Exclusive: 16 வருடங்களாக தமிழில் நடிக்காதது ஏன்? வீடியோ காலில் பேசிய அஜித்.. மனம் திறந்த பாவனா!
சென்னை: 2002ம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை பாவனா. அதன் பின், வெயில், கூடல் நகர், தீபாவளி, ராமேஸ்வரம், ஆர்யா, கிழக்கு கடற்கரை சாலை என தொடர்ந்து நடித்து வந்த இவர் திடீரென தமிழ் சினிமா பக்கமே தலைகாட்டவில்லை. ஜெயம் கொண்டான் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 16 வருடத்திற்கு பிறகு தற்போது தான் இவர் நடிப்பில் தி டோர் திரைப்படம் வெளியாக உள்ளது.
விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தில் பாவனா, கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், சிவரஞ்சனி, பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வருன் உன்னி இசையமைத்துள்ளார். ஜெய தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் டீசர் குறித்து எமது பிலிமிபீட் சேனலுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி: அண்ணாவின் திரைப்படமான The Door படத்தில் நடித்ததால், என்ன அட்வான்ட்டேஜ் இருந்தது?
பதில்: இது அண்ணாவின் திரைப்படம் என்பதால் கொஞ்சம் லேட்டாக வருவேன். மற்றவர்களின் திரைப்படமாக இருந்தால், சொன்ன நேரத்திற்கு அந்த இடத்தில் இருப்பேன். ஆனால் அண்ணாவின் படமாக இருந்ததால் கொஞ்சம் தாமதமாக சென்றேன். அது மட்டுமல்லாமல், அண்ணா சீனை சொல்லிவிட்டு உனக்கு எல்லாம் தெரியும், நீயே பார்த்துக்கோ என்று சொல்லிவிட்டார் அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
கேள்வி: The Door படத்தில் வருவது போல நிஜ வாழ்க்கையில் பேய் அனுபவம் உள்ளதா?
பதில்: நிஜ வாழ்க்கையில் இதுவரை அந்த பேய் அனுபவம் வந்தது. இல்லை. ஆனால், என் நண்பர்கள் சொல்லும் அதை கேட்டு இருக்கிறேன்.
கேள்வி: படத்தை எப்படி தேர்வு செய்து நடிப்பீர்கள்?
பதில்: சினிமாக்கு வந்த ஆரம்ப காலத்தில் அப்பா தான் கதைகளை தேர்வு செய்தார். ஆனால், இப்போது கதைகளை கேட்பது மட்டுமல்லாமல் ஸ்கிரிப்ட்டையும் படித்துவிட்டு, அது பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன்.

கேள்வி: தமிழ் திரைப்படங்களில் நடிக்காது ஏன்?
பதில்: தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடாது என்றெல்லாம் நான் முடிவு எடுக்கவில்லை. தமிழில் நடித்த போது எனக்கு ஒரு மேனேஜர் இருந்தார். அதன் பிறகு, அந்த மேனேஜர் இல்லை. அந்த நேரம், தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததும் நான் மலையாளம், கன்னடம் பக்கம் சென்றுவிட்டேன். என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை, நானும் யாருடமும் வாய்ப்பு கேட்டு பேசவில்லை. இதனால், பாவனா தமிழில் நடிக்க மாட்டார்கள் என்று பேச்சு வந்துவிட்டது. இதனால் தான், தமிழில் நடிப்பதற்கு இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
கேள்வி: 96 கன்னட ரீமேக்கில் நடித்தது ஏன்?
பதில்: வழக்கமாக நான், எந்த ரீமேக் படத்திலும் நடிக்க மாட்டேன். ஏற்கனவே ஒருவர் நடித்த கதாபாத்திரத்தில், நான் மீண்டும் அடிப்பதில் எனக்கு ஈடுபாடு இல்லை. இருந்தாலும் 96 திரைப்படம் தமிழில் சிறப்பான படம் என்று அனைவரும் என்னிடம் கூறியதால், இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அனைவரும் சொன்னதால், அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். ஆனால், படம் முடிகிற வரைக்கும் 96 திரைப்படத்தை நான் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
கேள்வி: உங்களை கடுப்பாக்கும் கேள்வி எது?
பதில்: 2022 மற்றும் 2023ம் காலகட்டத்தில் நான் மிகவும் குண்டாக இருந்தேன். அப்போது என்னை பார்ப்பவர்கள் அனைவரும் குண்டாயிட்டீங்க என்று கேட்டார்கள், இதை கேட்கும்போது கடுப்பாக இருக்கும், ஆனால் நான் உண்மையிலே அந்த காலகட்டத்தில் இயல்பை விட குண்டாக இருந்தேன்.
கேள்வி: எந்த நடிகருடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
பதில்: பிருத்வி, ஜெயம் ரவி, வினய் என பலருடன் மீண்டும் நடிக்க விருப்புகிறேன்
கேள்வி: நீங்க சொன்ன பெரிய பொய்?
பதில்: நான் சொன்ன மிகப்பெரிய பொய் என்னவென்றால் நான்காவது படிக்கும் போது, நண்பர்களிடம் எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னை பார்த்தாலே பயம். நான் உட்காரு என்றால் உட்காருவார்கள், போ என்றால் போவார்கள் என்று சொன்னேன். ஆனால் எனக்கு இருப்பது ஒரே ஒரு அண்ணன் மட்டும்தான். அப்போது சொன்ன பொய்யை இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பாக வருகிறது.
கேள்வி: தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாட்டு?
பதில்: தமிழில் நிறைய பாட்டுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதில் குறிப்பாக பாடறியேன் படிப்பறியேன் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல் அந்த பாடலை கேட்கும்போதே ஒருவிதமான உணர்வு வரும். அடுத்து, பூவ பூவே பாடல் இப்படி நிறைய பாடல்கள் இருக்கு.

அஜித் வீடியோ காலில் பேசினார்: துணிவு படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்தது குறித்து பேசிய பாவனா, துணிவு படத்தில் மஞ்சுவாரியார் நடித்த போது எப்போதுமே அஜித் உங்களை விசாரித்தார் என்று கூறுவார்கள். நானும், ஹாய் சொல்லுங்க என்று சொன்னேன். அப்போது ஒரு நாள் திடீரென இருவரும் வீடியோ காலில் பேசினார்கள். அப்போது அஜித் அவர்கள், படப்பிடிப்பு தளத்திற்கு வாங்க என்றார். அதன் பிறகு தான் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அஜித் அவர்களை சந்தித்து பேசினேன் என்றார். அஜித்துடன் நான் அசல் படத்தில் நடித்தேன். அந்த படத்திற்கு பிறகு எனக்கு தமிழ் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் வரவில்லை.

தொடர்ந்து பேசிய பாவனா, ஜெயம் ரவியுடன் நடித்த தீபாவளி படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம், அந்த படத்தில் நடித்த போது மிகவும் ஜாலியாக இருந்தது. அந்த படத்தில் நடித்த சுசி கதாபாத்திரத்தை நியாபகம் வைத்து சமூகவலைத்தளங்களில் அந்த பெயரில் இப்போது என்னை அழைத்து வருகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
நடிகை பாவனாவிற்கு 2018ம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக இருக்கும் பாவனா தனது கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வளவாக பதிவிட்டது கிடையாது, இதனால் இருவருக்கும் ஏதோ பிரச்சனை என்றெல்லாம் இணையத்தில் செய்திகள் பரவின. இதுகுறித்து பேசிய பாவனா, நானும் என் கணவரும் தினமும் ஜோடியா போட்டோ போட்டுட்டு இருக்க மாட்டோம், அப்படி போட்டா Cringeஆ இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











