Exclusive : ரஜினி குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாக வேண்டும் : ‘பேட்ட’ மாளவிகா மோகனன் விருப்பம்
சென்னை: நடிகர் ரஜினியின் குடும்பத்தில் தானும் ஒரு அங்கமாக வேண்டும் என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான இவர், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த பட்டம் போல படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய 'பிஹைன்ட் தி க்ளவுட்ஸ்' படம் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
இதையடுத்து தற்போது ரஜினியின் பேட்ட படத்தில், பூங்கோடி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பட புரோமோசனுக்காக சென்னை வந்திருந்தவரை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன்.
அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது,

நடிக்க அழைப்பு
"'பிஹைன்ட் தி க்ளவுட்ஸ்' படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்னை பேட்ட படத்தில் நடிக்க அழைத்தார். இது ரஜினி படம் என முதலில் எனக்கு தெரியாது. லுக் டெஸ்ட் எல்லாம் முடித்த பிறகு தான், நான் பேட்ட படத்தில் நடிக்கப் போகிறேன் என்பது தெரியவந்தது.

முதல் படமே ரஜினியுடன்
எனக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது. 'பிஹைன்ட் தி க்ளவுட்ஸ்' படத்துக்கு பிறகு இப்படி ஒரு மாஸான படம் அமையும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதுவும் ரஜினி படம் என்றால், எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். தமிழில் அறிமுகமாகும் முதல் படமே ரஜினி படமாக அமைந்தது எனது அதிர்ஷ்டம் தான்.

தமிழ் படங்கள் பிடிக்கும்
நான் மலையாளி என்பதால் எனக்கு தமிழ் ஓரளவுக்கு புரியும். அதுவும் இல்லாமல், சிறு வயதில் இருந்தே மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன். எனவே தமிழ் படங்கள் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று தான்.

தமிழ் வசனம்
இருந்தாலும் பேட்ட படத்தில் தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஆசிரியரை நியமித்து தமிழ் கற்றுக்கொண்டேன். என் வசனங்களை முன்கூட்டியே வாங்கி மனப்பாடம் செய்து படப்பிடிப்பின் போது தமிழில் பேசி நடித்தேன். தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட, எல்லா வசனத்தையும் ஒப்பிப்பேன். அந்த அளவுக்கு கடுமையாக உழைத்திருக்கிறேன்.

ரஜினி பாராட்டினார்
நான் தமிழில் வசனம் பேசி நடித்ததை பார்த்து ரஜினி சார் வெகுவாக பாராட்டினார். அவரை போன்ற ஒரு எளிமையான மனிதரை பார்ப்பது மிகவும் கடினமான விஷயம். எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், எல்லோர் நடிப்பையும் உன்னிப்பாக கவனித்து பாராட்டுவார். அவரிடம் பாராட்டு பெற்றது மிகவும் சந்தோஷமான விஷயம்.

தனுஷுடன் நடிக்க ஆசை
ரஜினி சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் என் வாழ் நாள் ஆசை. எனது முதல் தமிழ் படத்திலேயே அது நிறைவேறிவிட்டது. அதுபோல் தனுஷுடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. விரைவில் அதுவும் நிறைவேறும் என நினைக்கிறேன். ரஜினி குடும்பத்தில் நானும் ஒரு உறுப்பினராகிவிடுவேன் என நினைக்கிறேன்.

புதிய படங்கள்
தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதேபோல் தமிழில் தொடர்ந்து நடிக்க உள்ளேன். நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் நிச்சயம் நடிப்பேன். பேட்ட படம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











