அவனைக் கொல்ல எனக்கு ஒரு நொடி போதும்.. ஆனால் பொழச்சு போகட்டும்னு விட்டுட்டேன்.. மாரி செல்வராஜ் ஓபன்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குநராக உள்ளார். கமர்ஷியல் படத்தில் தீவிரமான அரசியல் பேசுகிற இவரது திரை மொழி தனி தன்மை கொண்டதாக உள்ளது. இவர் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய வேர்ச்சொல் தலித் இலக்கிய கூடுகையில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பேசினார். அதில் அவர் பகிர்ந்து கொண்டவை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
அவர் பேசும்போது, " பிரான்ஸ் நாட்டில் பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்தவர்கள், இந்த படம் கருப்பினத்தவர்களின் படத்தை போல் உள்ளது என மிகவும் எமோஷனலாக கூறினார்கள். பரியேறும் பெருமாள் அங்கு தமிழில்தான் திரையிடப்பட்டது. சினிமா என்பது மாற்று ஊடகம் என்பது எனக்குப் புரிகிறது. அதில் விஷுவல் என்ற மொழி உள்ளது. இந்த உலகத்தில் மொழி அற்றவனும், காது இல்லாதவனும் தனது கண் வழியாக படத்தை பார்த்து உணர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நான் உலக சினிமாக்கள் பார்க்கும்போது எனக்கு சப்-டைட்டில் எதுவும் எனக்கு புரியாது. எனது இயக்குநர் ( இயக்குநர் ராம்) என்னை அனைத்து படங்களையும் ஓடவிட்டுப் பார். படத்தை மொழியின் வழியாக புரிந்து கொள்வது என்பது ஒரு முறை, காட்சிகளின் வழியாக புரிந்து கொள்வது என்பது ஒரு முறை. காட்சிகளின் வாயிலாக, புரிந்து கொள்கிற எமோஷ்னல், கதை மற்றும் அரசியல் ஆகியவை உனக்குள் இருக்கும். அது நாளாக நாளாக எது சரி எது தவறு என்பதை உணர்த்தும் எனக் கூறினார். அதன் பின்னர்தான் நான் படங்களை அப்படி பார்க்க ஆரம்பித்தேன்.
மாரி செல்வராஜ்: மாமன்னன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கூட ரத்தனவேல் கண்களை மூடியதும், அவரது மனதில் அம்பேத்கரின் குரல் ஒலிக்க வேண்டும் எனக் கூறினேன். அதற்கு உதயநிதி, அம்பேத்கர் புகைப்படம் திரையில் வருவது போல காட்சி வைக்கலாம் எனக் கூறினார். ஆனால் நான், வேண்டாம் எனக் கூறினேன். காரணம் அது யாருடைய குரல் என்பதை அவர்கள் தேடட்டும் எனக் கூறினேன். மேலும் கிளைமேக்ஸில் எதுவும் நடக்க வேண்டாமா என்று உதயநிதி கேட்டார்.

ஒரு நொடி: அதாவது ரத்தினவேலை கொல்ல வேண்டாமா எனக் கேட்டார். ரத்தனவேலைக் கொல்வது எனது நோக்கமல்ல. அவனைக் கொல்ல எனக்கு ஒரு நொடி போதாது. மாமன்னன் படத்தின் இயக்குநர், கதாசிரியர் என எல்லாம் நான்தான். நான் நினைத்திருந்தால் ரத்தினவேலை ஒரு நொடியில் கொன்றிருக்க முடியும். ஆனால் கமல் சார் சொல்வதைப் போல தான் பொழச்சு போ என விட்டுவிட்டேன். இந்த படம் முடியும் போது ரத்தனவேல் பாதிக்கப்பட்டவனாக மாறவேண்டும் என நினைத்தேன்.

அறம்: நீ எவ்வளவு மோசமாக இருக்கிறாய் என்பதைப் பாரு என்பதை அவனுக்கு உணர்த்த நான் முயற்சி செய்தேன். கலையின் அறம் என்பது ஒரு மனிதனின் வாழ்வின் கடைசி நொடி கூட அவனுக்கு எது அறம் எனக் கற்றுக் கொடுக்கும் திறன் படைத்தது கலை. அப்படியான நம்பிக்கையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்தான் ரத்தினவேலு" என பேசியுள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம், பைசன். இந்த படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.
பொறுப்பு: தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ், “தொடர்ந்து அவர் பேசுபோது, திருநெல்வேலியில் மாரி செல்வராஜ் மட்டுமே இல்லை அல்லவா? அங்கு கர்ணன் இருக்கிறார். அவன் கதையையும் சொல்ல வேண்டும். பரியேறும் பெருமாள் இருக்கிறான் அவன் கதையையும் சொல்ல வேண்டும். பைசன் காளமாடன் இருக்கிறான் அவன் கதையையும் சொல்ல வேண்டும். அந்த மண்ணில் இருந்து நான் மட்டும்தானே வந்துள்ளேன்.எனவே அவர்களின் கதையையும் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. நான் எனது கதையை மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டால், என்னடா உன் கதையை மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டாய்? எனக் கேள்வி கேட்பார்கள்.
கதை: கல்லூரியில் இருந்து ஓடிப்போன உன் கதையைச் சொன்னாயே, அந்த ஊரை நான் திருப்பி அடித்தேனே, அந்தக் கதையை ஏன் சொல்லவில்லை என்ற கேள்விக்குத்தான் கர்ணன் எடுக்கிறோம். பரியேறும் பெருமாள் நான் என்றால் கர்ணன் இன்னொருவர். கர்ணன் சண்டை போட்டான் என்றால் பைசன் இன்னொருத்தன். அவர்கள் எனக்கு தென்பட்டுக் கொண்டே உள்ளார்கள். எனக்கு ஸ்பேஸ் கிடைத்து என்கதையை மட்டுமே சொல்வது என்பதும், என் கண்முன்னே தெரிகின்றவர்களின் போராட்டம், வேதனை, சாதனை, அவர்களின் கிளர்ச்சியை நான் சொல்ல வேண்டும் அல்லவா?
நகர்வு: ஒரு நிலத்தில் இருந்து அனைத்தையும் என் பார்வையிலேயே பார்ப்பதால் உங்கள் அனைவருக்கும் இது ஒரே இடத்தில் இருந்து வருவதுபோலத் தெரியும். ஆனால் இவர்கள் அனைவரும் வேறு வேறு மனிதர்கள், ஒரு பிரச்னைக்கு இவர்களின் நிலைபாடுகள் மாறுகிறது. பரியேறும் பெருமாள் எடுத்த நிலைப்பாட்டை கர்ணன் எடுக்கவில்லை. கர்ணன் எடுத்த நிலைப்பாட்டை மாமன்னன் எடுக்கவில்லை. இவர்கள் எடுத்த நிலைப்பாட்டை பைசன் எடுக்க மாட்டான். இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்து முன்னே நகர்ந்துள்ளார்கள். இந்த நகர்வு முக்கியமானது என நான் நினைக்கிறேன்.
நிலைப்பாடு: இவர்கள் அனைவரும் வேறு வேறு கதைகளுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் ஒரே வாழ்வுக்குட்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் எடுத்த நகர்வும், நிலைப்பாடும் வேறு வேறு. பரியேறும் பெருமாளின் பார்வை வேறு, கர்ணனின் பார்வை வேறு, மாமன்னனின் பார்வை வேறு, பைசனின் பார்வை வேறு. இவர்கள் அனைவரின் பார்வையையும் சொல்ல வேண்டும். அவை இன்னும் தீரவில்லை. கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். இவர்களின் நோக்கமும் சென்று அடைய நினைக்கும் இடமும் ஒன்றுதான். ஆனால் இவர்கள் செல்லும் பாதையும் அதில் எதிர் கொள்ளும் இடையூறுகளும் வேறுவேறு.
பாதை: எனது பரியேறும் பெருமாள், கர்ணன், மாமமன்னன் ஆகியோர் எந்தெந்த பாதையை தேர்வு செய்து அந்தந்த இடத்திற்கு வந்தார்கள் என்பதுதான் முக்கியம். வாழை படம் அப்படி எடுக்கப்பட்டதுதான். வாழை ஏன் எடுத்தேன் என்றால், எனது வேரை, மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வாழை படத்தைப் பார்த்தவர்கள் என்னிடம் வேறு ஒரு தன்மையில் பேசுகிறார்கள்" என பேசினார். இவரது பேச்சு பலரது மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











