இந்தி எதிர்ப்பு போராட்டம்.. தீக்குளித்த தமிழ் ஆசிரியர்.. பராசக்தி படம் உண்மையை சொல்லுமா? பிரபலம்!
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள பராசத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜனவரி 10ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இயக்குநரும், நடிகருமான கௌதமன், Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளிவர இருக்கிறது. அவர்களுக்கு வள்ளுவர் கோட்டத்தில் என்ன வேலை? வள்ளுவர் கோட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியதாக கதையில் சொல்லி இருக்கிறார்கள். அந்த படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட்டு இந்த அரசு பெயர் வாங்க முயற்சி செய்கிறார்கள். இதில் இருந்தே அவர்களின் நோக்கம் என்ன என்பது நன்றாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் இந்தி எதிர்ப்பு வரலாற்றை மடைமாற்றி, தவறாக பொன்னியின் செல்வன் படத்தை போல சிக்கலை உருவாக்கினால், உலகத்தில் உள்ள எந்த தமிழர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்.

பராசக்தி: ஏனென்றால் எனக்குத் தெரிந்து பராசக்தி திரைப்படத்தில் வரும் செழியன் என்ற கதாபாத்திரம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இல்லவே இல்லை. அப்படி ஒரு பெயர் அந்த போராட்டத்தில் இடம் பெறவில்லை. உண்மையான இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றியது தான் பராசக்தி படத்தின் கதை என்றால், உண்மையில் என்ன நடந்ததோ அதை சொல்லுங்கள். ஆனால் வரலாற்றை மடைமாற்றி தவறாக இன்றைய தலைமுறையினரிடம் சொல்லக்கூடாது.
தமிழ் ஆசிரியர் தீக்குளித்தார்: இந்தி போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் துணை ராணுவ படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் மாணவர்கள். ஒரு தமிழ் ஆசிரியர் உடல் முழுக்க வெட்டியை சுற்றிக்கொண்டு, தலையில் எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தமிழ் மொழியை காப்பாற்றுங்கள், இந்தி என்கிற பேயை விரட்டுங்க என்று தீக்குளிக்கிறார். அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற ஓடுகிறார்கள். ஆனால், அவர் மூச்சு நிற்கும் கடைசி நேரத்தில், இதற்குமேல் என்னை காப்பாற்ற முடியாது. இனிமேலாவது நம் மொழியை காப்பாற்றுகள் என்று சொல்லிவிட்டு உயிரிழந்தார். பராசக்தி படத்தை எடுத்தவருக்கு இந்த வரலாறு தெரியுமா? இந்த காட்சியை அவர்களால் எடுக்க முடியுமா? தமிழுக்காக உயிர்விட்ட தமிழ் ஆசிரியர் ஒரு தமிழர் என்பதை அவர்களால் சொல்ல முடியுமா? பராசக்தி படத்தை எடுத்த அனைவரும் யார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு மொழி மீதோ, இனத்தின் மீதோ பற்று இல்லை.

நேர்மையற்ற வேலை: 1963 கால கட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியவர்கள் மாணவர்கள் தான். திமுக போராடவில்லை, திராவிடம் போராடவில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டம் கொளுத்துவிட்டு எரிந்து, பல பேர் உயிரிழந்த போது தான், திமுக நாங்கள் இந்த போராட்டத்தை கையில் எடுத்துக்கொள்கிறோம், எங்களை நம்புங்க, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியை உள்ளேவிடமாட்டோம் என்று சொல்லி இந்தி போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள். அன்றிலிருந்து தற்போது வரைக்கும் ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால், தமிழ் நாட்டில் இருக்கும் அரசு பள்ளியில் எங்களின் தமிழ் எங்கே, இப்போது பல அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தான் இருக்கிறது. இத்தனை வருட காலம் அவர்கள் தமிழ் மொழிக்காக என்ன செய்தார்கள். இப்போது எதற்காக பராசக்தி படத்தை எடுக்கிறார்கள், இந்த படம் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட உள்ளது. அதில், உயிர் தமிழுக்கு என்று வசனம் வருமா... இல்லை உயிர் தெலுங்கு என்று சொல்வார்களா? இந்தி எதிர்ப்பு போராட்டமே நடக்காத இடத்தில் தமிழ் நாட்டில் இப்படி நடந்தது என்று தானே சொல்ல வேண்டும். இது நேர்மையற்றது மட்டுமில்லாமல், வரலாற்றை குழி தோண்டி புதைக்கும் வேலை என்று கௌதமன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











