விஜய் படத்தால் என்னோட நல்ல படம் ஓடாம போய்டுச்சு.. பரத் இவ்வளவு ஓப்பனா சொல்லிட்டாரே!
சென்னை: நடிகர் பரத் நடிப்பில் உருவாகி உள்ள காளிதாஸ் படம் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான அனைத்து வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் புரோமோசனுக்காக தொடர்ந்து பல சேனல்களுக்கு பரத் பேட்டி அளித்து வருகிறார். அதில் அவரது 555 படம் ஏன் சரியாக போகவில்லை என்ற கேள்விக்கு, விஜய் படத்தால் தான் எனது படம் சரியாக போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, பரத் கூறுகையில், " 555 படம் ரொம்ப நல்ல படம். நான் இந்த படத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் செலவு செய்தேன். சசி சாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சசி சார் அந்த படத்திற்காக இரண்டரை ஆண்டுகள் வேலை செய்தார். அந்த படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். படத்தின் கதை, திரைக்கதை, எனது சிக்ஸ் பேக்ஸ் என பலவற்றையும் பாராட்டினார்கள். தொலைக்காட்சியில் படத்தைப் பார்த்த பின்னர் பலரும் பாராட்டினார்கள்.

விஜய் படம்: ஆனால், படம் சரியாக போகாததற்கு காரணம் என்று எடுத்துக் கொண்டால், அப்போது வெளியான விஜய் சாரின் தலைவா படம் தான். பொதுவாகவே விஜய் சார் படம் வெளியாகிறது என்றால் மற்ற படங்கள் எல்லாம் இரண்டு வாரம் கழித்துதான் ரிலீஸ் ஆகும். ஆனால் தலைவா படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட பிரச்னை தீர்ந்த உடனே படத்தை தலைவா படத்தை ரிலீஸ் செய்வதாக அவர்கள் அறிவித்துவிட்டனர். இதை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இப்படி இருக்கும்போது, எங்கள் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

காளிதாஸ் 2: ஆனால் படத்தை பார்த்த பலரும் இப்போதும் பாராட்டுகிறார்கள், ஆனால் அந்த படம் நன்றாக போயிருக்க வேண்டிய படம் " என்று தெரிவித்தார். காளிதாஸ் 2 படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் 5 ஸ்டார் செந்தில் தயாரிப்பில் உருவாகி உள்ளது. படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பரத் உடன் பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அஜய் கார்த்தி, சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் கிரைம் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.


Click it and Unblock the Notifications











