என்னோட கை காலைப் பிடித்து உதட்டுல போதைப் பொருளைத் தடவுனாங்க.. இன்னும் சிலர் சிக்குவாங்க - ஸ்ரீரெட்டி
சென்னை: மொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வரும் விஷயமாக மாறியுள்ளது கொக்கைன் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விநியோகம். இந்த விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி அளித்துள்ள பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீ ரெட்டி இந்த விவகாரம் தொடர்பாக குமுதம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், " சினிமா துறையில் இந்த கொக்கைன் புழக்கம் என்பது பல ஆண்டுகளாக உள்ளது. இது குறித்து வெளியில் சொன்ன நான் சினிமாவில் எதிர் காலம் இல்லாமல் தோல்வி அடைந்த நடிகையாக உங்கள் முன்னால் இருக்கிறேன். ஆனால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் நிம்மதியாக உள்ளார்கள். இந்த விவாகரத்தில் இப்போது சில நடிகர்கள் சிக்கியுள்ளார்கள். ஆனால் இன்னும் சில நடிகர்கள் சிக்குவார்கள்.
நான் இது குறித்து சொன்னபோது எனக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை. மாறாக நான் புகழ் பெறுவதற்காக இவ்வாறு செய்கிறேன் எனக் கூறினார்கள். ஆனால் எனது கை, கால்களைப் பிடித்து எனது உதட்டில் கொக்கைனைத் தடவி விட்டார்கள். நான் முன்னர் கூறியது போல எந்த நடிகர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. அவர்கள் எல்லாம் பெரிய நடிகர்களாக, அதிக பணம் கொண்டவர்களாக உள்ளார்கள். அவர்களை என்னை போன்றவர்கள் எதிர்ப்பதால் ஒரு சதவீத மாற்றம் கூட சினிமா துறையில் நடைபெறாது.

பெரிய நடிகர்களை எதிர்க்க வேண்டாம்: புதிதாக வரும் நடிகைகளுக்கு நான் அப்போது கூறியதைத்தான் இப்போதும் கூறுகிறேன், சினிமா உங்களுக்கு கனவாக இருந்தால், நீங்கள் உங்களது வாழ்க்கைக்கு தேவையான வேறு ஒரு தொழிலை கையில் வைத்துக் கொண்டு சினிமாவில் முயற்சி செய்யுங்கள். நான் சினிமாவிற்குள் வந்த போது அட்ஜெஸ்மெண்ட் செய்தால்தான் நடிக்கவே வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழல் இருந்தது. அதனால் நான் அப்படி எனது வாழ்க்கையை சீரழித்து விட்டேன். எனவே நடிக்க வரும் இளைஞர்கள் எக்காரணம் கொண்டும் சினிமாவை மட்டும் நம்பிக் கொண்டு வந்துவிட வேண்டாம். இது மட்டுமல்லாமல், சினிமாவுக்குள் வந்து பெரிய நடிகர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அதனால் எந்த மாற்றமும் நடைபெறாது.
நடிகைகள் அட்டூழியம்: மேலும் கொக்கைன் போன்ற போதைப்பொருள் எங்கு புழங்கும், அதிக பணம் வைத்து இருப்பவர்கள் இடத்தில்தான் புழங்கும். நான் இந்த போதைப்பொருள் விவகாரம் குறித்து பேசியபோது ஒரு கிராம் ரூபாய் 5 ஆயிரங்கள் முதல் 6 ஆயிரங்கள் வரை இருந்தது. இதற்காகவே பல பார்ட்டிகள் நடைபெறுகிறது. அளவுக்கு மீறி குடித்துவிட்டு மறுநாள் காலையில் படப்பிடிப்புத் தளத்திற்கு போதையோடும், கெட்ட வாடையோடும் செல்லும் நடிகைகள் ஏராளம்" எனத் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீ ரெட்டியின் இந்த பேட்டி திரைத்துறை மட்டுமல்லாது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியிலும் பரபரப்பை கூட்டியுள்ளது. போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாமல் அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் நீதிமன்றம் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தது.


Click it and Unblock the Notifications











