என்ன வெண்ணைக்கு?.. விஜய், அஜித், விக்ரம், சூர்யா குறித்து பிக் பாஸ் பிரபலம் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு பின்னர் இப்போதும் சோலோ ரிலீஸில் ஹிட் கொடுக்கும் மூத்த நடிகர்கள் என்றால் அது விஜய், அஜித், சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரைக் குறிப்பிடலாம். அவர்களுக்குப் பின்னர் தனுஷ், சிம்பு என அந்த வரிசை நீண்டாலும், முன்னாள் குறிப்பிட்ட நான்கு நடிகர்கள் தங்களுக்கு மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தை இவர்கள் இன்னும் ஏற்படுத்தவில்லை. இப்படியான நிலையில் பிக்பாஸ் பிரபலமான வி.ஜே. அபிஷேக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய், அஜித், விக்ரம் மற்றும் சூர்யா குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஹரிஷ் கல்யாண், மணிகண்டன், பிரதீப் ரங்கநாதன் போன்றவர்கள் எல்லாம் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் சூர்யா மற்றும் விக்ரம் படத்திற்கு படம் மிகவும் உழைக்கிறார்கள், கெட்டப்களை மாற்றுகிறார்கள், ஆனால் படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடுவதில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு பிக் பாஸ் பிரபலம் வி.ஜே. அபிஷேக் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இவரது பதில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது. அதே நேரத்தில் விக்ரம் மற்றும் சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அதாவது அவரது பதிலில், " சூர்யா மற்றும் விக்ரம் மாற்று சினிமாவை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவாக செய்ய முயற்சி செய்யும் நடிகர்களாக பார்க்கிறேன். விஜய் மற்றும் அஜித் ஓட்ட படம் எடுத்தால் கூட எப்படியாவது ஓடிவிடும். சூர்யாவுக்கும் விக்ரமிற்கும் அது நடக்காது, காரணம் அவர்கள் நடிப்பில் கெட்டிக்காரர்கள். அவர்களின் நடிப்புக்கு தீனி போடும் படியான படங்கள் அமைய வேண்டும்.

விஜய்- அஜித்: இப்போது விஜய் அஜித் படங்களின் வசூலை முன்கூட்டியே தமிழில் செய்த படம் அந்நியன். கேரளாவில் அதிக அளவில் வசூலைக் குவித்த படம் என்றால் அது ஐ. அதேபோல், சூர்யாவை எடுத்துக் கொண்டால், விஜய், அஜித்திற்கு முன்னரே, 70 கோடிகள், 100 கோடிகள் என ஹிட் கொடுத்தவர். கில்லிக்கு பிறகு அயன் செம ஹிட்டான படம். தெலுங்கில் சோலோவாக சென்று அங்கு தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியவர் சூர்யா. இப்போதுதான் விஜய், அஜித்திற்கு அங்கு மார்க்கெட் உருவாகியுள்ளது. கலெக்ஷனாக ஒப்பிட்டுப் பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம்.

விக்ரம்: விக்ரம் மற்றும் சூர்யாவுக்கான இடம் இப்போதும் தமிழ் சினிமாவில் உள்ளது. அவர்களின் படம் ஒர்க் ஆனால் ஓகே, ஓடவில்லை என்றால் ஓடவில்லை அவ்வளவுதான். ஆனால் விஜய் மற்றும் அஜித்திற்கு படம் ஓடவில்லை என்றால், ரசிகர்கள் ஒருதலைப்பட்சமாக இருப்பார்கள். விஜய் மற்றும் அஜித்தை ஒருபோதும் சூர்யா மற்றும் விக்ரம் உடன் ஒப்பிடவே கூடாது. நான் இப்போது கூறுவது ரசிகர்களுக்கு கோபத்தை உண்டாக்கலாம், அதாவது, விஜய் மற்றும் அஜித் செய்வதை விக்ரம் மற்றும் சூர்யா செய்துவிடுவார்கள், ஆனால் விக்ரம் மற்றும் சூர்யா செய்யும் சில விஷயங்களை அஜித் மற்றும் விஜய்யால் செய்ய முடியாது. இவர்களின் உழைப்பு எல்லாம் ஒன்றுதான் என்றாலும் அவர்களின் ரேஞ்ச் வேறு.

கெட்டப்: கமல்ஹாசன் மருதநாயகம் படத்தை திரும்ப எடுக்கிறேன் எனக் கூறினால், அதில் நடிக்க தகுதியான நடிகர்கள் என தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்கள் ( விக்ரம்- சூர்யா) மட்டும் தான் உள்ளார்கள். சூரரைப்போற்று படத்துக்கு தேசிய விருது வாங்கினார், அதற்கு முன்னர் பிதாமகன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். நடிகர்களாக ஒருவர் டேனியல் டெய்லி யூஸ் என்றால் மற்றொருவர் ஜானி டெப். இவர்கள் இருவரும் கதாபாத்திரத்திற்காக ஒன்றிப் போவார்கள், கெட்டப் மாற்றுவார்கள்.

சூர்யா: சூர்யா என்ற ஒரு மனிதரை மட்டும் வைத்துப் பார்த்தால், அவரை வைத்து டிரெண்ட் செட் செய்த, தமிழ் திரைத்துறையின் திசையை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் இறந்துவிட்டார், மற்றவர்கள் ஒதுங்கி விட்டார்கள். சூர்யாவை வைத்து ஹிட் கொடுத்த பாலா எங்கே? அவரை வைத்து ஹிட் கொடுத்த கௌதம் மேனன் எங்கே? சூர்யாவை வைத்து ஹிட் கொடுத்த ஹரி எங்கே? அவரை வைத்து ஹிட் கொடுத்த கே.வி. ஆனந்த் இறந்துவிட்டார். இவர்கள் எல்லாம் சூர்யாவுடன் இணைந்து தமிழ் சினிமாவின் தரத்தை நிர்ணயம் செய்த படங்களை கொடுத்தார்கள். ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட சூர்யாவை வைத்து ஹிட் கொடுத்த இயக்குநர்கள் தற்போது ஃபார்ம் அவுட்டில் உள்ளார்கள். துப்பாக்கி படமே சூர்யா செய்ய வேண்டிய படம் தான், ஆனால் விஜய்க்கு அது மிகவும் நன்றாகவே பொருந்திப் போனது.

கேள்வி: இங்கு ரொம்ப நாட்களாக உள்ள கேள்வி என்னவென்றால், விக்ரம் மற்றும் சூர்யாவிற்கு இன்னும் அதிக அங்கீகாரம் கிடைக்க வேண்டுமோ என்ற கேள்வி உள்ளது. ஆனால், விஜய் மற்றும் அஜித் இருவரும் விக்ரம் மற்றும் சூர்யாவுக்கு நிகராக நடிக்க அல்லது அவர்களைப் போல் நடிக்க வேண்டுமோ? என்றுதான் கேள்வி இருக்க வேண்டும். விக்ரம் - சூர்யா செய்வதை விஜய் , அஜித் செய்யட்டுமே. அஜித் கூட பல நாட்களாக கெட்டப் மாற்றிக் கொண்டு உள்ளார். ஆனால் விஜய்க்கு கெட்டப் மாற்றம் என்பதே, ஒத்துவராது. பல ஆண்டுகளாக விஜய்க்கு கெட்டப் மாற்றம் என்பது செட் ஆகாமல் இருந்தது. அவரையெல்லாம் ராயப்பனாக பார்ப்போம் என நாம் நினைத்துக் கூட பார்த்ததில்லை. விஜய்க்கு அட்டகாசமாக கெட்டப் சேஞ்ச் செய்தவர் என்றால் அது அட்லீ மட்டும் தான். கெட்டப் மாற்றத்தில் தமிழ் சினிமாவில் டாப் 10 இல் அயன் கட்டாயம் இருக்கும்.

வெண்ணைக்கு: விக்ரமை அமர வைத்துக் கொண்டு சிலர் இப்படியான கேள்விகளை கேட்கும் போது எனக்கு அதிர்ச்சியாக இருக்கும். சியான் செய்த படங்கள் தமிழ் சினிமாவிற்கே மிகவும் முக்கியமான படங்கள். பிரஸ் மீட்டில் சியானை நோக்கி கேட்கப்பட்ட கேள்வி என்னவென்றால், உங்களால் ஏன் விஜய் அஜித் அளவிற்கான ரசிகர்களைப் பிடிக்க முடியவில்லை எனக் கேட்டார். அந்த இடத்தில் உடனே சலசலப்பு ஏற்பட்டது. உடனே நான் கூறினேன், நீங்கள் குறிப்பிட்டவர்களுக்கு ஹேட்டர்ஸ் உள்ளார்கள், சியானுக்கு ஹேட்டர்ஸ் கிடையாது எனக் கூறினேன். நடிகர்களின் வெற்றிகள் குறித்து பேசும்போது அவர்களின் தவறுகள் மற்றும் தோல்விகள் குறித்து பேச வேண்டும். அதாவது என்ன வெண்ணைக்கு சார் இந்த மாதிரி படங்களை எல்லாம் பண்ணீங்க என்று, விக்ரம், சூர்யா, அஜித் மற்றும் விஜய்யிடம் வாய்ப்பு கிடைக்கும்போது கேட்கவேண்டும்" எனக் கூறினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











