விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி கை மாறியது ஏன்? நிதி நெருக்கடியில் குடும்பம்.. பிரபலம் பேட்டி!
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி, நிதி நெருக்கடியால் வேறொரு கல்விக் குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது விஜயகாந்தின் ஆன்மா நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது என தொண்டர்களும் அவரது ரசிகர்களும் கருத்துக்களை கூறி வரும் நிலையில், பத்திரிக்கையாளர் சேகுவேரா,
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்திற்கு சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதையடுத்து, வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆண்டாள் அழகர் கல்லூரி: இந்த துயரத்தில் இருந்தே யாருமே மீளாத நிலையில், விஜயகாந்த், இலவச கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஆண்டாள் அழகர் கல்லூரி நிதி நெருக்கடி காரணமாக கை மாறி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி காரணமாக ஆண்டாள் அழகர் கல்லூரியை நிர்வகிப்பதில் விஜயகாந்த் குடும்பத்தினர் பெரும் சிரமத்தை சந்தித்து வந்துள்ளது. இதனால், தனலெட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் ஆண்டாள் அழகர் கல்லூரியை சுமார் 150 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இலவச கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விஜயகாந்த் இந்தக் கல்லூரியை தொடங்கிய நிலையில் தற்போது அந்த கல்லூரி நிதி நெருக்கடியால் கை மாறியுள்ளது விஜயகாந்தின் ரசிகர்களையும் தொண்டர்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

நிதி பிரச்சனை: இதுகுறித்து,BBT Cinema யூடியூபில் பேசிய பத்திரிக்கையாளர் சேகுவேரா, ஒரு குடும்பத்தில் என்ன மாதிரியான நிதி பிரச்சனை இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் 2017ஆம் ஆண்டில் இருந்து விஜயகாந்த் சிகிச்சையில் தான் இருந்தார். இதனால், அந்த குடும்பத்தில் நிதி சுமை இருக்கலாம். ஆனால் ஆண்டாள் அழகர் கல்லூரி என்பது விஜயகாந்தின் ஆன்மா உலாவக்கூடிய இடங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டாள் அழகர் கல்லூரி என்றதும், முதலில் நினைவுக்கு வருவது விஜயகாந்தின் அறிக்கை தான். 2020 ஆம் ஆண்டு கொரோனா நேரத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை புதைப்பதில் பல பிரச்சனைகள் வந்தது. அப்போது விஜயகாந்த், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஆண்டாள் அழகர் கல்லூரியில் புதைத்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார். எந்த கல்லூரி முதல்வர்களும், கல்வி தந்தைகளும் இதை சொல்லவே இல்லை, யாருமே சொல்லாததை சொல்லியவர் விஜயகாந்த்.
வருத்தமாக உள்ளது: இந்த கல்லூரி கைமாறும் போது தான் பல விஷயங்கள் வெளியில் வருகிறது. இந்த கல்லூரி கட்டியதில் இருந்தே அரசு என்ன கட்டணத்தை நிர்ணயித்துள்ளதோ, அதே கட்டணத்தை மட்டும் தான் விஜயகாந்த் அவர்கள் அந்த கல்லூரியில் வசூலித்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல், பலரை இலவசமாக படிக்க வைத்திருக்கிறார். பலருக்கு அவரே கல்லூரி கட்டணத்தையும் செலுத்தி இருக்கிறார். இதனால், இந்த கல்லூரியில் இருந்து எந்த லாபமும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், விஜயகாந்தின் ஆன்மா உலாவாக்கூடிய இடமான இந்த இடம் கை மாறுகிறது என்பதை நினைக்கும் போது வருத்தமாக தான் இருக்கிறது.
விஜயகாந்த் அரசியலுக்கு வரும் போதே பல சொத்துக்களை விற்று இருக்கிறார். அரசியலை தனது சொந்த பணத்தை செலவு செய்து தான் நடத்தினார். விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் இவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய கடமை பிரேம லதாவிற்கு இருக்கிறது. இதனால் கூட இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கலாம். ஆனால், ஆண்டாள் அழகர் கல்லூரி என்ற பெயரிலேயே செயல்படும் என சொல்லி இருக்கிறார்கள் என்று சேகுவேரா அதில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











