Sirai Cheyyaru Balu Review: சிறை படம் எப்படி இருக்கு? செய்யாறு பாலு விமர்சனம்!
சென்னை: வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள படம் சிறை. இதில், விக்ரம் பிரபு, புதுமுகம் அக்ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ளனர். 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இப்படம் குறித்து செய்யாறு பாலுவின் விமர்சனத்தை பார்க்கலாம்.
90 காலகட்டத்தில் திருச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிறை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கதையை எழுதி இருப்பவர் டாணாக்காரன் திரைப்படத்தின் இயக்குனர் தமிழ். காவல்துறையினரை பற்றி அதாவது ஆயுதப் படையினரை பற்றி அவர்களுடைய வாழ்வியல், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சிறை: ஆயுதப்படையில் ஏட்டாக இருக்கும், விக்ரம் பிரபு வேலூரில் இருந்து கைதியை பேருந்தில் அழைக்க செல்கிறார். அப்போது விக்ரம் பிரபு மீது மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்திவிட்டு, கைதியை கடத்தி செல்கிறார்கள். அந்த நேரத்தில் விக்ரம் பிரபு துப்பாக்கியால் கைதியை சுடுகிறார். இதனால், விக்ரம் பிரபு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். அந்த விசாரணையில் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், மாணவிகள் என அனைவரும் இருக்கும் போது, ஒரு பொதுவெளியில் எப்படி நீங்கள், துப்பாக்கியால் சுடலாம் என்று கேள்வி கேட்கப்படுகிறது. அப்போது விக்ரம் பிரபு ஆயுதப்படையில் இருக்கும் பிரச்சனையில் பேசுகிறார். அதிலிருந்து படம் தொடங்குகிறது.

மக்களிடம் வரவேற்பு: ஒரு அழுத்தமான கதை கிடைத்துவிட்டால் அந்த கதையை எப்படி வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு உதாரணம். ஆயுதப் படையில் கான்ஸ்டபிளாக இருக்கும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரின் காதல் கதை, குடும்பம், அவர் சந்திக்கும் பிரச்சனை என இதுவரை நீதிமன்றத்திலோ, காவல்நிலையத்திலோ நாம் கேள்விப்படாத பல விஷயங்களை இந்த திரைப்படத்தில் தமிழ் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார். டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கிய தமிழ் இந்த திரைப்படத்திற்கு கதை எழுதி இருக்கிறார். அவர் ஒரு போலீஸ் என்பதால் அவருக்கு காவல்துறை பற்றி நுணுக்கமான பல விஷயங்கள் இந்த திரைப்படத்தில் சொல்லி ஆடியன்சை திகைக்க வைத்து இருக்கிறார்.
அட்டகாசமான படம்: அதேபோல விக்ரம் பிரபு இந்த படத்தில் ஒரு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சரியான நேரத்தில் தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார். விக்ரம் பிரபு நடித்தார் என்று சொல்வதை விட, இயக்குநர் அவரிடம் இருந்து நல்ல நடிப்பை வாங்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். வழக்கமாக கிளைமாக்ஸ் காட்சியில் இதுதான் நடக்கப்போகிறது என நாம் அனைவரும் யோசித்து கொண்டு இருந்த நேரத்தில், இயக்குனர் படத்தினுடைய கிளைமாக்ஸ் காட்சியில் அதிரடியான ஒரு மாற்றத்தை கொண்டு வந்து, ஆடியன்சை ஷீட்டின் நுனியில் அமர வைத்துவிட்டார். இதற்கு முன் நாம் பல காவல்துறையினரை பற்றி திரைப்படங்களை பார்த்து இருந்தாலும் ஆயுதப்படையினர் பற்றியும், அன்றாடம் அவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன என்பதை இந்த திரைப்படத்தில் அழுத்தம் திருத்தமாக காட்டப்பட்டுள்ளது. இந்த வருடத்தினுடைய ஆரம்பம் மோசமாக இருந்தாலும், வருடத்தின் இறுதியில் சிறை ஒரு சிறப்பான படமாக வெளி வந்துள்ளது என செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications