மிகவும் பயந்துவிட்டார்கள், அப்போது அவர்கள் இரண்டு பசங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ இரண்டாவது திருமணம் செய்து கொள் என்றார்கள். எனக்கு அதில் ஈடுபாடு இல்லை.
இந்த நிலையில் இருந்து மீள வேண்டும் என்று நினைத்து பல விஷயங்களை நான் செய்தேன். கடைசியாக எனக்கும் ஏதோ ஒரு மாற்றம் வேண்டும் என நினைத்துத்தான் மொட்டை அடித்துக் கொண்டேன். ஆனால், இணையத்தில் பலர், சாந்தி பிரியாவிற்கு ஏதோ நோய் வந்துவிட்டது, வேண்டுதலுக்காக மொட்டை அடித்துக்கொண்டார் என்றெல்லாம் செய்திகள் பரவுகிறது. அது, உண்மை இல்லை, ஏதோ ஒரு மாற்றம் எனக்குள் வேண்டும் என்று முடிவு செய்து தான் மொட்டை அடித்துக் கொண்டேன் என்று சாந்தி பிரியா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











