என் புருஷனுக்கு கொடுத்து வைக்கல.. 8 வருஷம் தினமும் அழுதேன்.. டிஸ்கோ சாந்தி பேட்டி!
சென்னை: நடிகை டிஸ்கோ சாந்தி, உதய கீதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அழகும் திறமையும் இருந்த போதும், பட வாய்ப்பு கிடைக்காததால், கவர்ச்சி பாடலுக்கு ஆட்டம் போட்டு கவர்ச்சி நடிகையாக மாறினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி பல மொழிகளில் நடித்த டிஸ்கோரி சாந்தி, திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை டிஸ்கோ சாந்தி பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.
கேள்வி: அனைவரும் இப்போது கம்பேக் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் நீங்க எப்போ கம்பேக் கொடுப்பீங்க.
பதில்: விரைவில் மீண்டும் கம்பேக் கொடுப்பேன். நான் நடிப்பதை நிறுத்தி 28 வருடமாகிவிட்டது. நிச்சயம் டிஸ்கோ சாந்தியாக இல்லாமல் சாந்தி ஸ்ரீஹரியாக மீண்டும் சினிமாவில் நடிக்க வருவேன். தமிழில் ஒரு படத்தில் கமிட்டாகி விட்டேன். ஆனால், என்ன படம், யார் ஹீரோ என்றெல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது. ஒரே அறையில் அடைந்து கிடப்பதால், பசங்க ரொம்ப பீல் பண்ணுறாங்க, அவங்க தான், ஏன் நீங்க மீண்டும் நடிக்கக்கூடாது என்று கேட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.
கேள்வி: உங்களுக்கு டிஸ்கோ சாந்தி என்கிற பெயர் எப்போது வந்தது?

பதில்: திருமணத்திற்கு பின் டிஸ்கோ சாந்தி என்று என்னை யாராவது அழைத்தால் கொஞ்சம் வருத்தமாக இருக்கும். நான் சினிமாவில் நுழைந்து மூன்றாவது படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தான் டிஸ்கோ மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்தது. அப்போது, ஒரு படத்தின் பாடலுக்கு நடனமாடியிருந்தேன். அந்த படத்தில் என்னை கேட்காமலே டிஸ்கோ சாந்தி என்று எனது பெயரை போட்டு விட்டார்கள். அப்போது எனக்கு அந்த விஷயம் தெரியாது. பத்திரிகைகளில் வெளியான பின்பு தான் எனக்கு தெரிய வந்தது. உடனே என் அனுமதி இல்லாமல் எப்படி போட்டீர்கள் என்று நான் தயாரிப்பாளரிடம் கேட்டேன். ஏனென்றால், எனக்கு கதாநாயகியாக வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், அப்போது பட வாய்ப்பு வராததால் ஒரு படத்தில் நடனம் ஆடினேன். பிறகு அதே போன்று படத்தில் நடனமாட அழைக்க தொடங்கினார்கள். இப்போதும் டிஸ்கோ டிஸ்கோ சாந்தி என்று என்னை யாராவது அழைத்தால் எனக்கு கோபம் வரும். என்னுடைய சின்ன பையன் என்னை வெறுப்பேத்த வேண்டும் என்றால் டிஸ்கோ டிஸ்கோ என்று அழைப்பான். நான் எப்போதும் மிஸ்ஸஸ் ஸ்ரீஹரியாக இருக்கத்தான் ஆசைப்படுகிறேன்.
முன்பெல்லாம் கவர்ச்சி நடனத்துக்கும், ஐட்டம் பாடலுக்கு என்று தனி நடிகைகள் இருந்தார்கள் அவர்கள் தான், படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடுவார்கள். ஆனால், இப்போது எல்லாம் நடிகைகளே எங்களை விட குறைவான உடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆட ஆரம்பித்து விட்டார்கள். இதனால், கவர்ச்சி நடனத்திற்கு என்று தனியாக ஏன் செலவு செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்கள், ஹீரோயின்களை வைத்து ஐட்டம் பாடல்களை எடுத்து விடுகிறார்கள். அப்போது, எல்லாம் கவர்ச்சி பாடலுக்கு குறைவாகத்தான் சம்பளம் கிடைக்கும். ஆனால், இப்போது, டாப் நடிகைகளே கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி விட்டு கோடியில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிடுகின்றனர். அதில், ஒன்னும் தவறு இல்லை இப்போதைக்கு டிரென்ட் மாறிவிட்டது. எனக்கு தமன்னா, அண்மையில் ஜெயிலர் படத்தில் ஆடிய காவாலா பாடல் மிகவும் பிடிக்கும். அதே போல புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஊ... சொல்வியா மாமா பாடல் பிடிக்கும், பசங்களின் பிறந்த நாளுக்கு அந்த பாடலை போட்டு டான்ஸ் ஆடுவேன்.

8 வருஷம் அழுதேன்: தொடர்ந்து, தனது கணவர் குறித்து பேசிய டிஸ்கோ, உடல் நலத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர் என் கணவர், இதனால், வீட்டிலேயே ஜிம் வைத்து இருந்தார். இந்தி சினிமா வரலாற்றிலேயே 1985ம் ஆண்டு முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்து இருந்தது என் கணவர் தான். நான் எதாவது வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியம் கூட இல்லை, என் கண்னை பார்த்தாலே புரிந்து கொண்ட வாங்கி கொடுத்துவிடுவார். அவர் என்னத்தான் சம்பாதித்தாலும், அனைத்தையும் என்னிடம் தான் கொடுத்து வைப்பார். நான் தினமும்,காலை அவர் படப்பிடிப்புக்கு கிளம்பும் போது கையில் பணம் கொடுத்து அனுப்புவேன். அதே போல, எந்த இடத்தில் படப்பிடிப்பு நடந்தாலும், வீட்டில் சமைத்துத்தான் கொடுத்து அனுப்புவேன். எனக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கி தருவார். எனக்கு வைரம் பிடிக்கும் என்பதால், அப்போதும் வைர நகைகளையே வாங்கி கொடுப்பார். ஆனால், என் கணவர் இறந்த போது, அந்த நகைகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. இப்போது, அவரின் நினைவாக ஒரு சில நகைகள் தான் இருக்கிறது.
அவர் பார்க்கவில்லை: என் கணவர் இறந்த பிறகு எனக்கு என்ன செய்வது என்னே தெரியவில்லை. நானும் அவரும் இருந்த ரூமைவிட்டு வெளியே வரமாட்டேன். 8 வருஷமா அழுதுக்கிட்டேத்தான் இருந்தேன். அந்த மன அழுத்தத்தில் இருந்த என்னை வெளியில் கொண்டு வந்தது என் மகன்கள் தான், அவர்கள் தான் எங்களுக்காக நீ நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி என்னை தோற்றினார்கள். இப்போது எனக்கு இருக்கும் ஒரே கவலை, என் மகன் அப்பாவைப்போல ஹீரோவாகி இருக்கிறான். அதைப்பார்க்க அவர் இல்லை என்பது தான் என நடிகை டிஸ்கோ சாந்தி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஐட்டம் பாடலுக்கு பெயர் போன நடிகை டிஸ்கோ சாந்தி, பிரபல பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மகள் ஆவார். தந்தை இறந்த பிறகு, குடும்பத்தை காப்பாற்றுவதற்காக 7 வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் டிஸ்கோ சாந்தி. துவக்கத்தில் நாயகியாக நடித்து வந்த இவர், அது கைக்கொடுக்கவில்லை, அந்த நேரத்தில் குடும்பத்தின் வறுமை காரணமாக, ஐட்டம் பாடல்களுக்குத்தான் நடனமாடினார். பின் அதையே தன்னுடைய கேரியராக மாற்றிக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி என கொடி கட்டி பறந்த நடிகை டிஸ்கோ சாந்தி. 1996ம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பிலிருந்து விலகி குடும்பத்தோடு ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். இந்த தம்பதிக்கு, அக்ஷரா,என்ற மகளும், ஷஷாங்க் , மேகம்ஷ் என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீஹரி கல்லீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். கணவரின் மறைவால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தினமும் குடித்துக்கொண்டே இருந்த, டிஸ்கோ சாந்தி தற்போது அதில் இருந்து தனது குழந்தைகளுக்காக மீண்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











