அம்மாவின் கடைசி ஆசை.. சரண்யா பொன்வண்ணனின் உருக்கமான பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து வரும் நடிகை சரண்யா பொன்வண்ணன், தனது அம்மாவின் கடைசி ஆசை குறித்த உருக்கமாக பேசி உள்ளார். அனைத்து நடிகர்களும் என் மகனாக நடிக்க வேண்டும் என்று விரும்புவதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன் என்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சரண்யா பொன் வண்ணன், உலகநாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக நாயகன் படத்தில் நடித்திருந்தார். அவர் தமிழில் அறிமுகமான முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் இரட்டை ஜடை போட்டுக்கொண்டு பாவாடை சண்டையில் அழகு பதுமையாக வந்த இவர், தமிழ் ஆடியன்ஸ் படத்தில் பதிந்து விட்டார். இந்த படத்தில், மும்பை ரெட் லைட்டில் இருக்கும் பெண் கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, மனசுக்குள் மத்தாப்பூ, என் ஜீவன் பாடுது, கருத்தம்மா, மீண்டும் சாவித்திரி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

நடிகை சரண்யா பொன் வண்ணன்: அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து வந்த இவர், சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே, நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவிட்டு விலகி இருந்தார். இதையடுத்து, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஜீவா நடித்த ராம் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தார். அம்மா மீது அதீத பாசம் வைத்திருக்கும் மகன், அம்மாவின் பிரிவால் எப்படி வாடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் நடிகை சரண்யா, அம்மாவாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, தவமாய் தவம் இருந்து, எம் மகன், கிரீடம், புலி வருது, களவாணி என அடுத்தடுத்து படங்களில் அம்மாவாக நடித்தார்.
அம்மானா சும்மா இல்லடா: இதையடுத்து, தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் தனுஷை துடைப்பத்தால் அடுத்து ஒரே காட்சியிலே ஸ்கோர் செய்திருப்பார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது, விஜய் டிவி விருது என பல விருதுகளை குவித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் அம்மா வேடத்திற்கு இவரையே தேடி வருகின்றனர்.
மிகப்பெரிய கிப்ட்: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சரண்யா பொன்வண்ணன், அண்மையில் சினிமாவில் என் மகன்களாக நடித்தவர்களின் போட்டோ என் மகள் என்ற பெயரில் இணையத்தில் டிரெண்டானது. அதைப்பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அனைத்து நடிகர்களும் என் மகனாக நடிக்க வேண்டும் என்று விரும்புவது தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிப்டாக நான் பார்க்கிறேன். இதற்கு முக்கிய காரணம் இயக்குநர்கள் எனக்கு அது போன்ற நல்ல கதாபாத்திரத்தை கொடுக்கிறார்கள்.
அம்மாவின் ஆசை: தொடர்ந்து பேசிய அவர், நான் சினிமாவில் ஜெயிக்க வேண்டும், ஒரு ஃபிலிம் ஃபேர் விருது ஒரு முறையாவது நான் வாங்க வேண்டும் என்பது என் அம்மாவின் ஆசையாக இருந்தது. ஆனால்,எனக்கு ஃபிலிம் ஃபேர் விருதுகளுக்கான அழைப்பிதழ் கூட எனக்கு வந்தது கிடையாது. என்னுடைய அம்மா இறந்த பிறகு நான் அம்மாவாகவே நடிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு நான் 5 ஃபிலிம் ஃபேர் விருதுகள்,தேசிய விருது, மாநில விருது எல்லாமே வாங்கி விட்டேன். ஆனால், இதைப்பார்க்க என் அம்மா என்கூட இல்லை.
அம்மாவின் ஆசீர்வாதம்: அப்போதெல்லாம் எனக்கு என்ன தோன்றும் என்றால் இந்த வேலையில்லா பட்டதாரி அம்மா பாடலில் கடற்கரையில் காலடி எடுத்து வைக்கும் போது பக்கத்தில் ஒரு பாதம் வரும், அது போலத்தான் என் மனதிற்குள் எப்போதும் என் அம்மா என் கூடவே இருப்பது போல தோன்றும். கோயிலுக்கு போய் கடவுளை வேண்டுவதை விட, மனதிற்குள் எப்போதும் அம்மாவிடம் வேண்டிக்கொண்டே இருப்பேன் அவர்கள் தான் என்னை பக்கத்தில் இருந்து என்னை ஆசீர்வதிக்கிறார்கள் என்று நம்புகிறேன் என சரண்யா பொன்வண்ணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











