கடவுள் கொடுத்த வரம்.. மனிதராக வாழக்கூடிய ஒரு சித்தர்.. கணவரை ஒரேயடியா புகழ்ந்த நீலிமா ராணி!
சென்னை: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 90களில் இருந்து இன்று வரை சீரியல்கள் மூலம் அத்தனை இல்லத்தரசிகளின் மனங்களையும் கவர்ந்தவர் நடிகை நீலிமா ராணி. எப்போதுமே நேர்மறையான எண்ணங்களோடு வலம் வரும் நீலிமா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவர் இசைவாணன் குறித்தும், தங்களது திருமண வாழ்க்கை குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார்.
தேவர் மகன் படத்தில்: நடிகை நீலிமா ராணி, உலகநாயகன் கமல்ஹாசனின் மாஸ்டர்பீஸ் திரைப்படமான தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துத் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து, பாண்டவர் பூமி, விரும்புகிறேன் எனப் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின் சின்னத்திரைக்குள் நுழைந்த இவர், மெட்டி ஒலி, கோலங்கள், செல்லமே, தென்றல், இளவரசி, தலையணைப் பூக்கள், வானத்தைப் போல என அனைத்து ஹிட் அடித்த பல மெகா சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் ஃபேவரிட் நடிகையாக மாறினார். 90ஸ்களில் இருந்து தற்போது வரை அனைத்து வீடுகளிலும் சீரியல் மூலம் நுழைந்து முத்திரை பதித்த நீலிமா ராணி, கார்த்தியின் நான் மகான் அல்ல, ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம், ஆகஸ்ட் 1947 போன்ற உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

எனக்குக் கிடைத்த வரம்: நடிகை நீலிமா ராணி இசைவாணன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கும் நீலிமா ராணி, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் திருமணம் குறித்து பேசி உள்ளார். அதில், அவர் எனக்குக் கணவராகக் கிடைத்தது நான் செய்த மிகப்பெரிய புண்ணியம், எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம் என்றே சொல்வேன். அவர் ஒரு மனிதராக வாழக்கூடிய ஒரு சித்தர் என்று கூட நான் சொல்லுவேன். ஏனென்றால், அவருக்குள் அவ்வளவு பொறுமை, உண்மை, மற்றும் நேர்மை இருக்கிறது. ஒரு மனிதரால் இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா என்று நானே பல முறை ஆச்சரியப்பட்டு யோசித்து இருக்கிறேன்.

பொய் பேச மாட்டார்: ஒரு இடத்தில் சும்மா சிரித்துப் பேசினால், அந்த இடத்தில் நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துவிடும் என்றால் கூட, அவர் அதைச் செய்ய மாட்டார். எனக்கு அப்படி வரும் வாய்ப்பு தேவையில்லை என்பார்.ஒருவரிடம் சும்மா அவங்க முகத்திற்காகவாது கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து பேசுங்கள் என்று நான் சொன்னால் கூட, எதற்காக நாம் அப்படிப் போலியாகப் பேச வேண்டும்? என்று என்னிடமே கேட்பார். மற்றவர்களிடம் மட்டுமில்லை, என்னிடமும் அவர் அப்படித்தான் நடந்து கொள்வார். அவருக்குச் சரி என்றால் சரி, தப்பு என்றால் தப்பு அவ்வளவுதான். ரொம்ப நேர்மையானவராக, மிகவும் அழகான மனம் கொண்ட மனிதர் அவர், எனக்கும் அவருக்கும் 10 வருட வித்தியாசம், பலர் எங்களைப் பார்த்து கேலி கூட செய்து இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அந்த பக்குவம் தான் எங்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கிய காரணம் என நீலிமா ராணி பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications