Ajith Kumar: காலை எழுந்ததும் உயிருடன் இருப்பதே வரம்.. அஜித் என்ன இப்படி சொல்லிட்டாரு.. என்ன காரணம்?
சென்னை: நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் கார் ரேஸில் உலக அளவில் கவனம் ஈர்க்கும் ரேஸராக உள்ளார். கடந்த மாதத்தில் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. கடந்த வாரத்தில் தனது 25 வது திருமண நாளைக் கொண்டாடினார். நேற்று அதாவது மே 1 ஆம் தேதி, தனது 54 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்நிலையில் நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருது பெற்ற பின்னர், இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர்களுக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், " நான் பிங்க் ( நேர் கொண்ட பார்வை) ரீமேக்கில் நடிக்க காரணம் எனது முந்தைய படங்கள் எனக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்கின. பெண்களை ஸ்டாக்கிங் செய்வதை ஊக்குவிப்பதை போல இருப்பதாக உணர்ந்தேன். சில நேரங்களில் ரசிகர்கள் நாம் திரையில் செய்வதை பின்பற்ற நினைக்கிறார்கள். பிங்க் ரீமேக்கில் நடிப்பது என்பது எனது முந்தைய படங்களுக்கு பிராயச்சித்தமாக இருக்கும் என்று நினைத்து நடித்தேன்" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் அந்த நேர்காணலில், " வாலி எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். என்னை அந்தப் படத்தில் இருந்துதான் மக்கள் என்னை ஒரு தொழில்முறை நடிகர் என்று பார்க்க ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன். அந்த படத்திற்கு முன்பு மக்கள் மத்தியில் இருந்து எனக்கு நிறைய அன்பு கிடைத்தது. ஆனால் வாலி படம் தான் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டது.

உயிருடன் இருப்பது வரம்: வாழ்க்கை குறித்து குறை சொல்பவர்களைப் பார்க்கிறேன். மறுநாள் காலை எழுந்ததும் உயிரோடு இருப்பது என்பது மிகப்பெரிய வரம். நான் இதை தத்துவார்த்தமாக கூறவில்லை. நான் நிறைய காயங்களையும் அறுவை சிகிச்சைகளையும் எதிர் கொண்டுள்ளேன். புற்றுநோயில் இருந்து தப்பிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளார்கள். உயிரோடு இருப்பது எவ்வளவு மதிப்பு மிக்கது என்று எனக்குத் தெரியும். எனவே, எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
அப்பா: மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து அவர் பேசும்போது, " மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிகவும் விலை உயர்ந்த விளையாட்டு என்று எனது அப்பா சொன்னது நினைவில் இருக்கிறது. அந்த போட்டியில் நீ கலந்து கொள்ள என்னால் பணம் கொடுக்க முடியாது. நீ அந்த போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று நான் உன்னைத் தடுக்க மாட்டேன். உனக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும். உனக்கான வழியை நீயே கண்டுபிடிக்க வேண்டும் என்று எனது அப்பா கூறியது இப்போதும் நன்றாக நினைவில் இருக்கிறது.

மோட்டார் ஸ்போர்ட்ஸ்: நான் மோட்டார் ஸ்போர்ட்ஸில் கலந்து கொண்ட போது, ஒருவர் என்னைச் சந்தித்து அவரது விசிட்டிங் கார்டைக் கொடுத்து, மாடலிங்கில் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறினார். முதலில் நான் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்றுதான் முயற்சி செய்தேன். மாடலிங் என்றால் என்ன என்று புரிவதற்கு முன்னரே, எனக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. செய்தித்தாள்கள், வார இதழ்களில் வரும் விளம்பரங்கள், டிவி விளம்பரங்கள், மாடலிங் மூலம் சம்பாதித்த அனைத்து பணத்தையும் நான் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்காக செலவு செய்தேன்" என்று தெரிவித்துள்ளார். அஜித் தனது மோட்டார் ஸ்போர்ட்ஸ் கனவை அடையவே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து, அதில் முடி சூடா மன்னனாக வலம் வந்து கொண்டு உள்ளார் என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











