ரசிகர்களை குறை சொல்லவேமாட்டேன்.. நல்ல படங்களை கொண்டாடுவார்கள்.. அமீர் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அமீர். தான் இயக்கும் ஒவ்வொரு படத்தையும் எந்தவித சமரசமுமின்றி ரசிகர்களுக்கு கொடுப்பவர். முக்கியமாக அவர் இயக்கிய ராம், பருத்திவீரன் ஆகிய படங்கள் கல்ட் க்ளாசிக்காக இருப்பவை. அதிலும் பருத்திவீரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை. இப்போது அவர் உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் பில்ம்பீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார் அவர்.
சேது, நந்தா ஆகிய படங்களில் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சூர்யாவை புதுவிதமாக காண்பித்து காதல் ஜானரில் அந்தப் படத்தை இயக்கி வெற்றி பெற்றார் அமீர். அதனையடுத்து அவர் இயக்கிய ராம் படத்தின் மூலம் அவரே தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். அப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வணிக ரீதியாக போதிய ரெஸ்பான்ஸை பெறவில்லை.

பருத்திவீரன்: மூன்றாவது படமாக பருத்திவீரனை இயக்கினார். கார்த்தியின் முதல் படமான அது இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. கார்த்தியுடன் ப்ரியாமணி,சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டாகி ப்ரியாமணிக்கு தேசிய விருதையும் கார்த்திக்கு சிறந்த அறிமுகத்தையும் பெற்று கொடுத்தது.
நடிகர்: அவர் தற்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். வடசென்னையில் அவர் ஏற்றிருந்த ராஜன் கதாபாத்திரம் அதிக அளவில் கொண்டாடப்பட்டது. வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அமீர். மேலும் அவரே தயாரித்து நடித்திருக்கும் மாயவலை படமும் ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே ஆதம் பாவா இயக்கத்தில் உயிர் தமிழுக்கு என்ற படத்திலும் நடித்திருக்கிறார் அவர். படம் மே 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
பிரத்யேக பேட்டி: சூழல் இப்படி இருக்க அவர் பில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், 'உயிர் தமிழுக்கு என்ற டைட்டில் என்னுடைய வேறு கதைக்காக வைத்திருந்தேன். ஆனால் இந்தக் கதைக்கு செட் ஆனதால் கொடுத்துவிட்டேன். கண்டிப்பாக இந்தப் படம் பலரையும் கவரும்' என்றார். பிறகு , நல்ல படங்கள் கொண்டாடப்படுவதில்லையா என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.
அமீரின் பதில்: அதற்கு பதிலளித்த அவர், "எப்போதுமே நான் ரசிகர்கள் மீது பழி போட மாட்டேன். அவர்கள் நல்ல படத்தை தோற்கடித்ததே இல்லை என்பதுதான் உண்மை. அந்த நல்ல படம் அவர்களை முழுமையாக திருப்திப்படுத்தியிருக்காது. சொல்லப்போனால் அன்பே சிவம், மகாநதி, குணா போன்ற படங்கள் இப்போது கொண்டாடப்படுகின்றன. அதற்கு என்ன காரணம் என்றால் அந்தப் படங்கள் ரிலீஸானபோது ரசிகர்களின் எதிர்பார்ப்பும், படமும் ஒரு புள்ளியில் இணையவில்லை.
உதாரணமாக அன்பே சிவம் படத்தில் வேறு ஒன்றை எதிர்பார்த்து சென்றிருப்பார்கள். ஆனால் அதில் நிறைய கிளை கதைகள் இருந்ததாகத்தான் நான் பார்க்கிறேன். அதற்காக அன்பே சிவம் கெட்ட படம் என்று இல்லை. இப்போது அந்தப் படத்தை பார்த்தால், அட இந்த சீன் நல்லா இருக்கே அது நல்லா இருக்கே என்று கொண்டாடுகிறோம். அப்படித்தான் இதனை பார்க்க வேண்டும். குணா படத்தின் ரெஃபரன்ஸை வைத்த மஞ்சும்மல் பாய்ஸ் மெகா ஹிட்டானதை நாம் பார்க்கத்தானே செய்தோம். மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு ஆகிய படங்களில் எந்த ஹீரோயிச காட்சிகளும் இல்லை.
ஆனால் தமிழ் சினிமாவில்தான் ஒரு ஹீரோவை ஆகாயசூரனாக காண்பிக்கிறார்கள். அது மக்களிடம் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை. இந்த ஹீரோயிச காட்சிகள் இல்லாததால்தான் மலையாள சினிமாக்கள் தொடர்ந்து ஹிட்டடித்துக்கொண்டிருக்கின்றன. அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











