500 கோடியே விஜய்க்கு ஜுஜிபி தானே? வெளிநாட்டில் ஜன நாயகனை ரிலீஸ் பண்ண சொல்லுங்க.. சவால் விடும் பிரபலம்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படமான ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்னை தொடர்பான வழக்கின் தீர்ப்பு படத்திற்கு சாதகமாக வரும் என்று படக்குழு எதிர்பார்த்த நிலையில், தலையிலேயே குட்டு வைத்தது போல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதில் நடிகரும் கதாசிரியரும், முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினருமான எஸ்.வி. சேகர் நமது பிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து காணலாம்.
அவர் அளித்த பேட்டியில், " இந்த விவகாரத்தில் தவறே ஜன நாயகன் படத்தின் தயாரிப்பாளர் மீதுதான். நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால், உடனே நீதிபதி யார் என்று விமர்சிப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்வது தவறு. நீதிமன்றத்தை பொறுத்தவரை அனைவரும் சமம். உடனடியாக படத்தை பார்க்கவேண்டும், சென்சார் சான்றிதழ் தர வேண்டும் என்று எந்த நீதிமன்றமும் சென்சார் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கு என்று தனி விதிமுறைகள் உள்ளது. அதற்குட்பட்டுத்தான் சென்சார் வழங்க முடியும்.
படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு எடுத்துச் செல்கிறார்கள் என்றாலுமே கூட, உடனே அங்கு படத்தை பார்க்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. ஏற்கனவே ரிவைசிங் கமிட்டிக்காக காத்துக் கொண்டு இருக்கும் படங்களைப் பார்த்த பின்னர்தான் இந்த படத்தை பார்ப்பார்கள். அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும். அதுவரை காத்திருக்க வேண்டும். படத்திற்கு பிரச்னை என்பது, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் NOC சான்றிதழ் வாங்க வேண்டும். அது வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த சான்றிதழை வாங்கி சென்சாரிடம் தந்தால் மட்டும் தான் சென்சார் கொடுப்பார்கள். அந்த சான்றிதழ் வாங்கி விட்டார்களா என்பது இதுவரை பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது.

எஸ்.வி சேகர் சரவெடி: ஜனநாயகன் சென்சார் தாமதம் தனக்கு அரசியல் ரீதியாக பெரிய லாபத்தைக் கொடுக்கும் என்று விஜய் நினைத்தால் அது அவருக்கு பெரிய தோல்வியைத்தான் கொடுக்கும். 500 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு வருபவருக்கு இந்த படம் வந்தால் என்ன போனால் என்று கூட தோன்றலாம். ஒருவேளை மற்ற படங்களைப் போல சரியாக போகவில்லை என்றால், இந்த தாமதத்தால் படம் தேர்தலுக்குப் பின்னர் வந்தால் நன்றாக இருக்கும் என்று கூட அவர் யோசிக்கலாம்.
குற்றம்: சென்சார் சான்றிதழ் வாங்காமல் ரிலீஸ் தேதியை அறிவிப்பது என்பது சட்டப்படி குற்றம். சென்சார் அதிகாரி சட்டரீதியாக நடந்து கொள்கிறார். அவரை பாராட்டத்தான் வேண்டும். சென்சாரைப் பொறுத்தவரை ஒரு லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்ட படமும் படம் தான், ஆயிரம் கோடியில் எடுக்கப்பட்ட படமும் படம் தான். சென்சார் போர்டு என்ன டோல்கேட்டா? நீங்கள் போய் கேட்டதும் கொடுக்க?.
சவால்: விஜய்தான் 500 கோடி ரூபாயே வேண்டாம் என்று வந்திருக்கிறாரே? தமிழ்நாட்டில் இந்த படம் எவ்வளவு வசூலித்து விடும்? வெளிநாட்டில் மட்டும் படத்தை ரிலீஸ் பண்ணச் சொல்லுங்க. இங்கு சென்சாரே செய்ய வேண்டியதில்லையே? சென்சார் போர்டை குற்றம் சொல்வது என்பது முட்டாள் தனம், நீதிமன்றம் நியாயமான முறையில் இந்த பிரச்னையை கையாள்கிறது" என்று தெரிவித்துள்ளார். இவரது காட்டமான கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











