Delhi Ganesh Exclusive - பள்ளிகளில் சாதி சண்டை.. இப்ப வர படங்கள்தான் காரணம்.. டெல்லி கணேஷ் ஆதங்கம்
சென்னை: Delhi Ganesh (டெல்லி கணேஷ்) பள்ளிகளில் சாதி சண்டை வருவதற்கு இப்போது வரும் படங்கள்தான் காரணம் என்று நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்திருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஆதிக்க சாதியை சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த சின்னத்துரை என்ற மாணவரை பள்ளியில் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். அதனை தாங்க முடியாத சின்னத்துரை இனி தன்னால் பள்ளிக்கு செல்ல முடியாது என தனது தாயிடம் கூற; அவரது தாயோ பள்ளியில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். அதனையடுத்து தலைமை ஆசிரியர் அந்த நான்கு பேரையும் அழைத்து எச்சரித்து அனுப்பினார்.

சாதி வெறி: சாதி வெறியும், ஆதிக்க வெறியும் ஊட்டி வளர்க்கப்பட்ட அந்த நான்கு பேரும்; சின்னத்துரையின் வீடு புகுந்து அவரையும், அவரது தங்கையையும் சரமாரியாக வெட்டினார்கள். தடுக்க வந்த சின்னத்துரையின் தாத்தாவை தள்ளிவிட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. சாதிகள் இல்லையடி பாப்பா என்று எழுதியவர் பிறந்த மாநிலத்திலேயே பள்ளி சிறுவர்கள் சாதி வெறியோடு இப்படி செய்திருப்பது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லி கணேஷ் பேட்டி: இந்நிலையில் டெல்லி கணேஷ் வான் மூன்று படம் குறித்து தமிழ் ஃபில்மிபீட்டுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், " பள்ளி, கல்லூரிகளில்கூட சாதி சண்டை வருகிறது. பீஸ் பீஸாக வெட்டிக்கொள்கிறார்கள். மாணவர்கள் எல்லாம் அரிவாளை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு போகிறார்கள். இது எப்படி உள்ளே வந்தது. சினிமா சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும். அன்பு, பாசம், நேசம், ஒற்றுமை உள்ளிட்டவைகளை படங்களில் பேச வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு வேறு எதையோ காண்பிக்கிறார்கள்.
பயமாக இருக்கிறது: படங்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது. அதுபோன்ற படங்கள் நிச்சயம் ஓடும். ஏனென்றால் ஒரு க்ரூப் படம் எடுக்கும். அதை பார்த்து இன்னொரு க்ரூப் கோபப்பட்டு அது ஒரு படம் எடுக்கும். அதில் இவர்களை தாக்கி எடுப்பார்கள். அப்படியெல்லாம் தாக்கவே கூடாது. அனைவருமே ஒன்றுதான். எல்லோருக்குமே சர்வைவல் முக்கியம்தான். என்னிடம் ஒருவர், நீங்கள் ஏன் எல்லோரிடமும் உட்கார்ந்து சாப்பிடாமல் தனியாக உட்கார்ந்து சாப்பிடுகிறீர்கள் என கேட்டார்.
சார் நான் சைவம்: அதற்கு நான் சொன்னேன். சார் நான் சைவம். அதனால்தான் தனியாக உட்கார்ந்து சாப்பிடுகிறேன். அதில் உங்களுக்கு என்ன வந்தது என்று கேட்டேன். மேலும், ஏன் சார் உதவி இயக்குநர்கள், கேமராமேன் என எல்லோரும் செட்டில்தானே இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டியதுதானே. எதற்காக தனியாக சென்று சேர் போட்டு சாப்பிடுகிறீர்கள்.
அனைத்தையும் மாற்ற வேண்டும்: ஏனா தான் ஒரு இயக்குநர். தனித்துவமானவன்னு நீங்க நினைக்கிறீங்க. உங்களுக்கு இப்படி இருக்கும்போது இன்னொருத்தனுக்கு அது இருக்காதா. நீங்கள் முதலில் எல்லோரிடமும் அமர்ந்து சாப்பிடுங்கள் என சொல்லிவிட்டேன். எல்லோரும் ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு அதை ஃபாலோ செய்யமாட்டார்கள். நல்ல கதைகள் ஏராளமாக இருக்கின்றன. அதையெல்லாம் படமா எடுக்கணும். சினிமா இன்ஸ்டஸ்ட்ரியவே மாற்ற வேண்டும்.""என்றார்.
வான் மூன்று ஆந்தாலஜி சினிமாவானது மூன்று தலைமுறைகளின் காதலை சொல்வது போல் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனை ஏ.எம்.ஆர்.முருகேஷ் என்பவர் இயக்கியிருக்கிறார். படமானது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











