டாஸ்மாக்ல குடிச்சாலும் சரி.. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல குடிச்சாலும் சரி.. தினந்தோறும் நாகராஜ் பளிச்!
சென்னை: சினிமா பிரபலங்களுக்கு அளவுக்கடந்த பெயரையும் பணத்தையும் புகழையும் ஒரு படத்தின் வெற்றியிலேயே கொடுத்து விடும். ஏகப்பட்ட பார்ட்டிகளுக்கு பலர் அழைப்பார்கள். ஆனால், சினிமாவை மட்டும் நேசித்தால் மட்டுமே தொடர்ந்து அதில் நீடிக்க முடியும். பணத்தின் பின்னாலும், குடி போதை பின்னாலும் சென்றால் என்னை போலத்தான் அழிந்து போவீர்கள் என தினந்தோறும் நாகராஜ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
1998ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13ம் தேதி வெளியான தினந்தோறும் படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர் தான் நாகராஜ். முரளி, சுவலக்ஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அந்த காதல் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. தெலுங்கில் ரீமேக் செய்த அந்த படம் அங்கேயும் வசூல் வேட்டை நடத்தியது.

ஆனால், அந்த படத்திற்கு பிறகு நாகராஜ் அடுத்த படத்தை இயக்குவதற்கு முன்னால் சினிமாவில் இருந்து காணாமல் போக காரணமே குடி பழக்கம் தான்.
ஆக்ஷன் மட்டும் தான் சொல்ல தெரியும்: ஆரம்பத்தில் எதுவுமே தெரியாமல் சினிமாவை இயக்க வந்தேன். ஆனால், திரைக்கதை முழுவதும் இயக்கிய நிலையில், சினிமா தெரிந்த கேமராமேனை படத்தில் போட்டு தினந்தோறும் படமெடுத்தேன். ஆக்ஷன் மட்டும் தான் சொல்லத் தெரியும், கிளாப் போர்ட், லைட்ஸ் ஆன், கேமரா ரோலிங் மற்றும் கட் என்பது கூட சொல்லத் தெரியாது. முரளி சார் முதல் நாளில் தடுமாறும் போது என்னிடம் வந்து அதெல்லாம் பிரச்சனை இல்லை. இங்கே எல்லாருமே எல்லாமே தெரிந்து கொண்டு வரவில்லை. போக போக உங்களுக்கு புரிந்து விடும். உங்கள் மனதில் உள்ள படத்தை நல்லபடியா எடுங்க என ஊக்கம் கொடுத்தார். அவரால் தான் அந்த படத்தின் இயக்குநராகவே நான் ஆனேன் என்றார்.
மின்னலே, காக்க காக்க வசனகர்த்தா: தினந்தோறும் படத்திற்கு பிறகு 2013ம் ஆண்டு மத்தாப்பு எனும் படத்தை இயக்கி இருந்தார். கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே, காக்க காக்க படங்களுக்கு இவர் தான் வசனகர்த்தா என்பது கூடுதல் தகவல். விஜய், சூர்யா, அஜித் குமார் உள்ளிட்ட பிரபலங்களே தனது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என கேட்டனர். ஆனால், கொழுப்பால் எல்லாத்தையும் கோட்டை விட்டேன் என பேசியுள்ளார்.
குடி குடும்பத்தையே அழிச்சிடும்: டாஸ்மாக்ல குடிச்சாலும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல குடிச்சாலும் குடி குடும்பத்தையே அழிச்சிடும். ரோட்டுல குடிச்சிட்டு ஒருத்தன் விழுந்து கிடந்தான்னா அது ஒருத்தன் இல்லை ஒரு குடும்பமே விழுந்து கிடக்குதுன்னு அர்த்தம். முதல் படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து குடிக்க ஆரம்பித்தேன். அதனால், என் கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. ஓரமா உட்கார்ந்து கதையெழுதிடலாம். ஆனால், ஒரு படத்தை கம்பீரமா எழுந்து நின்று டைரக்ட் பண்ண வேண்டும் என்றால் கையெல்லாம் நடுங்கக் கூடாது என பேசியுள்ளார்.
புதிய படம்: ஒரு கட்டத்துக்கு மேல் இதையெல்லாம் விட்டு ஒழித்து விட வேண்டும் என நினைத்தேன். இப்போ மீண்டும் வந்து உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன் என தினந்தோறும் நாகராஜ் பேசியுள்ளார். க்யூ சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தை தற்போது இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு சத்யா இசை அமைக்கிறார். அசோக்குமார் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் வெளியாகும் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











