முந்தானை முடிச்சு படத்தில் எனக்கு புடவை கட்ட தெரியாது.. பாக்யராஜ் என்ன செய்தார் தெரியுமா? ஊர்வசி!
சென்னை: 71வது தேசிய விருதுகள் அறிவிப்பில் 2023ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டது. இதில், மலையாள திரைப்படமான 'உள்ளொழுக்கு' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேசிய ஊர்வசி தனது திரைப்பயணம் குறித்து பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.
அதில், தனது முதல் திரைப்படமான முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்த ஊர்வசி, படத்தில் நடிக்கும் போது எனக்கு நடிப்பின் மீது ஆர்வமும் இல்லை, விருப்பமும் இல்லை பாக்யராஜ் சார் தான் எப்படி நடிக்க வேண்டும் எப்படி சிரிக்க வேண்டும் எப்படி அழ வேண்டும் என ஒவ்வொன்றாக எனக்கு சொல்லிக் கொடுத்தார். குறிப்பாக அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு புடவையை எப்படி கட்டுவது என்று கூட தெரியாது அந்த புடவையை கட்டிக்கொண்டு படாதபாடுபட்டேன். அப்போது, பாக்யராஜ் சார் தான் புடவையை எப்படி கட்ட வேண்டும் என படப்பிடிப்பு தளத்திலேயே புடவையை கட்டுவது எப்படி என்று பயிற்சி கொடுத்தார். அதோடு, மட்டுமல்லாமல் புடவை கட்டிக்கொண்டு எப்படி நடக்க வேண்டும் என்று கூட கற்றுக்கொடுத்தார். பாக்யராஜ், நடிப்பை கற்கும் முறை தனித்துவமானதாக இருக்கும். அவர், நடிகர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பார் என்றும் ஊர்வசி பாக்யராஜை புகழ்ந்து கூறினார்.

தீர்க்கதரிசி: பாக்யராஜ் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 25 வாரங்கள் ஓடியது. இப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியற்காக பாக்கியராஜூக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். இந்த படம் தெலுங்கில் மூடு முல்லு என்ற பெயரிலும், இந்தியில் மாஸ்டர்ஜி, கன்னடத்தில் ஹல்லி மேஷ்ட்ரு என மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியாகி மற்ற மொழிகளிலும் வசூலை அள்ளிது. முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கு பிறகு, பாக்யராஜ், ஊர்வசி ஜோடி அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக மாறிவிட்டார்கள். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து, "தீர்க்கதரிசி" திரைப்படத்தில் நடித்துள்ளனர். பி.ஜி. மோகன் மற்றும் லோகநாதன் இணைந்து இயக்கியுள்ளனர். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது


Click it and Unblock the Notifications











