யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.. குழந்தையோடு தெருவில் நின்னேன்.. நடன இயக்குநர் கண்ணீர் பேட்டி!
சென்னை: கேமரா மேனை காதலித்து திருமணம் செய்தேன், திருமணமான சில மாசத்திலேயே கர்ப்பமாக இருக்கும் போது நடுத்தெருவில் தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.ஆசை ஆசையாய் ஆரம்பித்த என் வாழ்க்கை அப்படியே நாசமா போச்சு என்று டான்ஸ் மாஸ்டர் விஜயலட்சுமி, தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவத்தை கண்ணீருடன் கூறியுள்ளார்.
டான்ஸ் மாஸ்டர் விஜயலட்சுமி யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் நான் பிரபல கேமரா மேன் சோட்டா கே நாயுடுவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நான் தாரா மாஸ்டரிடம் உதவி டான்ஸ் மாஸ்டராக இருந்தேன், அவர் அப்போது உதவி கேமிரா மேனாக இருந்தார். அவருக்கு கேமரா மேன் ஆக வேண்டும் என்பது ஆசை அதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போதில் இருந்தே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஐந்து வருடத்திற்கு மேலாக காதலித்து வந்தோம்.

டான்ஸ் மாஸ்டர்: அதன் பிறகு 1989ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம் அப்போது நான், கர்ப்பமாக இருந்தேன். அந்த நேரம் தெலுங்கு சீரியல் ஒன்றுக்கு கேமரா மேனாக சென்றார்.அந்த சீரியலில் நடித்த நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். எனக்கு குழந்தை பிறந்த போது கூட, அந்த பெண் அவரை பார்க்கவிடல, அவரை மொத்தமா அவரின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். ரஜினி நடித்த பாபா படத்திற்கு அவர் தான் கேமரா மேன், அதற்காக சென்னை வந்த போதும், கூட அவரை தனியாக விடாமல்,கூடவே அந்த அம்மாவும் வந்தாங்க.
வாழ்க்கையில் புயல் அடித்தது: அவருக்கு நடிகையுடன் பழகும் விஷயம் தெரிந்து அவரிடம் கேட்டேன், முதலில் இல்லை என்று மறுத்தவர் பின், ஆமாம், நான் சினிமாவில் முன்னேற வேண்டும் அதற்காகத்தான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்று சொன்னார். சிறுவயதில் இருந்தே கஷ்டப்பட்டு,கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்த என் வாழ்க்கையில் மீண்டும் புயல் அடிக்க ஆரம்பித்து விட்டது. அதன் பிறகு வாழ்க்கையில் என்ன செய்வது என்றே தெரியாமல் உடைந்துவிட்டேன். எப்போது நான் பேசினாலும் கவலைப்படாதே நான் வருவேன் என்று தான் பேசுவார், இதனால் அவர் மீது எனக்கு நம்பிக்கை குறையல, ஆனால், என் குழந்தைக்கு நான்கு வயது இருக்கும் போது, இந்த பெண் எனக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து என்னையும் சோட்டாவையும் பிரித்து விட்டார்.
துரோகம் செய்து விட்டார்: என்னை காதலித்து கல்யாணம் பண்ணி,எனக்கு துரோகம் செய்துவிட்டு எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருந்தார். நான் பேசி பேசி ஓய்ந்து விட்டேன், அவரின் நண்பர்கள் கூட பேசினார்கள் ஆனால், அவர் என்னை மொத்தமாக மறந்துவிட்டார். இதுக்கு மேல் சரிப்பட்டு வராது என்று மீண்டும் சினிமாவில் என் பயணத்தை தொடங்கினேன். இவர் இப்போது பெரிய கேமரா மேனாக இருக்கிறார் இருந்த போதும், யாரிடமும் நான் அவர் மனைவி எனக்கு வாய்ப்பு கொடுங்க என்று நான் கேட்டதே இல்லை. இவரின் பெயரை சொல்லி எனக்கு வாய்ப்பு வந்தா என் திறமை செத்துப்போய்விடும். இதனால்,எந்த இடத்திலும் நான் அவரின் பெயரை சொன்னதே இல்லை கஷ்டப்பட்டு என் மகளை படிக்க வைத்து அவருக்கு கல்யாணமும் செய்து விட்டேன். நானே உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் ஒரு வீடு கட்டி இருக்கிறேன். எல்லாமே என் உழைப்பு தான்.
பொறந்ததில் இருந்தே கஷ்டம்: சின்ன வயதில் இருந்தே கஷ்டத்தை பார்த்து வளர்ந்தவள் நான், என் அம்மா அப்பா காதல் திருமணம் தான் செய்து கொண்டார்கள். மூன்று குழந்தைகள் இருந்த போது என் அப்பா அம்மாவை விட்டுவிட்டு போய்விட்டார். இதனால், என் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார்கள். ஒரு வேளை சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம்.அப்போது தான் சினிமாவில் க்ரூப்பாக நிற்பதற்கு ஆட்கள் தேவை என்று சொன்னார்கள், நானும் என் அம்மாவும் க்ரூப்ல நின்னோம் அதற்காக எங்களுக்கு 12 ரூபாய் சம்பளம் தந்தார்கள் அந்த பணத்தை கையில் வாங்கும் போது சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அதன் பிறகு தாரா மாஸ்டரிடம் உதவி டான்ஸ் மாஸ்டராக இருந்தேன் நான் சரத்குமார் நடித்த சூரியன் படத்தில் வரும் பதினெட்டு வயது இளம் மொட்டு மனது, மௌனராகம் படத்தில் வரும் ஓ ஹோ மேகம் வந்ததோ, இன்னிசை பாடி வரும் இந்த பாட்டுக்கு உருவம் இல்லை என பாடல்களில் க்ரூப் டான்சராக ஆடி இருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











