Dhanush: மேகங்களைப் பார்த்து அடுத்து நடப்பதைச் சொன்ன தனுஷ்.. கர படபிடிப்புத் தளத்தில் நடந்த சுவாரஸ்யம்
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் தனுஷ் உடன், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் ரிலீஸ் ஆன இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில், படத்தின் இயக்குநர் தீவிரமாக புரோமோஷன் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் விக்னேஷ் ராஜா கூறுகையில், " போர் தொழில் படம் முடிந்த பின்னர் தனுஷ் சார் என்னைக் கூப்பிட்டு, உங்களிடத்தில் எனக்கான கதை எப்போது இருந்தாலும் உடனே கூப்பிடுங்கள் என்று கூறி இருந்தார். அப்போது என்னிடத்தில் சில நடிகர்களும் தயாரிப்பாளர்களும் அவர்களுக்கு அடுத்த படம் செய்ய அழைத்தனர். ஆனால் நான் போகவில்லை. காரணம் தனுஷ் சார் தான்.
கர படத்தின் கதையை நான் தனுஷ் சாரிடம் சொன்ன பின்னர் அவர் என்னிடத்தில், கதை நன்றாக உள்ளது, ஆனால் கொஞ்சம் நெகடிவாக போவதாக உள்ளது. அதை கொஞ்சம் யோசியுங்கள், அதை மாற்ற முடிந்தால் மாற்றுங்கள், இல்லை என்றாலும் பரவாயில்லை, நாம் இந்த கதையை அப்படியே படமாக்கலாம் என்று கூறினார். தனுஷ் சார் சொன்ன இந்த கருத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதனால் நான் அதில் மட்டும் கொஞ்சம் மாற்றம் செய்தேன், அதுதான் கர.

முதல் அசிஸ்டண்ட்: படப்பிடிப்பில் ஒரு நாள் என்னிடத்தில் தனுஷ் சார் சொன்ன ஒரு விஷயம் ரொம்பவும் முக்கியமானது. அதாவது, விக்னேஷ் என்னை உங்கள் படத்தின் முதல் அசிஸ்டண்ட் என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை என்னிடத்தில் கூறுங்கள், உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் குழப்பம் ஏற்பட்டாலும் ஷேர் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

மேகங்களைப் பார்த்து: அதேபோல் ஒரு நாள் படப்பிடிப்பின் போது, என்னைக் கூப்பிட்டு, விக்னேஷ் இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த மேகங்கள் எல்லாம் விலகிவிடும், நாம் ஏன் இப்போது அந்த காட்சியை எடுத்துவிடலாமா என்று என்னிடத்தில் கேட்டார். நானும் சரி என்று சொன்னேன். அவர் சொன்னது போல மேகம் விலகியது, சூரியன் மிக அழகாக தெரிந்தது, அதில் தான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கினேன். தனுஷ் சார் எப்படி மேகங்கள் விலகும் என்று சொன்னார் என்று எனக்கு இப்போது வரை ஒன்றுமே புரியவில்லை" என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். விக்னேஷ் ராஜாவின் இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications