லீக் ஆன ஜன நாயகன்.. விஜய் ரசிகர்கள் என்ன உத்தமர்களா? பிரபலம் சொன்ன பகீர் தகவல்!
சென்னை: நடிகர் விஜய் நடித்து உருவாகி உள்ள அவரது கடைசி படமான ஜன நாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் ஆனது பெரும் அதிர்ச்சியை மொத்த படக்குழுவினருக்கும் திரை உலகினருக்கும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இதை யார் செய்திருப்பார்கள், அதற்கான காரணம் என்ன என காவல்துறை விசாரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே இது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த பேட்டியில், " இந்த படத்தை நடிகர் விஜய் வெளியிட்டுவிட்டார் என்றும், படக்குழு தரப்பில் இருந்து தான் வெளியிட்டுவிட்டார்கள் என்றும் பலரும் கூறுகிறார்கள். ஆனால் இது அடிப்படைத் தன்மையற்ற வாதம். சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இந்த படத்தை எடுத்துவிட்டு, அதை இணையத்தில் அவர்களே லீக் செய்வார்கள் என்று கூறுவது எந்த அளவுக்கு சரியானதாக இருக்கும்?

ரூபாய் 500 கோடியை மொத்தமாக இழக்க யார் தயாராக இருப்பார்கள்? விஜய் இந்த பணத்தை இழக்கத் தயாராக இருக்கிறார் என்றால் அதனை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தி இருந்தால் கூட அவருக்கு வெற்றிகள் கிடைத்திருக்கும். அதை விட்டுவிட்டு அவர் இப்படி பணத்தை இழப்பார் என்று கூறுவது தவறான வாதம். மேலும் அவரது கட்சியிலேயே பணம் செலவு செய்ய ஆட்கள் இல்லை என்று பணக்காரர்களாக தேடித் தேடி போட்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது விஜய் தரப்பில் இதை லீக் செய்தார்கள் என்று கூறவது தவறு.
விஜய் ரசிகர்கள் தேடித் தேடி பார்க்கிறார்கள்: நான் பொதுவாகவே திருட்டு விசிடி உள்ளிட்டவைகளுக்கு எதிரானவன். அப்படி இருக்கும்போது, எனக்கே சிலர் இந்த படத்தின் லிங்கை அனுப்பி படம் பார்த்து விட்டீர்களா? ஏன் இன்னும் பார்க்கவில்லை, படம் நன்றாக உள்ளது என்று எல்லாம் கூறுகிறார்கள். விஜய் ரசிகர்களே இந்த படத்தை தேடித் தேடி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த படத்தைப் பார்ப்பவர்கள் யாருக்கும் கவலை இல்லை, யாருக்கும் கூச்சம் இல்லை, யாருக்கும் வருத்தம் இல்லை, இந்த படம் இப்படி ஆகிவிட்டதே என்று எந்தவிதமான உணர்வும் அவர்களுக்கு இல்லை.

விசாரணை: படத்தை லீக் செய்ததில் தொழில் போட்டி இருக்கலாம், அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கலாம், அதை காவல்துறை விசாரிக்க வேண்டும். விஜய் தான் லீக் செய்தார் என்று கூறுகிறார்கள், அதற்கு ஆதாரம் உள்ளதா? அப்படிச் செய்தால் அது அரசியல் தற்கொலைக்குச் சமம். லீக் ஆகி உள்ள படத்தின் காப்பி நடிகர் வசம் எப்படி போகும்? விஜய் தான் படத்தை லீக் செய்தார் என்று மற்றவர்கள் சொல்வது போல வாதத்திற்கு வைத்துக் கொண்டால் கூட அது விஜய்யின் திரை வாழ்க்கையில் கடைசி நாளாக மாறிவிடும். தயாரிப்பாளர்கள் வயிற்றில் அடிப்பது போல அது. ஆனால் நான் அறிந்த வகையில் தனது படத்தால் அதிக லாபம் ஈட்டிய தயாரிப்பாளர்களிடம் கூடுதலாக கூட பணம் கேட்காதவர் விஜய். அதனால் விஜய் இதை செய்திருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்" என்று பிகைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











