அரசன் படமாவது டிராப் ஆகாமல் ரெடியாகுமா?.. வெற்றிமாறனுக்கும் சிம்புவுக்கும் சண்டையா?.. தனஞ்செயன் பளிச்!
சென்னை: கடைசியாக சிம்பு ஹீரோவாக நடித்து வெளியான படம் என்றால் அது 2023ம் ஆண்டு வெளியான பத்து தல படம் தான். ஆனால், அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. அதற்கு முன்னதாக வெளியான வெந்து தணிந்தது காடு படமும் சுமாராகத்தான் ஓடியது. கடைசியாக சிம்புவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மாநாடு மட்டுமே.
கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷாவுடன் இணைந்து நடித்த தக் லைஃப் திரைப்படம் என்ன ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதன் பிறகு சிம்பு தனது பிறந்தநாளை முன்னிட்டு வரிசையாக படங்களின் அப்டேட்களை வெளியிட்டார்.

ஆனால், அதில், ஒரு படம் கூட ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்த படத்திலும் தற்போது பிரச்னை வெடித்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர் தனஞ்செயன் அதுதொடர்பாக பேசியுள்ளார்.
சிம்புவுக்கும் வெற்றிமாறனுக்கும் சண்டையா?: 2023ல் இருந்து கிட்டத்தட்ட சிம்பு ரசிகர்கள் அவரது சோலோ ரிலீஸ் படத்துக்காக காத்திருக்கின்றனர். அரசன் படத்தின் புரமோ வீடியோவை பார்த்தே ஃபயர் விட்டனர். சிம்புவின் பிறந்தநாள் கடந்த பிப்ரவரி 3ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், பெரிதாக எந்தவொரு கொண்டாட்டமோ அப்டேட்டோ இல்லை. சிம்புவே மறுநாள் கடமைக்காக ஒரு ட்வீட் மட்டுமே போட்டிருந்தார். சிம்புவுக்கும் வெற்றிமாறனுக்கும் சண்டை என்றும் சிம்பு படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் அமெரிக்காவில் உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

தனஞ்செயன் சொன்ன விஷயம்: வழக்கமாக வெற்றிமாறன் படங்கள் என்றாலே இதுபோன்ற பேச்சுக்கள் வரத்தான் செய்யும். அதிலும், இந்த முறை சிம்பு நடிக்கிறார் என்கிற நிலையில், இன்னமும் பஞ்சாயத்து பெரிதாகிறது. இருவருக்கும் சண்டையெல்லாம் கிடையாது. வெற்றிமாறனின் வொர்க்கிங் ஸ்டைலே தனி. அவர் பொறுமையாக ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறார். சீக்கிரமே அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் அரசன் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகபட்சம் வெளியாக வாய்ப்புகள் இருக்கு என சிம்பு ரசிகர்களை சாந்தப்படுத்தியுள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து படம்: டிராகன் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் பிறந்தநாள் வாழ்த்துடன், அடுத்து நம்ம படம் தான் தலைவா என்றும் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கிற மாதிரி ஒரு படமாக இருக்கும் என்றும் ஆங்கில 'I' எழுத்தில் படத்தின் தலைப்பு ஆரம்பமாகும் என க்ளூ கொடுத்தார். பிரெண்ட்ஸ் படத்தில் விஜய் பேசும் 'ல்தாகசைஆ' (காதல் ஆசை) டைட்டிலாக வைத்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். கூடிய சீக்கிரமே அரசன் படத்தை முடித்து விட்டு சிம்பு அந்த படத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











