ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என் வாழ்வை மாற்றியது.. கேப்டன் மில்லர் வில்லன் எட்வர்ட் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் எட்வர் சொனன்பிலிக் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இவர் ஏற்கனவே ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பிலிமிபீட்டுக்காக பிரத்யேக பேட்டி அளித்தார்.
ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் மூன்றாவது படமாக கேப்டன் மில்லர் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இதற்கு முன்னர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் தோல்வியடைந்ததால் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவரும், அவரது ரசிகர்களும் இருக்கிறார்கள்.

எட்வர்ட் சொனன்பிலிக்: பீரியாட்டிக் ஜானரில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதில் வில்லனாக அமெரிக்காவை சேர்ந்த எட்வர்ட் சொனன்பிலிக் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த சூழலில் கேப்டன் மில்லர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் அவர். இந்நிலையில் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பிலிமிபீட் சேனலுக்கு எட்வர்ட் பிரத்யேக பேட்டி அளித்தார். அந்த பேட்டி இதோ..
எட்வர்ட் சொனன்பிலிக் அளித்த பேட்டி: அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. தனுஷை கேப்டன் மில்லர் படத்துக்கு முன்னர்வரை பெரிய ஸ்டார் என்று தெரியும். ஆனால் கேப்டன் மில்லர் படத்தில் நடித்த பிறகுதான் தெரிந்தது அவர் மிகப்பெரிய ஸ்டார் மட்டுமில்லை. மிகச்சிறந்த நடிகர் என்று. அவரது நடிப்பில் மிகப்பெரிய தீவிரமும், ஆழமுக் இருக்கிறது.
ராஜமௌலி, அருண் மாதேஸ்வரன் வித்தியாசம்: ராஜமௌலியுடன் ஆர்ஆர்ஆர் படத்தில் பணியாற்றியிருக்கிறேன். அவரைப் பொறுத்தவரை அவருக்கு என்ன தேவையோ அதில் தெளிவாக இருப்பார். அவர் நினைத்தது கிடைக்கும்வரை விடமாட்டார். சமயங்களில் 20 டேக்குகள்வரை செல்லும். அப்போதும் அவர் விடமாட்டார். அருண் மாதேஸ்வரனை பொறுத்தவரை ரொம்பவே இளமையான ஒரு இயக்குநர். அவர் நம்மிடம் நிறையவே கலந்துரையாடுவார். ஒரு காட்சியை மேம்படுத்த என்னுடன் நிறைய பேசியிருக்கிறார். இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள்.
வாழ்க்கையை மாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்: நான் முதன்முதலில் பார்த்த இந்திய படம் லகான். அந்தப் படம் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அதேபோல் அப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதன் பிறகுதான் நான் இந்திய படங்களில் நடிக்கலாம் என்று முடிவெடுத்தேன். இப்போதைக்கு எனக்கு பாலிவுட்டை தென் மாநில படங்கள்தான் பிடித்திருக்கின்றன. கமல் ஹாசனை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
ஆக்ஷன் பக்கா: தொடர்ந்து காவல் துறை அதிகாரியாக நடிப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கேப்டன் மில்லரில் திலீப் சுப்பராயன் மாஸ்டர் ஆக்ஷன் காட்சிகளை அவ்வளவு அருமையாக கம்போஸ் செய்திருக்கிறார். கேப்டன் மில்லர் படத்தில் எனது கதாபாத்திரம் ரொம்பவே கூலாக இருக்கும். அதேசமயம் ஸ்டாராங்காக இருக்கும்" என்றார்.
பிற படங்கள்: எட்வர்ட் சொனன்பிலிக் 2008ஆம் ஆண்டு தோஸ்தானா படத்தின் மூலம் இந்திய திரயுலகில் அறிமுகமானார். அதன் பிறகு அவர், பத்மாஷ் கம்பெனி, அஞ்சானா அஞ்சனி, கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டைகர் 3 படத்திலும் அவர் நடித்திருக்கிறார். படங்கள் தவிர ஜுபிலி, இன்சைட் எட்ஜ் உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சோனல் மேத்தா என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். நடிப்பதற்கு முன்பு 15 வருடங்கள் சமையல் கலைஞராக இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











